அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்டவை சிலைகளின் கை, கால்கள் அல்ல: முன்னாள் நீதிபதி

மன்னார் புதைகுழிகளில் மீட்கப்பட்டவை பண்டைய காலத்து சிலைகளின் கைகளும் கால்களும் அல்ல. அது மனிதர்களின் எலும்புக் கூடும் என முன்னாள் நீதிபதியும் ஐ.தே.கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினருமான வராவெவ தெரிவித்துள்ளார்.

மன்னார் புதைகுழி பழைய மயானம் என தொல்பொருள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நாமல் கொடித்துவக்கு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீதிமன்ற செயற்பாடுகளை திசைத் திருப்பும் வகையில் தொல் பொருள் திணைக்களம் மக்களை தவறாக வழி நடத்தியுள்ளது.

இப்படியான சம்பவங்களின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தலையிட வேண்டிய பணிகள் எதுவுமில்லை.

நிலத்தை அகழும் போது மனித எலும்புக் கூடும் கிடைத்தால் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

எலும்புக் கூடும் கண்டுப்பிடிக்கப்பட்டால் முதலில் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். பொலிஸார் அது பற்றி பிரதேசத்தில் உள்ள நீதவானுக்கு அறிவித்து விசாரணைகளை நடத்தி அகழ்வு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

நீதவான் இதற்கான சட்ட வைத்திய அதிகாரியின் சேவை பெற்று, எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டவர்கள் எப்படி இறந்தனர், அவர்களின் வயது மற்றும் காலம் தொடர்பாக நிபுணத்துவ அறிக்கையை பெறவேண்டும்.

இலங்கை சட்ட வைத்திய அதிகாரிகளிடம் அறிக்கையை பெறும் சிரமங்கள் இருந்தால், நீதவான் வெளிநாட்டு சட்ட வைத்திய நிபுணர்களில் உதவியை பெற முடியும்.

இது சட்ட வைத்திய விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்ட விடயமே அன்றி, தொல்பொருள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. புதைகுழியில் கிடைத்திருப்பது சிலைகளில் கை, கால்கள் அல்ல. மனிதர்களின் எலும்புக் கூடுகள்.

எந்த அறிவியல் ரீதியான ஆய்வுகளின் படி அங்கு மீட்கப்பட்ட எலும்புகள் 100 ஆண்டுகள் பழமையானது என நாமல் கொடித்துவக்கு கூறுகிறார்?. அவர் ஆய்வுகளை மேற்கொண்டார?. வெறுமனே மை வெளிச்சம் பார்ப்பது போல் பொறுப்பு வாய்ந்த அதிகாரி கதைகளை கூறக் கூடாது.

பெட்டிகளில் வைத்து சடலங்களை அடக்கம் செய்யவில்லை என்று கூறும் இந்த அதிகாரிக்கு சாதாரண வரலாறுக் கூட தெரியாத?. 100 வருடங்கள் என்பது 1914 ஆம் ஆண்டு.

1914 ஆம் ஆண்டில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் காட்டு வாசிகள் அல்ல. மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கப்படுகிறது.

மன்னார் புதைக்குழி தொடர்பில் நியாயமான நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே நாம் கோருகிறோம். அப்படியான விசாரணை நடத்த முடியாவிட்டால், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி வராவெவ குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை தண்ணீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி இந்த மனித புதைக்குழியை கண்டுப்பிடித்தனர்.

இதன் பின்னர் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரத்தினத்தின் உத்தரவின் பேரில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் 84 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. எவ்வாறாயினும், தொல் பொருள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மன்னார் புதைக்குழி 50 முதல் 60 ஆண்டுகள் பழைமையானது எனக் கூறியிருந்தார்.

அங்கிருந்து மீட்கப்பட்ட சில எலும்புகள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழையானவை எனவும் உடல்களை பெட்டிகளில் வைத்து அடக்கம் செய்யும் பழக்கம், மயானம் அமைந்திருந்த பிரதேசத்தில் வசித்த மக்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.

1936 மற்றும் 1937 ஆம் ஆண்டுகளில் உலர் வலயப் பகுதிகளில் பரவிய மலேரியா நோயினால் இறந்தவர்கள் அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்டவை சிலைகளின் கை, கால்கள் அல்ல: முன்னாள் நீதிபதி Reviewed by NEWMANNAR on March 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.