வட மாகாணத்தில் ஆளுநரின் ஆட்சி அதிகார தோரணையில் நடக்கின்றது : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
வடக்கில் தற்பொழுது உள்ள நிலையைப் பார்க்கும்பொழுது விரைவான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படாவிடின் தமிழ் பேசும் மக்களுக்குப் பதில் சிங்களம் பேசும் மக்களே அதிகரித்துவிடுவார்கள். இங்கு ஆளுநரின் ஆட்சி, ஆக்கிரமித்த ஒரு இராணுவத்தின் அதிகார வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினே ஸ்வரன், கிடைக்கின்ற நிதியை ஒவ்வொரு மாவ ட்டத்தின் தேவைகளையும் அறிந்து அம்மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்த நடவடிக் கைகளை எடுக்க உத்தேசித்துள்ளோம் எனவும் இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தடையாக இருக்காது என நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் மூன்றாவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவை செயலகத்தில் நடைபெற்றபோது சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கிடல் நியதிச் சட்டத்தின் வருடாந்த நிதி சம்பந்தமான மதிப்பீட்டு அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறுபான்மையினரின் போராட்டம் காரணமாக மாகாண சபை நிறுவப்பட்டது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். முக்கியமாக வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நலன்கருதியே மாகாண சபை திட்டத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பேசி அதன் காரணமாக அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
ஆனால் மாகாண சபை சட்டத்தை அன்றைய அரசாங்கம் நாடுமுழுவதும் ஏற்புடையதாக்கி வடஇகிழக்கு மாகாணங்களுக்கு அளிக்கவேண்டிய அதிகாரப்பரவல் என்ற கொள்கை ரீதியான அதிகாரத்தை கொச்சைப்படுத்திவிட்டது. வடகிழக்கு மாகாணங்களுக்கு விசேடமாக எதுவுமே கொடுக்கப்படவில்லை. அவர்களுக்குத் தேவையான அதிகாரப் பரவலாக்கமும் விசேடமாக கவனத்திற்கு எடுக்கப்படவும் இல்லை. அம் மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள்இ திருத்தங்கள்இ நலன்கள் போன்ற எவையுமே கருத்திற்கொள்ளப்படவில்லை. மாகாண சபை முறையானது அதிகாரப் பகிர்விற்கான ஒரு திட்டம் என எல்லோராலும் அடையாளப்படுத்தப்பட்டு வந்த போதிலும் அது உண்மையில் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் அதிகாரத்தை மென்மேலும் பலப்படுத்துவதாகவும் விரிவுபடுத்துவதாகவுமே அமைந்துள்ளது.
ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி, ஆளுநரின் நியமனம் இன்றி எந்தவொரு நியமனமும் நடைபெற முடியாது. செயலாளர்கள் தொடக்கம் கீழ் மட்டம் வரையில் அவரின் ஊடாகவே நியமனங்கள் நடைபெறுகின்றன. பிரதம செயலாளர் ஜனாதிபதியால் முதலமைச்சரின் அனுசரணையுடன் நியமிக்கப்படவேண்டும் என்று சட்டத்தில் இருப்பினும் எமது தேர்தல் தெரிவின் அடிப்படையில் எவரும் நியமிக்கப்படவில்லை. மற்றைய செயலாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதைவிட ஆளுநரின் ஆட்சி ஆக்கிரமித்த இராணுவத்தின் அதிகார வேகத்தில் நடைபெற்றுகொண்டிருக்கிறது.
எந்த ஒரு மாகாணசபை அலுவலரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை உறுப்பினருடன் சேர்ந்து கூட்டுறவாக இயங்கத் தயங்குகின்றார்கள். எங்கே முன்னைய போர்க்கால இராணுவ அதிகாரியும் இன்றைய ஆளுநருமாகிய ஒருவரின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்படுகின்றது. அதைவிட எமது நியதி சட்டங்களை உரியவாறு உருவாக்கி எமது மன்றுக்கு சமர்ப்பிக்கக் கூடிய நிர்வாக அலுவலர்கள் எம்மத்தியில் இல்லையோ என்று ஏங்க வேண்டியுள்ளது.
காலத்தின் கட்டாயத்தால் கதிரை மாறி கதிரையில் சிரேஷ்ட நிலை அடைந்துள்ள அலுவலர்கள் பலரிடமும் இருந்து அதிகாரத்திற்கமைய எதிர்பார்க்க முடியாது உள்ளது. உரியவர்களைஇ திறமை மிக்கவர்களை வெளியில் இருந்து கொண்டுவர உரிய ஏற்பாடுகள் நிலை நிறுத்தப்படவில்லை. 20 வருட இராணுவ ஆட்சி மேலிடம் சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக எமது அலுவலர்களை ஆக்கியுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகின்றது. அதற்காக அவர்களை நான் கடிந்துகொள்ளவில்லை. கவலைப்படுகின்றேன்.
