மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விரைவில் விலகும் மரச்சட்டங்கள், பெல்ட்டுகள் பார்த்ததாக தகவல்
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மரச்சட்டங்கள், பல வண்ண பெல்ட்டுகள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மாயமான மலேசிய விமானம் தொடர்பான மர்மம் விரைவில் விலகும் என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் விமானத்தை கண்டுபிடிக்க 26 நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள், கப்பல்கள் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடப்பது செயற்கைகோள் புகைப்படம் மூலம் தெரிந்திருப்பதாக ஆஸ்திரேலியாவும், சீனாவும் கூறியுள்ளன. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 2,500 கி.மீ. தொலைவில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே, அப்பகுதியில் மரச்சட்டமும், பல வண்ண பெல்ட்டுகளுடன் ஒரு சில உடைந்த பொருட்களும் மிதப்பதை ஆஸ்திரேலிய மீட்பு குழுவினர் பார்த்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் டோனி அபோட் கூறியுள்ளார். பப்புவா நியூ கினியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவின் தேடுதலுக்கு உட்பட்ட பகுதியில் மரச்சட்டம் ஒன்றும், பல வண்ண பெல்ட்டுகளுடன் சில பொருட்களும் கடலில் மிதப்பதை மீட்பு குழுவினர் பார்த்துள்ளனர். ஏற்கனவே, ஆஸ்திரேலியாவைப் போலவே சீனாவும், தெற்கு இந்திய கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக கூறியிருக்கிறது. இதனால், மாயமான விமானம் தொடர்பான மர்மம் விரைவில் விலகும். தேடுதல் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான விமானங்களும், கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதியில் கடலுக்கடியில் என்ன கிடக்கிறது என்பதை கண்டுபிடித்து விடுவோம்‘ என கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் கடலோர பாதுகாப்பு படை அளித்த தகவலில், ‘சீன செயற்கைகோள் தகவலின் அடிப்படையில் 8 விமானங்கள் சுமார் 59,000 சதுர கி.மீ. பரப்பளவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. மரச்சட்டம், பெல்ட்டுகள் கிடப்பதாக கூறப்பட்ட பகுதியில் உடனடியாக விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதை மறுபடியும் தேடும் போது கிடைக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது. இத்தகைய மரச்சட்டங்கள், பெல்ட்டுகள் விமானத்தில் பொருட்களை கட்டி வைப்பதற்காக பயன்படுத்தப்படுபவை. கப்பலிலும் இவற்றை பயன்படுத்துவார்களாம். இதனால், குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப்பகுதியில்தான் விமானம் கிடக்கலாம் எனவும் உறுதியாக நம்பப்படுகிறது.
மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விரைவில் விலகும் மரச்சட்டங்கள், பெல்ட்டுகள் பார்த்ததாக தகவல்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment