தென்பகுதி மீனவர்கள் மன்னாரில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடைசெய்யக்கோரி கவனஈர்ப்பு போராட்டம் -படங்கள்
தென்பகுதி மீனவர்கள் மன்னார் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடைசெய்யக்கோரி கவனஈப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் மன்னார் பனங்கட்டுகொட்டு கடலோரிவீதியில் நடைபெற்றது.
குறித்த கவனஈர்ப்பு போராட்டத்தை பனங்கட்டுகொட்டு மீனவ சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த கவனஈர்ப்பு போராட்டத்தின் போது தென்பகுதி மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் அத்து மீறி கடற்றொழிலில் ஈடுபடுவதினால் மன்னார் பனங்கட்டுகொட்டு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையிலான பதாதைகளை ஏந்தியவாறு மீனவர்கள் பனங்கட்டுகொட்டு கடலேரிவீதியினை இடைமறித்து குறித்த கவனஈப்பு போராட்டத்தை; நடத்தியிருந்தனர்
இதன் போது குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதரலிங்கம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா ,அஸ்மீன் ,மன்னார் நகரசபை முதல்வர் ஞானப்பிரகாசம் ,நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ,அருட்தந்தை பெப்பி சோசை ஆகியோர் பாதிக்கப்பட்ட பனங்கட்டுகொட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குறித்த கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன் நிலையில் குறித்த பகுதியிற்கு வருகைதந்த மன்னார் பிரதே செயலாளர் தயானந்தா மற்றும் மன்னார் கடற்றொழில் பிரதிப்பணிப்பாளர் .எஸ்மிராண்டா குறித்த மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து மீனவர்களின் பிரச்சினை அடங்கிய மகஜரை மன்னார் பிரதேச செயலாளர் தயானந்தாவிடம் கையளிக்கப்பட்து. அதிகாரிகளினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பான மகஜரில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
கடற்றொழில் அமைச்சர்
கௌரவ ராஜித சேனாநாயக்க 08-11-2013
கடற்றொழில் அமைச்சு
கொழும்பு.
பனங்கட்டுக்கொட்டு வாழ் கிராம மக்களால் நடாத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டம்
08-11-2013
மேற்படி விடயம் தொடர்பாக பனங்கட்டுக்கொட்டு மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதனையும் இவர்களை உடனடியாக இவ்விடத்தில் இருந்து அகற்றக்கோரியும் இன்று கிராம மட்டத்தில் முதற் கட்டமாக கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எமது கிராம மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் வருகையினால் எவ்வகையில் பாதிக்கப்படுக்கின்றார்கள் என பார்க்கும் போது
1. எமது பகுதி மீனவர்களில் 60 வீதமானோர் ஆறு மாத பருவ கால தொழிலையே நம்பி வாழ்பவர்கள் இக் காலப்பகுதியில் தென்பகுதி மீனவர்களின் அத்து மீறிய வருகையால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைகின்றது.
2. யுத்தத்தில் இருந்து மீண்ட எமது மக்கள் இன்னும் பொருளாதார முன்னேற்றங்கள் அற்ற நிலையிலேயே வாழ்வாதாரத்தை மேற்கொண்டு போகின்ற நிலையில் தென்பகுதி மீனவர்களின் வருகையால் எமது வாழ்வாதாரம் நலிவடைகின்றது.
3. ஆறு மாதகால தொழிலின்றி கடன்பட்டு நகைகளை அடகு வைத்து வாழ்வாதாரத்துடன் பிள்ளைகளின் கல்வி செலவு மருத்துவ செலவு போன்ற செலவுகளைக் கூட இந்த வேளையில் தான் தொழில் செய்து மீட்டுக்கொள்கின்ற காலமாகும். இவ் வேளையில் நாம் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்பை அடைய முடியாமல் எம்மை தென்பகுதி மீனவர்களின் வருகையும் அவர்களது மீரட்டலும் எமது கட்டுவலைத்தொழிலை எமது கடற்பகுதியில் செய்யவிடாமல் கடற்படை ஊடாக தடுப்பதும் எம்மை வேதனைப்படுத்தும் செயலாகும்.
4. கடந்த ஓரிரு வருடங்களாக எமது பகுதி மீனவர்களுக்கும் தென்பகுதி மீனவர்களுக்குமிடையே ஓர் முருகல் நிலை தொடர்ந்து கொண்டேயுள்ளது. இந்நிலையானது எங்களுக்குள் இருக்கும் நல்லுறவை பாதிப்படையச் செய்யும் நிலையாக உள்ளது. அத்தோடு சமாதானத்திற்கான குந்தக நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் தோன்றுகின்றது.
5. ஒவ்வொரு வருடமும் இவர்களது வருகை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலிருந்து அதிகரித்துக்கொண்டே படகுகளின் எண்ணிக்கை போவதனால் எம்முடைய மீனவர்களின் அன்றாட மீன்பிடியில் பாரிய வீழ்ச்சி அடைகின்ற நிலையும் பட்டினி வாழ்வும் காணப்படுக்கின்றது.
6. தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய வருகையும் அனுமதியின்றி கடற்கரையோரங்களில் கொட்டகைகள் அமைத்தலும் பருவகாலம் முடிந்தப்பின் அவற்றை அகற்றாமல் அப்படியே விட்டுச் செல்லுகின்ற நிலமையும் எமது கரைவலைத் தொழிலைக் கூட செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துக்கின்றது.
7. கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்களின் மகா சம்மேளன கூட்டத்தின் போது தென்பகுதி மீனவர்களின் வடபகுதிக்கான தொழில் நடவடிக்கையானது அப் பகுதி மீனவர்களின் அனுமதியுடன் எந்த விதமான பாதிப்புமில்லாமல் தொழில் செய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அந் நடைமுறையினை பின்பற்றாமல் அத்துமீறி வருகின்ற நிலை தடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மீனவ பிரதிநிதிகளுடன் தொடர்புக்கொண்டு கலந்துரையாடி பாதிப்பில்லாத தீர்வினைப் பெற்றுத்தரல்.
எனவே எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நல்லுறவையும் பாதிக்கின்ற இவ்வாறான செயற்பாடுகள் உடன்நிறுத்தப்பட்டு தென்பகுதி மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தி அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கொள்கைக்கேற்பவும் கௌரவ கடற்றொழில் அமைச்சரின் திட்டத்திற்கேற்பவும் எமது வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தரும்படியும் எந்த வித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகா வண்ணம் எமது எதிர்கால வாழ்கையை தொடர்வதற்கும் சுதந்திரத்துடன் தொழில் செய்வதற்கும் ஆவண செய்யும் படி எல்லம் வல்ல இறைவனை பிரார்த்தித்து எமது கிராமத்தின் சார்பாக இக் கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்.
தென்பகுதி மீனவர்கள் மன்னாரில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடைசெய்யக்கோரி கவனஈர்ப்பு போராட்டம் -படங்கள்
Reviewed by Author
on
November 08, 2013
Rating:
No comments:
Post a Comment