ஆட்சித் திறனில் அபிவிருத்திப் பணியில் உள்ளேயும் புறத்தேயும் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. இந்த தருணத்தில் யாராவது ஒருவர் கேட்கக் கூடும் மாகாண சபைக்கு உரித்துக்கள் போதாமல் இருந்தும் ஏன் நீங்கள் தேர்தலில் நிற்கின்றீர்கள் என்று?. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று தேர்தலில் நின்றால் தான் மக்களின் எதிர்பார்ப்புக்கள்இ அபிலாசைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலில் எம் மக்களின் உளப்பாங்கினை உலகறிய உரகக் கூறியுள்ளது இத் தேர்தல் முடிவேயாகும்.
இரண்டாவதுஇ பதிவில்லாமல்இ மக்களின் செல்வாக்கு இல்லாமல் 13ஆவது திருத்தச் சட்டம் போதுமானதல்ல என்று எவ்வளவுதான் கருத்தரங்குகளில் கூறினாலும் அது எடுபடாது. மக்கள் செல்வாக்குடன் அந்தப் பதவியில் இருந்து இடையூறுகளை அனுபவித்த பின் நாம் கூறினோமானால் அதை உலகம் கேட்கும். அதைத் தான் தாங்கள் இப்பொழுது செய்து வருகின்றோம்.
வெறுமனே 13ஆவது திருத்தச் சட்டம் போதுமானதாக இல்லை என கூறுவதையும் பார்க்க நாளாந்தம் எவ்வாறு அந்த போது அற்ற நிலை நிர்வாகத்தில் குறுக்கிடுகிறது என்பதை உலகறியச் செய்வது சாலச்சிறந்த வழி என்று நாம் கருதுகின்றோம்.
2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் முக்கிய நோக்கம் வடகிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால் அதற்கேற்ற விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்பது சந்தேகமளிக்கின்றது. வடமாகாண சபைத் தேர்தல் இந்தியாவின் நெருக்குதல்களாலேயே நடைபெற்றது. இராணுவத்தை வடமாகாணத்தில் தொடர்ந்து நிலை பெற்றிருக்கவைத்திருப்பது வடமாகாண மக்களிடத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அண்மையில் வந்த வெளிநாட்டுத் தலைவர் அனைவரும் வடகிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்ற விதத்தில் கருத்துக்கள் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இப்பேற்பட்ட அதிகாரப் பரவலாக்கத்திற்கு தற்போது இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் போதியதாக இருக்கமாட்டாது என்பது வெள்ளிடைமலை. வேண்டுமெனில் மாகாண சபையை இடைக்கால மாற்று நிர்வாகமாக அமைத்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகலாம். அரசியல் ரீதியாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் நாடு சுதந்திரம் அடைந்து 65 வருடங்கள் ஆகியும் தீர்க்கப்படவில்லை.
மேலும் மேலும் தமிழ் பேசும் மக்கள் மீது கூடிய அல்லல்களையும் அசௌகரியங்களையும் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் சுமத்தி வருகின்றன.
அடுத்த கட்டமாக நாங்கள் சர்வதேச சமூகத்தையே நம்பவேண்டி இருக்கின்றது. அதுதான் தற்பொழுது காலத்தின் தேவையாக இருக்கின்றது போல் தெரிகின்றது. சர்வதேசத்தினர் கடந்த இரண்டு மூன்று மாதங்களுள் பல நன்மைகளை எமக்கு அளிப்பதாக எமக்கு உறுதிமொழி கொடுத்துள்ளார்கள். அந்த நன்மையைப்பெற நாங்கள் உரியவற்றைச் செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதாக 2012 ஆம் ஆண்டில் குறிப்பிட்டிருந்தது. அவற்றைப்பெற ஆவன செய்ய வேண்டும்.
வெளிநாடுகளின் நெருக்குதல்கள் இல்லாவிடின் அரசாங்கம் எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் வழங்கமாட்டாது. எம்மால் மறுமலர்ச்சிக்காக வெளியார் தரும் உதவிகள் எம்மை வந்தடைய அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்காத வகையில் சர்வதேசம் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியார் தரும் உதவிகளை நேரடியாகப் பெற சர்வதேசம் உரியனவற்றை செய்துதர வேண்டும். சில நேரங்களில் வெளிநாட்டு நிதியுதவி கொழும்பில் முடக்கப்பட்டு விட மாகாணத்தில் நடக்கும் செயற்றிட்டங்களுக்கு உரிய நேரத்தில் பணம் வந்து சேராமல் போய்விடுகின்றது.
இவைமட்டும் அல்லாமல் எமது அலுவலர்களிடையே போதிய தொழில் திறனை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு தேவையான நியதிச் சட்டங்களை தயாரிப்பதற்குப் போதுமான அலுவலர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள். அத்துடன் செயற்றிட்டங்களைத் தயாரிக்கக்கூடிய தகைமைகளைக் கொண்டவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது. இன்றைய நிலையில் நான் காணப்பது ஜனநாயகத்தில் இருந்து நாடு தூரச் சென்று கொண்டிருப்பதையேயாகும். நாடு சமஷ்டி, சுயாட்சி, அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் பேச்சில் தொடங்கியுள்ளோம். வடமாகாணத்தில் நடப்பவை யாவும் சர்வாதிகாரத்திற்கே வித்திடுவதாகத் தெரிகின்றது. குடும்ப ஆட்சியை ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனவா என்று வாய்விட்டுக் கேட்க வேண்டும்போல் உள்ளது.
இராணுவத்தை எந்தக் காலத்திலும் வாபஸ்பெற மாட்டோம் என்று போர் முடிந்து சுமார் 5 வருடங்களுக்குப் பின்னர் கூறுபவர்கள் என்ன மனோ நிலையில் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்பொழுது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது மிக விரைவாக அரசியல் தீர்வுகள் காணப்படாவிட்டால் தமிழ்பேசும் மக்களுக்குப் பதில் சிங்களம் பேசும் மக்களே வடமாகாணத்தில் அதிகரித்து விடுவார்கள். அதனால் என்ன என்று கேட்கும் தமிழர்களை நான் சந்தித்துள்ளேன்.
தென்நாட்டில் பரவலாக இளமைப்பருவத்தில் குடிகொண்டிருந்த தமிழ் பேசும் மக்களை 1958 இலும் 1983 இலும் அதற்கு இடைப்பட்ட காலத்திலும் அடித்து விரட்டிய பின்னர்தான் வடக்கில் இராணு உதவிகளுடன் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது இனப் படுகொலைக்கு ஒப்பானது என்பது மேற்படி தமிழ் பேசும் மக்களுக்கு தெரியாததோ என்னவோ. அல்லது தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று சுயநல காரணங்களுக்காக அவ்வாறு கூறி நிற்கின்றார்களோ என்றும் நான் அறியேன். வடக்கு கிழக்கு மக்களில் தமிழ்பேசும் மக்களை அடையாளம் காட்டமுடியாத அளவிற்கு எடுத்துச்செல்ல நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவாக வடகிழக்கில் இப்போதிருக்கும் தமிழ்பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் .மேலும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அசட்டையாக இருந்து வந்தால் தமிழ் பேசும் மக்களின் நிலைமையை மாற்றி அமைக்க முடியாத அளவிற்கு மோசமானதாக இருக்கும் என்பதை எம்மக்களுக்கும் சர்வதேச சமூக த்திற்கும் கூறிவைக்க விரும் புகின்றேன்.
எமக்குக் கிடைக்கப்போகும் நிதியுதவி மிகச் சொற்பம் எனினும் விதைவைக் குடும்பங்கள்இ தனிப் பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள், அங்கவீனமுற்றவர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை நல் வாழ்வு பெற பிறநாட்டு உதவிகளுடன் கரைசேர்க்க எண்ணியுள்ளோம். ஒவ் வொரு மாவட்டத் தேவைகளைத் தெரிந்து அந்தந்த மாவட்ட மக்களின் நல்வாழ்விற்காக நடவடிக்கைகள் எடுக்க உத்தேசித்துள்ளோம். பாரிய வேலை த்திட்டங்களையும் வெளிநாட்டு உதவி யுடன் செய்ய எண்ணியுள்ளோம்.
இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்காது என்று நம்புகின்றோம். எம்மக்களின் நல்வாழ்வும் மனச் சந்தோசமும் முழுநாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதை சிங்கள மக்கள் உணர்வார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.
வட மாகாணத்தில் ஆளுநரின் ஆட்சி அதிகார தோரணையில் நடக்கின்றது : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
December 11, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 11, 2013
Rating:


No comments:
Post a Comment