மனத் தெளிவிற்கு சிவராத்திரி விரதம் - காணொளி
விரதங்களில் முக்கியமானதாக கருதப்படுவது சிவராத்திரி விரதமாகும். சிவராத்திரி விரதத்தின் பெருமையை கேட்டு எமனும் நடுங்குவதாகவும், இது எல்லா யாகங்களையும், எல்லா தர்மங்களையும் விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது. சிவபெருமான், லிங்கத்தில் தோன்றி அருளிய நாள் சிவராத்திரி. பிரம்மா, விஷ்ணுவுக்கும் இடையே ஜோதி வடிவில் தோன்றிய நாள். தேவி பூஜை செய்த நாள் என்று சிவராத்திரி நாளை விளக்குகின்றனர். இது ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரியாகும். சிவனடியார்கள் இதனை மாதந்தோறும் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஒரு சமயத்தில் பிரளயத்தில் எல்லா உயிர்களுமே மூழ்கி பிரபஞ்சமே அழிய இருந்ததால் அந்த யுகம் முடிவில் இரவு 4 ஜாமங்களிலும் உயிர்கள் அனைத்தும் வாழ்ந்து ஈடேறும் வண்ணம் ஐந்தொழில்களையும் நடத்தியருளும்படி ஈஸ்வரனை அம்பிகை பணிந்து வேண்டினார். அந்த நாளே சிவராத்திரி என்றும் புராணம் கூறுகிறது. தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது என்றும், அதனால் துன்பப்பட்ட தேவர்களை காக்க சிவபெருமான் நஞ்சை தனது கழுத்தில் தேக்கி அவர்களை வாழ்வித்தார் என்றும அந்த நாள் இரவே சிவராத்திரி என்றும் கூறுவர்.
அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் என்ற அஸ்திரத்தைப் பெற்றதும், கண்ணப்ப நாயனார் குருதி வடியும் லிங்க வடிவிலிருந்து ஈசனின் கண் மிது தனது கண்களைப் பெயர்த்தெடுத்து பொருத்தி முக்தி அடைந்ததும், பகீரதன் கடுந்தவமியற்றி கங்கையை பூமிக்கு கொணர்ந்ததும், மார்க்கண்டேயனுக்காக யமனையே சிவபெருமான் சம்காரம் செய்ததும், பார்வதி தேவி அருந்தவமியற்றி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்றுச் சிவனையே உமையொரு பாகனாகச் செய்தது, ஆகிய அனைத்தும் இப்புண்ணிய தினத்தில் நிகழ்ந்தவை என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபிரான், சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் ஒரு நாழிகை, லிங்கத்தில் தோன்றியருளினார் என்பதாலேயே அன்று இரவெல்லாம் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று ஒவ்வொரு ஜாமத்திலும் ஒவ்வொரு அலங்காரமும், விதவிதமான அபிஷேகங்களும் செய்யப்படுகிறது.
குறிப்பாக 1-வது ஜாமத்தில் பஞ்ச கவ்விய அவிஷேகம், வில்வ அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாற்சாதம் நிவேதனம், செம்பட்டு போர்த்தப்பட்டு, சிவபுராணம், ரிக் வேதம் தோத்திரம் பாடப்படுகிறது. பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம் மணம் கமிழ, சாம்பிராணி, சந்தனக்கட்டை புகை போடப்பட்டு தீபாராதனை நடக்கிறது.
2-வது ஜாமத்தில் பஞ்சாமிர்தம் அபிஷேகம், குருத்தை அலங்காரம், துளசி அர்ச்சனையும், பாயசம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும், மஞ்சள் பட்டு போர்த்தப்பட்டும், யஜூர் தேவம், கீர்த்தித் திருவகவல் தோத்திரமும், அகில், சந்தனம் மணம், சாம்பிராணி, குங்குமம் புகை போடப்படுகிறது.
3-வது ஜாமத்தில் தேன் அபிஷேகமும், மூன்று இதழ் வில்வமும், ஜாதி மலர் அர்ச்சனையும், என் அன்னம் நிவேதனமும், வெண்பட்டு போர்த்தப்பட்டு, சாமதேவம், திருவ்ண்டப்பகுதி தோத்திரமும், கஸ்தூரி சேர்ந்த சந்தானம் மணம், மேகம், கருங்குங்கிலியும் புகை போடப்பட்டு, ஐந்து முக தீபாராதனை நடக்கிறது.
4-வது ஜாமத்தில் கருப்பஞ்சாறு, வாசனை நீர் அபிஷேகமும், கருநொச்சி அலங்காரம், நந்தியாவட்டை அர்ச்சனையும், வெண்சாதம் நிவேதனமூம், நீலப்பட்டு போர்த்தப்பட்டு, அதர்வன வேதம், போற்றித் திருவகவல் தோத்திரம் பாடப்பட்டு, புணுகு சேர்ந்த சந்தனம் மணம் பரப்பப்பட்டு, கற்பூரம், இலவங்கம் புகை போடப்பட்டு மூன்று முக தீபம் ஏற்றப்படுகிறது. முறையாக விரதம் இருந்து பூஜை செய்தால் சிவனருள் கிடைக்கும் எல்லா சவுபாக்கியங்களையும் அடையலாம் என்பது நம்பிக்கையாகும்.
மனத் தெளிவிற்கு சிவராத்திரி விரதம் - காணொளி
Reviewed by NEWMANNAR
on
February 27, 2014
Rating:

No comments:
Post a Comment