எனது கணவரைக் கொலை செய்துள்ளனர் – சிறையில் இறந்த பிரித்தானியப் பிரஜையின் மனைவி
வெலிக்கடை சிறைச்சாலையினுள் கைதியாகவிருந்த பிரித்தானியப் பிரஜை உயிரிழந்தமைக்கான காரணத்தை சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னரே கூற முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
விஷ்வலிங்கம் கோபிதாஸ் எனப்படும் இந்தக் கைதியின் சடலம் நேற்று காலை சிறைச்சாலையின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்டது.
எனினும், இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 43 வயதான விஷ்வலிங்கம் கோபிதாஸ் பிரித்தானியாவில் பிரஜாவுரிமை பெற்றவர்.
பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் 2007 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இதுபற்றி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திராரத்ன பல்லேகம தெரிவித்ததாவது;
1979 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விஷ்வலிங்கம் கோபிதாஸ் எனும் இந்தக் கைதிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி அவர் மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றவர். நேற்று காலை 7.10 அளவில் அவர் கழிவரைக்குச் சென்று மீண்டும் திரும்பாமையினால், அவதானித்தபோது அவர் அங்கே கீழே விழுந்திருந்தார். பின்னர் எமது அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் அவ்வேளையில் உயிரிழந்திருந்தார். 7.35 அளவில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. எனினும், அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எமக்குள்ளது.
சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சடலம் இன்று கொழும்பில் உள்ள சட்ட மருத்துவ அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த இடத்திற்கு வருகை தந்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் இரண்டாம் இலக்க நீதவான் நிரோஷா பெர்ணாண்டோ விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
விஷ்வலிங்கம் கோபிதாஸின் உறவினர்கள் பிரித்தானியாவில் வசிப்பதுடன் அவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
விஷ்வலிங்கம் கோபிதாஸ் 14 மற்றும் 10 வயதான இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.
இந்த மரணம் தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
கோபிதாஸின் சகோதரர் குறிப்பிட்டதாவது;
நீண்ட திட்டத்துடன் இதனை செய்துள்ளனர். எமக்கு இது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இதற்கு முன்னரும் இவரைக் கொலை செய்ய இரண்டு தடவைகள் முயற்சி செய்தனர். அது வெற்றியளிக்கவில்லை. இந்தப் பின்புலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலை தொடர்பில் எமக்கு சந்தேகம் இருக்கிறது.
கோபிதாஸின் தந்தை தெரிவிக்கையில்;
சம்பவம் அறிந்தவுடன் நான் சென்றேன். சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சின் மூலம் எனது மகன் உயிரிழந்துள்ளதாக அறிந்துகொண்டேன். சுகயீனத்திற்கு மருந்தைக் கொண்டு போய்க் கொடுத்தாலும் அதிகாரிகள் அதனை எனது மகனிடம் வழங்க மாட்டார்கள். அவ்வாறான ஓர் அரசாங்கமே இந்த நாட்டில் உள்ளது.
இவரை விடுவிக்க எம்பசி ஊடாக 7 வருடமாக முயற்சி செய்தேன். எனினும் இன்று எனது கணவரை இவர்கள் கொலை செய்துள்ளனர்,
என்றார் கோபிதாஸின் மனைவி.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் வினவினோம்.
தமது நாட்டுப் பிரஜை ஒருவரின் மரணம் தொடர்பில் தமக்குப் பதிவாகியுள்ளதாகவும் அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
காணொளி பார்க்க
காணொளி பார்க்க
எனது கணவரைக் கொலை செய்துள்ளனர் – சிறையில் இறந்த பிரித்தானியப் பிரஜையின் மனைவி
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment