தமிழ் சினிமாவின் கோடீஸ்வரிகள்
நம்ம ஹீரோக்கள் கோடானு கோடி சம்பளத்தை எப்போதோ தாண்டியிருக்க, இப்போதுதான் ஹீரோயின்கள் சிலருக்கு 'கோடி லேடி’ ஸ்டேட்டஸ் கிடைத்திருக்கிறது. இன்றைய டிரெண்டில் கிறங்கடிக்கும் தமிழ் சினிமா ஹீரோயின்களின் பட்டியல்,,,
குயின் நயன்தாரா
லைம்லைட் பயணம்: 'சந்திரமுகி’ வரை நயன்தாராவின் கிராஃப் வேறு. அதன் பிறகு அவர் வளர்ச்சி வேறு. உதட்டைக் கடித்தபடி போஸ்டருக்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு சிம்புவுடன் காதலில் தீவிரமாக இருந்தார். ஆனால், அந்தக் காதல் தோல்வியின் கசப்பை மறக்க, 'அன்லிமிட்டெட்’ கிளாமருடன் 'பில்லா’வில் நடிக்க, எகிறியது ஹிட் ரேட். அதே சமயம் சுடிதார் காஸ்ட்யூம்களில் மட்டுமே 'யாரடி நீ மோகினி’யில் வசீகரித்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் எந்தப் படத்திலும் நடிக்காமல்... ஆனால், செய்திகளிலேயே நயன் இருக்க உதவியது, பிரபுதேவாவுடனான காதல்-மோதல். அந்தக் கசப்பு அத்தியாயம் முடிந்து சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த பிறகு, 'ஆரம்பம்’, 'ராஜா ராணி’, 'நீ எங்கே என் அன்பே’ என ஹிட் ரூட் பிடித்த நயன், இப்போதைக்கு தமிழ் சினிமாவின் ராணித் தேனி!
க்யூட் நோட்: ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இவர் அளவுக்கு வேறு எந்த நடிகையும் பிரச்னைகளை எதிர்கொண்டு, அதில் இருந்து மீண்டது இல்லை. அந்த தில், நயன் ஸ்பெஷல்!
மார்க்கெட் மதிப்பு: சிம்புவுடன் நடிக்கும் 'இது நம்ம ஆளு’க்காக 2 கோடி, உதயநிதியுடனான 'நண்பேண்டா’க்காக ஒரே பேமென்ட்டில் 2.30 கோடி என பில் போட்டிருக்கிறார்!
சக்சஸ் மிஸ் சமந்தா
லைம்லைட் பயணம்: தமிழில்தான் அறிமுகம். ஆனால், தெலுங்கில்தான் முதலில் 'ஸ்டார்’ அந்தஸ்து பெற்றார் சமந்தா. 'விண்ணைத்தாண்டி வருவாயா’வின் தெலுங்குப் பதிப்பில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவை, 'ஜெஸ்ஸி... ஜெஸ்ஸி’ எனக் கொஞ்சியது ஆந்திரா. உடனே சுதாரித்து 'கிளாமர் கிராமர்’ பிடித்தவர், அதன் பிறகு தெலுங்கில் நடித்ததெல்லாம் குறைந்தபட்சமே சூப்பர் ஹிட். தமிழில் 'நீதானே என் பொன்வசந்தம்’ மூலம் 'அட... அழகி நடிக்கிறா!’ என்று ஆச்சர்யம் விதைத்தார். தற்போது 'அஞ்சான்’, 'கத்தி’ என தமிழின் சூப்பர் புராஜெக்ட்களின் புறா இவர்தான்!
க்யூட் நோட்: அஞ்சு கெஜம் பட்டோ, ஆறு இன்ச் மினி ஸ்கர்ட்டோ... உறுத்தாமல் பொருந்தும் உடம்பு, லேசாகத் தலைசாய்த்துச் சிரிக்கும் குழந்தைச் சிரிப்பு!
மார்க்கெட் மதிப்பு: அக்கட பூமியில் கோடிக்கும் மேல் வாங்குபவர், தமிழில் இறங்கியடிக்க வேண்டும் என்று, கொஞ்சம் குறைத்து வாங்குகிறார். 'அஞ்சான்’க்கு 1 கோடி என்கிறார்கள். பொண்ணு மார்க்கெட் மாஸ் இன்னும் கிடுகிடுவென எகிறும்!
குட்டி குஷ்பு ஹன்சிகா
லைம்லைட் பயணம்: புஸுபுஸு தேகம், பப்ளிமாஸ் கன்னம்... என முதல் பார்வையிலேயே 'குட்டி குஷ்பு’ என அழகியை அள்ளி அணைத்துக்கொண்டது தமிழ்ச் சமூகம். இன்று வரை 'நச் நடிப்பு’ இல்லையென்றாலும், சிம்புவுடன் கிச்கிச், ஹீரோக்களுடன் இச்இச் எனப் பரபரப்பில் இருக்கிறார்!
