முஸ்லிம்களும் தமிழர்களும் முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதை விடவும் உடன்பாடுகளை முதன்மைப்படுத்த வேண்டும்- அய்யூப் அஸ்மின்
2013 வடமாகாணசபைத் தேர்தலில் ஆளும் தரப்பிற்குத் தெரிவுசெய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட 4 உறுப்பினர்களையும் வரவேற்று கௌரவிக்கின்ற நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (05.11.2013) வட்டக்கண்டல் தமிழ் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் தனது உரையில்,
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகின்றபோது நாங்கள் கூறிய கருத்துக்களை மக்களாகிய நீங்கள் செவியேற்று, எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு வாக்களித்தீர்கள். அதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. இது ஒரு வரலாற்று வெற்றியாகும். இதனை நாம் “மக்களின் வெற்றி” என்றே அடையாளம் செய்கின்றோம். இப்போது இது உங்களின் நேரம், நீங்கள் கூறுகின்றவற்றை, உங்களின் தேவைகளை, உங்களின் அபிலாஷைகளை நாம் கேட்டு நிற்கின்றோம், மக்களாகிய நீங்கள்தான் எங்களை வழிநடாத்த வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்குப்போட்டதோடு உங்கள் கடமை முடிந்துவிடவில்லை என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
இந்த நாட்டில் உள்ள அரசியல் கலாசாரத்தின் பிரகாரம் தேர்தல் காலங்களில் மாத்திரம்தான் அரசியல் வாதிகள் மக்களோடு நெருக்கமாக இருப்பார்கள், தேர்தல் முடிந்துவிட்டால் அவர்களை மக்களால் நெருங்க முடியாது. ஆனால் புதிதாக அமைந்திருக்கின்ற வடமாகாணசபையில் அந்த நிலை இருக்கக்கூடாது. மக்கள் நேரடியாக தமது பிரத்நிதிகளூடாக அரசியலில் பங்கேற்க வேண்டும். எமது பிரதேசங்களின் தேவைகளை அடையாளம் செய்தல், முன்னுரிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பு அவசியப்படுகின்றது. இவ்வாறு நாம் அரசியலில் பங்கேற்காவிட்டால் “நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை” எம்மால் அடையமுடியாதுபோகும். எனவே மக்கள் தொடர்ந்தும் அரசியல் விழிப்புணர்வுடனும், பங்குபற்றுதலுடனும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
வடக்கு மண்ணில் தமிழ் முஸ்லிம் உறவு வெகுவாக வேண்டப்படுகின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையிலான உறவு பேணப்படுவது அவசியமாகும். அந்த அடிப்படையில் முஸ்லிம்களும் தமிழர்களும் எமக்கிடையேயான முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதை விடவும் எமக்கிடையிலான உடன்பாடுகளை முதன்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களிடம் ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டாகவேண்டும். நாம் நடைமுறையில் இருக்கும் எம்முடைய அரசியல் நடத்தைகள், அரசியல் ஒழுங்கு குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இப்போது முஸ்லிம்களுடைய அரசியல் முஸ்லிம் சமூகத்தை மோசமான இலக்குகளை நோக்கி நகர்த்துவதனை நாம் காணுகின்றோம். முஸ்லிம்களின் கௌரவம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது, முஸ்லிம்களின் மீது இருந்த நம்பிக்கை அற்றுப்போயிருக்கின்றது, ஏனைய சமூகத்தவர்கள் எம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றார்கள், இதனை நாம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். மோசமான அரசியல் ஒழுங்கில் இருந்து வெளியேறி நல்ல அரசியல் கலாசாரத்திற்குள் நாம் வந்தாக வேண்டும்.
