இந்திய வீட்டுத்திட்டம் எமக்கு கிடைக்காதது ஏன் - வவுனியாவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்
இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இன்று (05) மீண்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று தமது மகஜரினை வவுனியா வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலனிடம் கையளித்திருந்தனர்.
50 இற்கும் உட்பட்டவர்களே கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் ´வவுனியாவில் வசிப்பிடம் நெடுங்கேணியில் கழிவறையா´, ´அதிகாரிகளே வீட்டுத்திட்டத்தை சீராக வழங்குங்கள்´, ´வீட்டுத்திட்டத்தில் நெடுங்கேணி வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்´ என தெரிவித்து கோசங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கோசங்களை எழுப்பிய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பிரதேச செயலாளர் அவர்களுடைய கோரிக்கைகளை செவிமெடுத்ததுடன் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அகன்று சென்றனர். சிறிது நேரத்தின் பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மாகாணசபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன் மற்றும் ம.தியாகராசா ஆகியோர் பிரதேச செயலாளர் க. பரந்தாமனுடன் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் பின்னர் பிரதேச செயலாளர் இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட முறைகள் அதனை வழங்குவதற்குள்ள நடைமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.
இந்திய வீட்டுத்திட்டம் எமக்கு கிடைக்காதது ஏன் - வவுனியாவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
February 05, 2014
Rating:

No comments:
Post a Comment