மக்கள் சந்திப்பில் அத்துமீறி உள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்
சுனாமிப் பேரழிவினாலும் யுத்தத்தினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியில் இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இன்று காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது பொலிஸார் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இச் சந்திப்பில் வத்திராயன் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றினைச் சேர்ந்த பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் க.சூரியகாந்த், பாதிக்கப்பட்ட உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களது மனக்குறைகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் செவிமடுத்துக் கொண்டிருந்தவேளையில் திடீரென அங்கு பிரசன்னமான நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு கூடியிருந்த மக்களைக் கலவரப்படுத்தும் விதமாக உள் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினரை அணுகி தாம் பருத்தித்துறை பொலிஸ் தலமையகத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய வந்ததாகக் கூறியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் இவர்களது அத்துமீறிய பிரவேசமானது மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் மக்கள் குறைகேட்டலைத் தொடர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களது குறைகளை உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தி உரிய நிவாரணத்தினை விரைவில் பெற்றுக் கொடுக்க ஆவன செய்வதாக அம்மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார்.
மக்கள் சந்திப்பில் அத்துமீறி உள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்
Reviewed by Admin
on
January 15, 2014
Rating:

No comments:
Post a Comment