நல்ல அரசியல் கலாசாரம் என்றால் என்ன? வாக்குகளை விலை பேசுவதும், எமது சமூகத்தின் நிலை குறித்து சரியான பார்வைகள் இல்லாமல், எமது சமூகத்தின் நன்மைகளை கருத்தில் கொள்ளாது, கட்சி வாதம், குழுவாதம், குடும்பவாதம், ஊர்வாதம் பேசுகின்ற அரசியல் நல்ல அரசியலாக இருக்க முடியுமா? இன்று கல்முனை மாநகர சபை முதல்வர் விடயம் பூதாகரமான ஒரு பிரச்சினையாக எழுந்திருக்கின்றது. இதுதான் மோசமான அரசியலின் விளைவு. நாம் ஒரு நல்ல அரசியலின்பால் உங்களை அழைக்கின்றோம். மக்களுக்கான அரசியல், மக்களின் நன்மைகளை முதனமைப்படுத்துகின்ற அரசியல், மக்களின் நலன்களுக்கான அரசியல், நல்லிணக்கத்தின் அடிப்படையில் அமைகின்ற அரசியல். நேர்மையான, வெளிப்படைத் தன்மையுடனான அரசியல். மிகவுமே எளிமையான அரசியல். இவ்வாறான ஒரு சிறப்பான அரசியலை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முன்னெடுப்போம்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அமைச்சரவை நியமனம் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த முரண்பாடுகளை பலரும் பலவிதமாக நோக்கினார்கள். ஒரு சில ஊடகங்கள் இதனைப் பயன்படுத்தி மக்கள் பெற்ற வெற்றியை கொச்சைப்படுத்தவும், மலினப்படுத்தவும் முயன்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுக்குநூறாக தகர்ந்துபோகும் என்றும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, மக்கள் ஒரு விடயத்தை மிகவும் நன்றாக உணர்ந்து கொள்தல் வேண்டும். தென்னிலங்கையின் அரசியல் கலாசாராத்தை எடுத்து நோக்குவோமாக இருந்தால் அங்கே பதவிகளுக்காக சண்டை பிடிக்கின்ற, வன்முறைகளில் ஈடுபடுகின்ற, முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன, ஏன் கொலை அச்சுறுத்தல் செய்கின்ற நடைமுறைகூட இருக்கின்றது. எனவே அத்தகைய தென்னிலங்கை கலாசாரத்தோடு வடமாகாணசபையின் அமைச்சரவை விவகாரத்தை ஒரு சில முடிச்சுப்போட நினைத்தார்கள்.
ஆனால் இதனை நான் வேறுவிதமாகவே நோக்குகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் இதுகுறித்து நான் கேட்டபோது அவர்கள் எனக்கு வழங்கிய பதிலில் இருந்துதான் நான் இதனைப் புரிந்துகொண்டேன். ஜனநாயக ஒழுங்கில் கருத்து முரண்பாடுகளை அங்கீகரிக்கின்ற, ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்வதற்கு இருக்கின்ற உரித்தை ஏற்று நடக்கின்ற பக்குவம் அவசியமாகின்றது. முன்வைக்கப்பட்ட கருத்துகள் அனைத்தினையும் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானதாகும். ஆனால் இறுதியில் மக்களுக்கும் கட்சிக்கும் எமது போராட்டத்திற்கும் ஏற்புடையதான நல்ல தீர்வு கிட்டும் என்று அவர்கள் எமக்கு குறிப்பிட்டார்கள்.
உண்மைதான்! இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாறான பல கருத்து முரண்பாடுகளை நாம் கண்டிருக்கின்றோம், அங்கெல்லாம் குறிப்பிடப்படும் ஒரு விடயம் இங்கும் பொறுத்தமாக இருக்கும் என்பதால் அதனை இங்கே குறிப்பிடுகின்றேன். “அறிஞர்களின் முரண்பாடு; மக்களுக்கு அருளாக அமைகின்றது” அதாவது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதன் பின்னர் வருகின்ற முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். கூட்டமைப்பிற்குள்ளும் அதுதான் நடந்தேறியது. மிகவும் பொறுத்தமானவர்கள் அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். எமக்கு அமைந்திருக்கின்ற 4 அமைச்சர்களும் மிகவுமே பொறுத்தமானவர்கள். அர்ப்பணத்துடன் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள்.
வன்னிக்கு இரு அமைச்சர்களும், கிளிநொச்சிக்கு ஒருவரும் யாழ்ப்பாணத்திற்கு ஒருவருமாக அமைச்சர்கள் நியமனம் பெற்றிருக்கின்றார்கள். வன்னி என்னும்போது அது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, என மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதுதான். இதில் இருக்கும் நல்ல தன்மைகளை அறிவுடையோர் கண்டுகொள்வார்கள். சிறுபுத்தியுள்ளோர் விமர்சித்து ஒதுங்கி நிற்பார்கள். எது எவ்வாறாயினும் கூட்டமைப்பின் முரண்பாடுகள் பிளவுக்கான அடையாளங்களாக நோக்கப்படக்கூடாது; மாற்றமாக அது நல்ல விளைவுகளுக்கான கருத்து வேறுபாடுகள், என்றே நோக்கபபடுதல் வேண்டும்.
