இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
இந்தியா சார்பில் வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரும், இலங்கை சார்பில் மீன் வளத்துறை அமைச்சர் ராஜித்த செனரத்னவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருவரும் விவாதிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சென்னையில் வரும் 20ம் திகதி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான படகில் சண்முகம், ரவி, காளிதாஸ், தங்கராசு, சம்பத் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.
அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான படகில் வீரமணி, வெற்றிவேல், ஜோதி, முருகவேல் ஆகியோர் சென்றனர்.
அவர்கள் 9 பேரும் நேற்று (14) மதியம் கோடியக்கரைக்கு தென் கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகு அங்கு வந்து அதில் இருந்த இலங்கை கடற்படையினர் கோடியக்கரை மீனவர்கள் மீது சரமாரி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பின்னர் மீனவர்கள் விரித்திருந்த வலைகளை வெட்டி வீசினார்கள். கல் வீசியதில் மீனவர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து கல்வீசியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாங்கள் சென்ற படகுகளில் கரைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
இன்று (15) அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படையினர் அவர்களை கரைக்கு திரும்பும் வரை அங்கேயே நின்றதால் மீனவர்கள் தங்களது வலைகளை எடுக்க முடியாமல் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் கடலோர காவல் படைக்கும், மீன்வளத்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை சமயத்தில் கோடியக்கரை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கல் வீசி விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
Reviewed by Author
on
January 15, 2014
Rating:

No comments:
Post a Comment