இந்திய –தலைமன்னார் ‘ரயில்-கப்பல்-ரயில்’ பயணம் (Boat Mail) ; 100 ஆண்டுகள் நிறைவு (ஒரு வரலாற்றுக் குறிப்பு)
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் ஊடான ரயில் பாதையில் 1914 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து தனுஷ்கோடி வரை பாம்பன் பாலத்தின் ஊடாகப் பயணித்து, பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாருக்கு வந்து அங்கிருந்து மதவாச்சி வரை ரயில் மூலம் பயணிக்கும் போக்குவரத்து பல தசாப்த்தங்களாக நீடித்தது.
எனினும் 1964 ஆம் ஆண்டு வீசிய கடும் புயல் காரணமாக தனுஷ்கோடிப் பகுதி முற்றாக அழிந்தபோது, அங்கிருந்த ரயில் பாதையும் மறைந்து போனது.
பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையும் முற்றாக சேதமடைந்தது.
இதன் காரணமாக ஆங்கிலேயேர்கள் ஆரம்பித்த ரயில்-கடல்-ரயில் பயணம் தடைப்பட்டது.
தற்போது இந்தியாவில் ராமேஸ்வரம் வரையிலான ரயில் சேவைகள் செயல்பட்டு வருகிறன.
இந்நிலையில் தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையை மீண்டும் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா – இலங்கை இடையே பாம்பன் பாலம் வழியாக பல ஆண்டுகள் செயல்பட்ட ரயில்-கடல்-ரயில் சேவை இருநாடுகளுக்கும் பல நன்மைகளை வழங்கியுள்ளது.
வரலாற்றுக் குறிப்பு:-
தமிழகத்தின் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் சேவை இருந்தது என்றால் பலர் நம்பமாட்டார்கள்.
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் சிறந்த தொடர்புகள் இருந்த காலம் அது.
நூறு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ‘போட் மெயில்’ என்று அழைக்கப்பட்ட ஒரு ரயில் இரு நாடுகளுக்கு இடையே முக்கிய இணைப்பாக இருந்துள்ளது.
சென்னைக்கும் கொழும்பிற்கும் இடையே போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் 1876இல் உருவாக்கப்பட்டது
இதன் ஒருகட்டமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1913இல் நிறைவடைந்தன.
இதனை தொடர்ந்து 1914, பெப்ரவரி 24ஆம் திகதி முதல், ‘போட் மெயில்’ ரயில் சேவை ஆரம்பமாகியது.
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம், அதனை தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 36கிலோமீற்றர் தூர கப்பல் பயணம், பின்னர் தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம் என்று இந்த போக்குவரத்து தொடர்பு இருந்துள்ளது.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ‘போட் மெயில்’ ரயில், தனுஷ்கோடி துறைமுகத்தை சென்றடையும். அங்கிருந்து, கப்பல் மூலம், பயணிகள், தலைமன்னாருக்கு அழைத்து வரப்படுவார்கள்.
பின்னர் மீண்டும், ரயிலில் பயணித்து, கொழும்பை சென்றடைவர்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே, பல ஆண்டுகளாக, வர்த்தகம் நடப்பதற்கு தனுஷ்கோடி முக்கிய துறைமுகமாக விளங்கியது. 1964 டிசம்பர், 24ஆம் திகதி இந்த பகுதியை தாக்கிய புயல் காரணமாக ஒரே இரவில் தனுஷ்கோடியை அழிவடைந்தது.
இந்த புயலில் சிக்கி 1,800 பேர், உயிரிழந்ததாகவும் இதன் பின்னர் தனுஷ்கோடி வரை நடத்தப்பட்ட ‘போட்மெயில்’ ரயில் ராமேஸ்வரத்துடன் நிறுத்தப்பட்டது.
இலங்கை – இந்திய கடல்வழி ரயில் பயணமும், அன்றோடு முடிவுக்கு வந்தது
இந்த போக்குவரத்து சேவை குறித்த தமது அனுபவங்களை பலர் தமிழக் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ளனர்.
என்,சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், கல்லல். என் தந்தை, கொழும்பில் வியாபாரம் செய்து வந்தார். சிறு வயதில், நான் சில குறும்புகள் செய்ததால், என்னை கொழும்புக்கு அனுப்பி, படிக்க வைத்தனர். ‘போட் மெயில்’ ரயிலில், என் முதல் பயணம், 1946இல் நிகழ்ந்தது. ரயில் பாம்பன் பாலத்திற்கு வந்ததும், ‘விசில் சிக்னல்’ கொடுக்கப்பட்டு, மெதுவாக நகரும். அப்போது கடலின் அழகையும், வளைந்து செல்லும் ரயிலின் பின் பகுதியையும் பார்த்து ரசித்தபடி தனுஷ்கோடி சென்று சேர்வோம். அங்கு கப்பல் கேப்டன் எங்களை வரவேற்க தயாராக இருப்பார். பழங்கள், காய்கறிகள் எடுத்து செல்ல அனுமதியில்லை. அங்கிருந்து கப்பல், தலைமன்னார் நோக்கி பயணிக்க துவங்கும். மாணவர்களுக்கு முதல் வகுப்பு கொடுப்பர். அந்த குட்டி கப்பலில், 400 பேர் பயணிக்கலாம். கடல் பயணம், மொத்தம், 22 மைல். நடுக்கடலில் கப்பலை நிறுத்தி, இந்தியா – இலங்கை கடல் பகுதிகள் சங்கமிக்கும் இடத்தை, கேப்டன் சுட்டிக் காட்டுவார். தலைமன்னாரில் இறங்கிய பின், மீண்டும் ரயிலில் ஏறி, கொழும்பு செல்ல வேண்டும். அன்றைய காலத்தில், கல்லலில் இருந்து கொழும்புவிற்கு ஒரே டிக்கெட்டாக செல்ல, 45 ரூபாய் தான் கட்டணம். பிளஸ் 2 வரை கொழும்பில் படித்து முடித்து, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் மேலாளராக பணியாற்றினேன். அதற்கு பின் இந்தியா வந்து விட்டேன்.
மதுரையை சேர்ந்த என்.ஏ.என். நாராயணன், வயது 80
இலங்கை அரசில், 1946ல் ‘ஸ்பெஷல் டூட்டி வாட்ச்மேன்’ பணியில் சேர்ந்தேன்; மாதச் சம்பளம், 60 ரூபாய். 1963இல் ஓய்வு பெற்று, தமிழக அரசு மெரைன் பொதுப்பணி துறையில் சேர்ந்தேன். சென்னையில் இருந்து புறப்படும் ‘போட் மெயில்’ ரயிலில், 12 பெட்டிகள் இருக்கும். மண்டபம் முகாம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் இறக்கப்பட்டு, டாக்டர்களால் பரிசோதனை செய்யப்படுவர். ரயில் டிக்கெட்டில் தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகள் அச்சிடப்பட்டிருக்கும். மண்டபம் முகாமில் இருந்து, தனுஷ்கோடி ரயில் பயணம் ஒன்றரை மணி நேரம். தனுஷ்கோடியில் இருந்து புறப்படும் கப்பல், ஒன்றரை மணி நேரம் பயணித்து தலைமன்னாரை அடையும்.
இந்திய –தலைமன்னார் ‘ரயில்-கப்பல்-ரயில்’ பயணம் (Boat Mail) ; 100 ஆண்டுகள் நிறைவு (ஒரு வரலாற்றுக் குறிப்பு)
Reviewed by NEWMANNAR
on
February 25, 2014
Rating:

No comments:
Post a Comment