அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் என்ற சொல்லை அரசு பாவப்பட்ட சொல்லாக கருதுகிறதா ? : மனோ கணேசன்

கொழும்பு தமிழ்ச் சங்க ஒழுங்கை என்ற பெயரில் இருந்த 'தமிழ்" என்ற சொற்பதத்தை அகற்றிவிட எத்தனிப்பதன் மூலம் இந்த அரசு, தமிழ் என்ற சொல்லை பாவப்பட்ட சொல்லாக கருதுகிறதா? இன, மத பெயர்களில் ஒழுங்கைகள் இருக்க கூடாது என்றால் வெள்ளவத்தை 'சர்வதேச பௌத்த மத்திய நிலைய வீதி"  என்ற பெயர் எப்படி இருக்க முடியும்?

தமிழ் மொழி, இந்நாட்டு தமிழ் பேசும் மக்களின்  தாய்மொழி. எங்கள் இன அடையாளமும் அதுதான். அது ஒரு பெருங்கடல். ஆகவே அவலை நினைத்து உரலை  இடிக்கும் இந்த அரசு, வேண்டாத வேலை செய்து தமிழ் மக்களை இன்னமும் தூரத் தள்ளி வைத்து, இது உங்கள் நாடு அல்ல என்று சொல்கிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

கொழும்பில் 70 வருட கலாசார பெருமை கொண்ட தமிழ் சங்கத்தை கௌரவிக்கும் முகமாகவே  மாநகரசபையில் தமிழ்ச் சங்க ஒழுங்கை என்ற பிரேரணையை, எனது ஒப்புதலுடன்  நமது சிரேஷ்ட உபதலைவர் வேலணை வேணியன் கொண்டு வந்தார். முறைப்படி ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு, அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இந்த பிரேரணையில் இப்போது தமிழ் என்ற சொல்லை அகற்றி திருத்தம் கொண்டுவர அரசு எத்தனிக்கின்றது.

இதை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம்.  அரசு விரும்பினால், தமிழை அகற்றிவிட்டு பெயர்பலகையை திறந்து விழா நடத்தி கொள்ளட்டும். தமிழ் மொழி உரிமையை உறுதிப்படுத்தி அமுல் செய்ய வந்ததாக சொல்லிக்கொள்ளும்  அமைச்சர் வாசுதேவ இந்த பெயர்பலகையை திறந்து வைக்கட்டும்.

வெள்ளவத்தை 'சர்வதேச பௌத்த மத்திய நிலைய வீதி"  என்ற பெயரில் உள்ள பௌத்த என்ற சொல்லை அகற்ற சொல்லி நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதில்லை. இங்கே தமிழை அகற்றி விட்டு அங்கே பௌத்தத்தை வைத்திருப்பதன் மூலம் இந்த அரசின், உண்மை முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. பௌத்தம் என்ற பெயர் வேண்டாம் என்று சொல்ல நாங்கள் இன, மதவாதிகள் அல்ல. ஆகவே அது அப்படியே  இருக்கட்டும். இந்த அரசு ஒரு இன, மதவாத அரசு. தயவு செய்து இந்த அரசின் இனவாத-மதவாத முகத்தை முகமூடி அணிவித்து காப்பாற்ற முயல வேண்டாம் என அரசில் உள்ள இடதுசாரி, தமிழ், முஸ்லிம் கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன். 

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தமது மக்கள் தொடர்பாக சுயாதீனமாக செயல்படுவதை இந்த அரசு விரும்புவதில்லை.  சிறுபான்மை கட்சிகள் தமது எடுபிடிகளாக, தமது அரசியல் நோக்கங்களை  நிறைவேற்ற மட்டுமே பயன்பட வேண்டும் என இந்த மகிந்த அரசு நினைக்கின்றது. 

அதனால்தான் தேர்தல்களில் அரசாங்கத்தின் பங்காளி சிறுபான்மை கட்சிகளை தமது சொந்த சின்னங்களில் போட்டியிட வைத்து தமிழ், முஸ்லிம் வாக்குகளை சூறையாடி சிதறடிக்க இந்த அரசு முயலுகிறது. இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரினால் நடத்தப்பட்ட  தேர்தலில் வெற்றி பெற்று பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள் சுயாதீனமாக செயல்பட முனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்த அரசு வெறுக்கிறது. மக்கள் ஆணையை பெற்ற வடமாகாணசபையை இந்நாட்டு சட்டப்படி நடத்தப்பட விடாமல் படாத பாடு படுத்துகிறது.

 தமிழ், முஸ்லிம் கட்சிகள் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார தேவைகளை முன்னெடுக்க முயலும் போதெல்லாம் இந்த அரசு அதில் தலையிட்டு தடை போடுகிறது. இதனால்தான் இன்று இந்த அரசு சர்வதேச எதிர்ப்பை, நாளொரு வண்ணமாக சம்பாதித்து வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.   
தமிழ் என்ற சொல்லை அரசு பாவப்பட்ட சொல்லாக கருதுகிறதா ? : மனோ கணேசன் Reviewed by NEWMANNAR on March 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.