சுனாமி
இப்பெருந்துயர் ஏன் தந்தாய்?
இனிய இலங்கைக் கரையைப் பலமான
இராட்சத அலைகொண்டு ஏன் சிதைத்தாய்?..
இராட்சத அலையே! இலங்கைக் கரையின்
இழுவைப் படகுகளையும், இயந்திரங்களையும்
இன்பங்களையும்; ஏன் புதைத்தாய்?..
இந்துவின் முத்தை ஏன் சிதைத்தாய்?..
சாதிமதம் பாராமல,; நீ! செய்த சேதம்
சரித்திரத்தில் எம் நாட்டின் சோகம்
.jpg)
யாரையாவது பற்றி நீ யோசித்தாயா?
பால்மணம் மாறாப் பச்சிளம் பாலரையும்
பாவையரையும் ,பாரில் பாதம் பதிக்காத
கருவறையில் தூங்கிய குழந்தைகளையும்
கணப் பொழுதில் காவு கொண்ட உன்
அரக்கத்தனத்தைச் சொல்ல வார்த்தையில்லை
பாடம் புகட்டிய பள்ளிகளும்
பத்தியுடன் தொழும் பள்ளிகளும்
பள்ளி கொள்ளும் பள்ளியறைகளும்
பாழாய்ப் போன உனக்கு என்ன? செய்தன
பாரில் இருந்தவிடம் தெரியாமல்
புரட்டிப் புரட்டி எடுத்துள்ளாயே!...
உனக்கென்ன நிம்மதியாய் தூங்குகிறாய.;
ஊரில் உள்ள நாம் தூங்கி கனநாளாச்சு
ஒரு வீட்டில் சாவீடென்றால் ,ஆறுதல் சொல்லிடலாம்
ஊரெல்லாம் சாவீடன்றால் யாருக்கு? ,யார?; ஆறுதல் சொல்லுவது.
மருதமுனை அக்பர் கிராமம், நினைக்கவே
மனம் சுக்குநூறாய் வெடிக்கிறது
சாய்ந்தமருது சரிந்திட்ட கட்டிடங்கள்
சிந்தையை நித்தமும் கலக்குகிறது.
காரைதீவில் பட்ட காயம் கனவிலும்
மனதைவிட்டு மறைய மறுக்கிறது
அக்கரைப்பற்றின் மரீனா பீச்
மரித்தே போய்விட்டது உன்னால்
நாப்பதாம் கட்டையின் துயரைச் சொல்ல
நா எழுவதில்லை நாநிலத்தில்
கோமாரியின் கோரத்தைப் பார்த்த
கண்கள் பனிக்கின்றன பாரில்
திருக்கோவிலின் திருவழகைப் பார்த்த
கண்கள் கலங்குகின்றன கவலையால்
பொத்துவிலின் பொலிவு அறுகம்பை ,
அழிகம்பை ஆகியே அழிக்கிறதெம்மை
ஓ!.. இராட்சத அலையே ....
ஓன்று மட்டும் நிச்சயம் நாமோர்
முடிவுக்கு வந்துவிட்டோம்.
உன் போலாயிரம் அலைகள் வரினும்
நாம் விரண்டோடிடோம்.மீண்டும்
மீண்டும் நாம் எழுவோம்
அரேபிய பீனிக்ஸ் பறவையாய்
கே.சி.எம்.அஸ்ஹர்
சுனாமி
Reviewed by Admin
on
December 26, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment