பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் காணியை சுவீகரிக்க முயற்சி : மக்கள் எதிர்ப்பு
மன்னார் - பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு சொந்தமான காணியை கடற்படையினர் அபகரிக்கும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அப்பகுதிக்கு நில அளவையை மேற்கொள்ள சென்றிருந்த நில அளவையாளர்களை வழிமறித்து அங்கு முன்னெடுக்கப்படவிருந்த அளவை பணியையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தை தகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களும் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திற்கு சொந்தமான வெட்டியா குடியிருப்பு காணியை கடற்படையின் கஜபா படையணியின் பாதுகாப்பு முகாம் அமைப்பதற்காக அபகரிக்கும் நோக்குடன் நில அளவை செய்ய வந்திருந்த அரச நில அளவையாளர்களை வழிமறித்த பொதுமக்கள்இ பேசாலை உதவி பங்கு தந்தை அருட் தந்தை அருட்குமரன் அடிகளார் வட மாகாண சபை உறுப்பினர் பிறிமூத் இராய்வா மன்னார் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோர் மேற்படி நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து அங்கு முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவை பணியையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அங்கு குழுமியிருந்த கடற்படையினரும் அதிகாரிகளும் அருட் தந்தையுடனும் பங்கு முக்கியஸ்தருடனும் பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த வேளை அங்கு நின்று கொண்டிருந்த நபரொருவருடைய கையடக்க தொலைபேசியை கடற்படை அதிகாரி ஒருவர் பறித்து எறிந்துள்ளமையினால் அங்கு பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்நிலைவரத்தை படம் பிடிக்க முற்பட்ட ஊடகவியலாளர்களும் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
அங்கு வருகை தந்த அரச மன்னார் நில அளவையாளர் கே. திலிப்குமார் அரசின் வேண்டுகோளுக்கிணங்கவே இங்கு நில அளவை செய்ய வந்ததாகவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க மறுத்ததால் இது தொடர்பில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் காணியை சுவீகரிக்க முயற்சி : மக்கள் எதிர்ப்பு
Reviewed by NEWMANNAR
on
January 31, 2014
Rating:

No comments:
Post a Comment