வடகிழக்கில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி அவசியம்: ஒன்றியத்தின் தூதுவரிடம் முதலமைச்சர் தெரிவிப்பு
வடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுச்சிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் சர்வதேச நாடுகளின் குறிப்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவி அத்தியாவசியமானது என ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான விசேட தூதுவர் டேவிற் டெலியிடம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் மிக நீண்டகாலம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சிகள் மந்தகதியிலேயே இருந்து வருகின்றது.
எனவே இந்த விடயத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவி அத்தியாவசியமானது எனவும் ஏனைய சர்வதேச நாடுகளின் உதவிகள் மிக தேவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று வடக்கு முதலமைச்சரை அவரது இல்லத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரதிநிதகள் சந்தித்து பேசியிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வாறான உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறித்து அவர் எம்மிடம் விளக்கமாக தெரிவித்தார். அதன் பின்னரே எத்தகைய உதவிகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிந்தது.
குறிப்பாக அவர்கள் 20ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் 16ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுவிட்டன.
அந்தவகையில் எமது மக்களுக்காக மிக தாழ்மையுடன் அவர்கள் செய்துவரும் பணிகள் எமக்கு ஆச்சரியத்தினையும், வியப்பினையும் கொடுக்கின்றது.
எனவே அவர்களுடைய உதவிகள் தொடர்ந்தும் கிடைக்கவேண்டும் எமக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு ஐக்கியம் நிலவவேண்டும் என்பதனை நாம் கேட்டிருக்கின்றோம் என முதலமைச்சர் மேலும் கூறினார்.
வடக்கு ஆளுநர் மாற்றம் மற்றும் இராணுவ வெளியேற்றம் தொடர்பாக ஹெலிய ரம்புக்வல தெரிவித்திருக்கும் கருத்திற்கு பதிலடி கொடுக்கையில்,
நாம் விவாதம் நடத்தவரவில்லை. எமக்கு விவாதத்தில் நன்கு பரீட்சயம் இருக்கின்றது. ஆனால் போரினாலும், போரின் பின்னாலும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எமது மக்களே.
எனவே எங்களுடைய பிரச்சினைகள் என்ன, தேவைகள் என்ன என்பதை நாங்களே கேட்போம். அதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் ஜனாதிபதி.
ஆனால் அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் எங்களுடைய கருத்துக்களுக்கு அல்லது வேண்டுகோள்களுக்கு வியாக்கியானம் செய்வது பொருத்தமானதல்ல.
இராணுவம் எங்களுடைய நிலத்தில் தொடர்ந்தும் இருப்பதால் எங்களுடைய அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகின்றது. இராணுவம் சார்ந்த ஒருவர் ஆளுநராக இருப்பதல் எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே இந்த கருத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர அதனை தங்களுக்கு எதிரான கருத்தாக அல்லது நிலைப்பாடாக எடுத்து வியாக்கியானம் செய்வது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதொரு விடயமல்ல என்பதை நாம் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
இதேவேளை, பொதுநலவாய மாநாடு இடம்பெறவிருக்கின்றது. கட்சியின் தீர்மானமே இறுதியானது. இதுவரை எமக்கு அழைப்பும் கிடைக்கவில்லை என்றார்.
வடகிழக்கில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி அவசியம்: ஒன்றியத்தின் தூதுவரிடம் முதலமைச்சர் தெரிவிப்பு
Reviewed by Author
on
November 01, 2013
Rating:

No comments:
Post a Comment