நந்திக்கடலின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்கல்: வடமாகாண சபை ஆய்வு- படங்கள்
வட்டுவாகல் நந்திக்கடல் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்குதல் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஆய்வு நேற்று இடம்பெற்றது.
முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதரலிங்கம், வடமாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன், சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் லிங்கநாதன், அஸ்மின் ஆகியோரை வட்டுவாகல் பிரதேசத்தவர்கள் சகிதம் அழைத்துச்சென்ற சக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அப்பகுதிகளை அவர்களுக்கு காண்பித்ததோடு அதிகப்படியான சேற்றினால் அவதிப்படும் மீனவர்களின் நிலையையும் விளக்கினார்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
கடந்த மாகாணசபை கூட்டத்தொடரின் 7 வது அமர்வில் நந்திக்கடலின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்குதல் தொடர்பில் பிரேரணை ஒன்று ரவிகரனால் முன்வைக்கப்பட்டது.
அதாவது,
மிகப்பெரிய அளவில் இறால் மீன்கள் பிடிபடும் நந்திக்கடலின் பகுதிகளில் சேறு அதிகமாக உள்ளதால் நீர்த்தேக்கம் குறைவாக உள்ளதாகவும் கோடை காலங்களில் நீர் வற்றுவதால் இதனை நம்பியுள்ள மக்கள் தொழில் செய்ய முடியாமல் வறுமைக்கு தள்ளப்படுவதாகவும் இதனால் சுமார் 2 கிலோ மீற்றர் துாரத்திற்கு முட்டி நிக்கும் சேற்றினை குறைந்தது 2 அடி ஆழத்திற்காவது அள்ளுவதன் மூலம் சிறுகடலின் ஆழம் அதிகரிப்பதால் தண்ணீரின் அளவும் அதிகரிக்க மீன் இறால் உற்பத்திகள் அதிகமாக இடம்பெறும் என அப்பிரேரணையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம் புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞன் மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல், செல்வபுரம், கோயில் குடியிருப்பு, மணற்குடியிருப்பு, வண்ணாங்குளம், கள்ளப்பாடு, சிலாவத்தை, தீயோகுநகர், உணாப்பிலவு, முல்லை நகர், கரைச்சிக்குடியிருப்பு, வற்றாப்பளை, ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள சிறுகடல் மீனவர்கள், இரணைப்பாலை என பெருந்தொகையான கிராமங்களிலுள்ள மீன்பிடியை நம்பி வாழும் குடும்பங்களும் வீச்சுத்தொழிலை பகுதிநேரத்தொழிலாக செய்துவருபவர்களும் சேற்றினால் எதிர்கொண்ட இடர்பாடுகள் களையப்படுவது மட்டுமல்லாது அவர்களின் வாழ்
வாதார மேம்பாட்டிற்கும் நந்திக்கடலை ஆழமாக்குதல் அவசியமாகிறது என மேற்படி பிரேரணையில் விளக்கப்பட்டிருந்தது.
கடந்த மாகாண சபையின் 7வது கூட்டத்தொடரில் ஏகமனதாக மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நேற்று நந்திக்கடலை பார்வையிடவென வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர், வடமாகாணசபை அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரை அழைத்துச்சென்ற சக வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் வட்டுவாகல் நந்திக்கடல் பகுதிகளை காண்பித்ததோடு சேற்றினால் மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளையும் விளக்கினார்.
நீரினால் நிரம்பிய பகுதிகள் தற்பொழுது சேறு முட்டி நிற்பதும் சேற்றின் மிகுதியால் மீனவர்கள் அவதிப்படுவதும் நேரடியாக அவதானிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள், நந்திக்கடலின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சேற்றினை அள்ளுவது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கை அளித்தார்
நந்திக்கடலின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்கல்: வடமாகாண சபை ஆய்வு- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 21, 2014
Rating:

No comments:
Post a Comment