வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி உறுதி: அகாஷி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்;டிலுள்ள வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அகாஷி குறிப்பிட்டார்.
அத்துடன் சிறந்த நபரொருவர் வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த மாகாண மக்களிற்காக அரும்பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
வட மாகாண அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்து புரிந்துணர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வட மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்தார்.
எனது இந்த விஜயத்தின்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ள முடியவில்லை. போதியளவு நேரமின்மையே இதற்கு காரணமாகும். எனினும் முதலமைச்சருக்கான எனது வாழ்த்துச் செய்தி ஜப்பானிய தூதுவரூடாக அனுப்பப்படும் எனவும் அகாஷி குறிப்பிட்டார்.
வட மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆவது தடவையாக கொழும்பு வந்தார்.
விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றை அகாஷி நடத்தினார்.இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"முன்னாள் போரளிகளின் புனர்வாழ்வு, இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் மற்றும் காணிப் பிரச்சினை போன்ற செயற்பாடுகளில் முன்னேற்றத்தினை காண்கின்றேன். அத்துடன் மிகுதியாகவுள்ள செயற்பாடுகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் கடுமையாக உழைக்கின்றது.
அண்மையில் நான் ஜெனிவாவுற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது இலங்கை விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் கலந்துரையாடினேன்.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய தேசிய செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது.
சர்வதேச மனிதாபிமான சட்டம், மனித உரிமை, காணி மீள வழங்கல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த செயற்திட்டம் காணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களாக இடம்பெற்ற பிரச்சினைக்கான தீர்வினை சுமார் நான்கு வருடங்களுக்கு வழங்குவது இலகுவான செயற்பாடல்ல.
எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்க ஆர்வமாக உள்ளது. எனினும் சில சமயங்களில் இந்த செயற்பாட்டில் கால தாமங்கள் ஏற்படலாம். எனினும், இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினை தீர்ப்பதற்கான சரியான சந்தர்ப்பமாக தற்போதைய காலப் பகுதி உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் செயற்பட வேண்டும்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து உதவியளிக்கும். அத்துடன் இலங்கைக்கு தேவையான விடயங்களில் சர்வதேச சமூகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சில தேசிய விடயங்களிற்கு இலகுவில் பதில் பெற முடியாது. அதே போன்று சில விடயங்களில் தொடர்ச்சியாக பேச்சு நடத்த வேண்டியுள்ளது.
இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச சமூகங்கள் போராட வேண்டும். நல்லிணக்கத்திற்கு கால எல்லை விதிக்க முடியாது. இதற்காக பொறுமையாக இருக்க வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்ற பொதுவான கருத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின் ஆழமான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலில் சிறப்பான செயற்முறைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அவசியமாகும்.
அத்துடன் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கான ஆயத்த நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இதனை இன்னும் துரிதப்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது" என்றார்.
வட மாகாண ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சர்ச்சை தொடர்பில் ஜப்பானின் நிலைப்பாடு என்னவென்று இதன்போது ஊடகவியலாளரொருவர் யசூசி அகாஷியிடம் வினவினர்.
"இதற்கு மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் இணைந்து செயற்பட வேண்டும். எனினும் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் சர்ச்சை காணப்படுவதை ஜப்பான் அறிந்துள்ளது. எனினும் இந்த சர்ச்சை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரும்பாடுபடுவார். இது தொடர்பில் தன்னிடம் உறுதி வழங்கியுள்ளார்" என்றார்
வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி உறுதி: அகாஷி
Reviewed by Author
on
December 13, 2013
Rating:
Reviewed by Author
on
December 13, 2013
Rating:

No comments:
Post a Comment