கருத்துமுரண்பாடுகளின் பின்னால் அதனை மனதில் வைத்துப் பாராட்டி ஒத்துழைக்க மறுக்கின்ற போக்கு தவறானது, இதோ மேடையில் அண்ணன் டெனிஸ்வரன் அமைச்சராக அமர்ந்திருக்கின்றார், அவர் மிகவும் நல்ல மனிதர் விடயங்களை சிறப்பாக கையாளும் ஆற்றல் உடையவர், அதே போன்று அண்ணன் சிறாய்வா அவர்களும் இருக்கின்றார், அவரும் அமைச்சர்தான், அமைச்சுப்பொறுப்பை நிறவேற்றும் எல்லா ஆற்றல்களும் அவருக்கும் இருக்கின்றன, முதலமைச்சர் சிறாய்வா அவர்களுக்கு “சட்ட விவகாரங்களுக்கான பொறுப்புகளை” வழங்கியிருக்கின்றார். ஆனால் தனக்கு அமைச்சர் பதவி தரவில்லையே என்று தவறாக எண்ணி ஒத்துழைக்க மறுக்கின்ற, மக்களின் ஆணையினை மதிக்காது நடக்கின்ற போக்கு அவரிடம் கிடையாது. மாறாக சிறப்பாக செயலாற்றுகின்ற மக்களுக்காக உழைக்கின்ற நல்ல பக்குவத்தை நான் அவரிடம் காணுகின்றேன். இதேபோன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு இளம் அரசியல்வாதியும், மூத்த அரசியல்வாதிகளும் கருதுகின்றார்கள், இது ஒரு முன்மாதிரியான, கௌரவமான கட்சி என்பதற்கு இதனைவிட சிறப்பான உதாரணத்தைத் தரமுடியாது.
தமிழ் சமூகத்தின் அரசியல் ஒழுங்கில் “சுயநிர்ணய உரிமை” மற்றும் “தேசியம்” குறித்து பரவலாகப் பேசப்படுகின்றது. முஸ்லிம்களும் இத்தகைய விடயங்களில் தமது அறிவை அறிமுகத்தை அதிகப்படுத்திக்கொள்தல் வேண்டும். அபிவிருத்திகள் ஒருபுறம் நடந்தாலும் தமது சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல், எமக்கிருக்கின்ற அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், வாழக்கூடிய அரசியல் ஒழுங்கு குறித்து நாம் ஆராயவேண்டியிருக்கின்றது. எனவே அவ்வாறான ஒரு அரசியல் ஒழுங்கு குறித்து முஸ்லிம்கள் சிந்தித்து தீர்மானம் எடுப்பார்களேயானால் தமிழ் சமூகத்துடனான நல்லிணக்க அரசியல் மேலும் பலமுள்ளதாக மாற்றப்படும்.
என்னுடைய உரையை முடிக்க முன்னர், இந்த நாட்களில் எங்களுடைய பலரது உள்ளங்களில் கவலையினை அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு விடயம் குறித்து எனது கருத்தையும் பதியக் கடமைப்பட்டிருக்கின்றேன். பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா- அவரின் கைது, அவர்மீது நிகழ்ந்திருக்கும் என எண்ணப்படுகின்ற பாலியல் வன்புணர்வுகள், அவரது மரணம், தற்போது வெளியாகியிருக்கின்ற புதிய காணொளிகள், அவர் மரணித்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்; எல்லாம் ஊடகங்களில் பகிரப்படும் விதங்களைப் பார்க்கின்றபோது உள்ளம் வேதனையால் நிறைகின்றது. அதிலும் கொடுமை என்னவென்றால் அவரை வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல்தான் இன்னும் வேதனை தருகின்றது. கொடூர யுத்ததில் மாண்டது இசைப்பிரியா என்கின்ற ஒரு பெண் மாத்திரமல்ல, இன்னும் பலர், அதிகமான பொதுமக்கள் எல்லோரது நிலையும் ஒன்றுதான். எல்லோரையும் யுத்தம் துவம்சம் செய்திருக்கின்றது. எல்லோரது அவலங்களையும் எண்ணும்போது உள்ளம் அதீத வேதனையடைகின்றது. எல்லோரது இழப்புகளும், இறப்புகளும் ஒரு உண்மையை உலகிற்கு சொல்லி நிற்கின்றன அதுதான் "இந்த மண்ணில் அநீதம் அழிக்கப்பட்டு நீதம் நிலைநாட்டப்படவேண்டும்" என்ற செய்தியாகும். நீதம் நிலைநாட்டப்படுவதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம் என்ற வினா என்னுள் எழுகின்றபோது இசைப்பிரியாவைப் போன்று அநீதமிழைக்கப்பட்ட பலர் என் கண்முன் தெரிகின்றார்கள். நீதம் கிடைப்பதற்காய் முயற்சி செய். முன்னோக்கிச் செல். என்று நான் என்னுள் உறுதி எடுத்துக்கொள்கின்றேன். என்றார்.
இந்நிகழ்வில் மதகுருமார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்! மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முஸ்லிம்களும் தமிழர்களும் முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதை விடவும் உடன்பாடுகளை முதன்மைப்படுத்த வேண்டும்- அய்யூப் அஸ்மின்
Reviewed by NEWMANNAR
on
November 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment