ஜெனீவா பிரேரணை இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றி – டேவிட் கெமரன்

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் கூறுகின்றார்.
யுத்தம் இடம்பெற்றபோது, இரண்டு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முறையான சுயாதீன விசாரணை நடத்த தவறியமை இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பெறுபேற்றினை அடைவதற்கு பிரித்தானியா நிறைவேற்றிய கடமை பெருமைக்குரியது எனத் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர், இலங்கை ஜனாதிபதி சர்வதேச விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச விசாரணைக்கான பிரேரணை இலங்கையின் ஒத்துழைப்பின்றி முன்நோக்கி செல்வதற்கு உகந்த வழிமுறையாகும் என தாம் கருதவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வசமிருந்த பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்ததன் ஊடாக இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை பிரேரணையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார, சமூக, கலாசார நல்லிணக்கத்தை அடைவதற்கான தீர்வினை காணும் முயற்சியில் இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தரப்பினருடன் தாம் கொண்டுள்ள தொடர்பினை தொடர்ந்தும் பேணுவதாக ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கான மிகவும் செயற்றிறன் மிக்க, வெளிப்படையான நிகழ்ச்சி நிரலொன்றை முன்னோக்கி இட்டுச் செல்வதற்காக, தேசிய மற்றும் சர்வதேச தரப்பினருடன் இணைந்து செயற்படுமாறும் ஜூலி பிஷொப் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெனீவா பிரேரணை இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றி – டேவிட் கெமரன்
Reviewed by NEWMANNAR
on
March 28, 2014
Rating:

No comments:
Post a Comment