மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உடல்கள் கொடிய முறையில் இறந்திருக்க வேண்டும்.அஜித் ரோஹண
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் புதைக்கப்பட்டிருப்போர் கொடிய முறையில் இறந்திருக்க வேண்டும். எனினும், இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எனினும், தனிப்பட்ட பலரின் கருத்துகளினால் இவை வேறு விதமான வகையில் சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும், இவை அண்மைய கால கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களாகத் தெரியவில்லை. குறிப்பாக இந்த மனித எலும்புக்கூடுகள் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
அதேபோல் இவை யுத்தத்தில் தாக்கப்பட்டவை என்பதற்கும் எவ்வித அடையாளங்களும் இல்லை. மன்னார் அகழ்வு ஆராய்ச்சிகளின் போதும்கூட கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் ஆடைத் துணிகளின் எச்சங்களோ, பொத்தான்களோ கிடைக்கப்படவில்லை. குறுகிய கால கட்டமாக இருந்திருப்பின் புதைக்கப்பட்ட மனித உடல்களுடன் ஏனைய அடையாளங்கள் நிச்சயமாகக் காணப்பட்டிருக்கும். எனினும், இவை எவையும் கிடைக்கப் பெறாமைய குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், புதைக்கப்பட்ட மனித உடல்கள் அனைத்தும் ஒரே சாயலில் ஒரே நிலையில் புதைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள 55 எலும்புக்கூட்டு எச்சங்களும் திருக்கேதீஸ்வரம் கோயில் திசையைப் பார்த்த வண்ணமே உள்ளது. அத்தோடு உடலில் காயங்கள் அல்லது குண்டுத் துளைப்புகள் எவையும் எலும்புக்கூட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இவை மிகப்பழைமை வாய்ந்த ஏதோவொரு சம்பவத்தினையே வெளிக்காட்டுகின்றது.
இராணுவத்தினர் மன்னார் பிரதேசத்தை கைப்பற்றியமை மிகக் குறுகிய கால கட்டத்தில் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் இவ் மனித புதைகுழிச் சம்பவம் தொடர்பில் கூடிய கவனம் எடுக்கப்படுவதுடன் இவ்விடயத்தில் சுயாதீன விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.
தற்போது இவ் அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருப்பினும் எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் இவ் அகழ்வுகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உடல்கள் கொடிய முறையில் இறந்திருக்க வேண்டும்.அஜித் ரோஹண
Reviewed by NEWMANNAR
on
February 05, 2014
Rating:

No comments:
Post a Comment