மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்டது இடுகாடு தான் என்கிறார் சிறிலங்கா தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர்
மன்னார் மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்டது புதைகுழி அல்ல என்றும் அது 1930களில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகாடு தான் என்றும் சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம், குடிநீர் குழாய்களை புதைப்பதற்காக குழி தோண்டிய போது, மாந்தைப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைடுத்து நடத்தப்பட்ட தோண்டும் பணிகளின் போது, சுமார் 80 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்துக்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
சேனாரத் திசநாயக்க கருத்து வெளியிடுகையில்,
நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி, 1930களில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகாடு என்று தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “வழக்கமாக இடுகாடுகளில் புதைக்கப்படுவது போல, இங்கு சடலங்கள் வயிற்றின் மீது கைகள் வைத்தும், தலைகள் மேற்குப் புறமாக வைத்தும் ஒரே திசையில் புதைக்கப்பட்டுள்ளன.
சாதாரண இடுகாட்டுக்கும் புதைகுழிக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருக்கும். சாதாரண இடுகாட்டில், சடலங்கள் தனித்தனியாக – முறைப்படி புதைக்கப்படுவது போன்றில்லாமல், புதைகுழியில், கண்டபடியும், ஒன்றின் மேல் ஒன்றாக- ஒழுங்கற்றும் புதைக்கப்பட்டிருக்கும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை, இடுகாடு என்று நிறுவ சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், அந்த இடத்தில் இடுகாடு ஒன்று இருந்தமைக்கான எந்த வரலாற்று ஆவணங்களோ வரைபடங்களோ இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்டது இடுகாடு தான் என்கிறார் சிறிலங்கா தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:

No comments:
Post a Comment