க்யூட் நோட்: ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் 'மதர் மனசு’!
மார்க்கெட் மதிப்பு: தெலுங்கில் 2 கோடி, தமிழில் 1.30 கோடி என நிரம்புகிறது கால்ஷீட்.
சின்சியர் சீனியர் அனுஷ்கா
லைம்லைட் பயணம்: ஆந்திராவை அலறவைத்துக்கொண்டிருந்த சமயம், தமிழில் 'ரெண்டு’ படத்தில் நடித்தார். ஆறு அடி உயரமோ என்னவோ, கோலிவுட் அப்போது அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தெலுங்கு டப்பிங் 'அருந்ததி’ மூலம் தமிழகத் தாய்குலங்கள் வரை ரீச் அடித்தார். அடுத்தடுத்து விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி... என உச்ச நட்சத்திரங் களுடன் டூயட் ஆடியவர், இப்போது ரஜினி, அஜித் படங்களின் ஹீரோயின்!
க்யூட் நோட்: கமர்ஷியல் மரியாதை தேவையே இல்லை என்பதில் உறுதியாக இருப்பது. 'மஹாபலி, ருத்ரம்மா தேவி’ போன்ற கிளாசிக் முயற்சிகளுக்காக வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிப்பது.
மார்க்கெட் மதிப்பு: 'சிங்கம்-2’வுக்காக 90 லட்சம் வாங்கியவர், இப்போது 'லிங்கா’ வுக்காக 1.20 கோடி தொட்டிருக்கிறார்!
ஸ்லிம் அண்ட் ஸ்லீக் ஸ்ருதி
லைம்லைட் பயணம்: கமல் மகளுக்கு, சினிமா அத்தனை இனிய அறிமுகம் அளிக்கவில்லை. அறிமுகமான இந்திப் படம் ஃப்ளாப், 'ஹீரோயின் லுக் இல்லையே’ விமர்சனங்கள் என முதல் மூன்று வருடங்கள் பதற்றத்திலேயே இருந்தார் ஸ்ருதி. ஆனால், தெலுங்கு 'கப்பார் சிங்’ ஹிட் ஸ்ருதியின் இமேஜை அலேக்காக மாற்றியது. இப்போது ஸ்ருதி தெலுங்கில் ஹிட் ராசி 'ரேஸ் குர்ரம்’!
க்யூட் நோட்: சித்தார்த், தனுஷ், சுரேஷ் ரெய்னா, அனிருத் என்று ரிப்பீட் அடிக்கும் கிசுகிசுக்களைக் கண்டுகொள்ளாத துணிச்சல், பாலியல் தொழிலாளியாக 'டி-டே’ படத்தில் நடிக்கும் தில்!
மார்க்கெட் மதிப்பு: தெலுங்கு சினிமாக்களுக்கு 2 கோடி. தமிழில் 'பூஜை’ படத்துக்கு 1.5 கோடி!
பத்தாம் வகுப்பு 'மகா’லட்சுமி
லைம்லைட் பயணம்: பல வருடங்களாக 'ஹிட் ஹீரோயின்’ அந்தஸ்தைத் தக்கவைத்திருக்கும் ஸ்கூல் பொண்ணு லட்சுமி மேனன். சிநேகா விட்டுச்சென்ற 'ஹோம்லி மல்லி’ இடத்தைப் பிடித்தவர், இதுவரை தமிழில் ஃப்ளாப் படத்தில் நடித்ததே இல்லை. சசிகுமார், விமல், சித்தார்த் என்று ரகளையாக நடிப்பதாலோ என்னவோ, தல-தளபதிகளின் பார்வை இவர் பக்கம் திரும்பவே இல்லை!
க்யூட் நோட்: அதட்டும் கண்கள், அடக்கமான அழகு, பாந்தமான நடிப்பு... என 'சிம்பிள் ஏஞ்சல்’ தோற்றம்!
மார்க்கெட் மதிப்பு: ஹிட் படங்களாகவே நடித்திருந்தாலும் 'நான் சிகப்பு மனிதன்’ படத்துக்குப் பெற்ற 55 லட்சம்தான் இதுவரையிலான அதிகபட்சம்!
எவர்கிரீன் த்ரிஷா
லைம்லைட் பயணம்: 'நம்ம ஊரு பொண்ணு’! 'மிஸ் மெட்ராஸ்’ பட்டத்துடன் சினிமாவுக்கு வந்தவர், இப்போது சென்னையின் பெருமித அடையாளங்களில் ஒருவர். 'சாமி’, 'கில்லி’ என மாஸ் பல்ஸ் பிடித்த சினிமாக்களின் வெற்றியில் த்ரிஷாவுக்கு அழகிய பங்கு உண்டு. 'விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி... கிளாஸிக் பெஸ்ட். தனக்குப் பின் மூன்றாவது தலைமுறை ஹீரோயின்கள் வந்த பிறகும், 'மங்காத்தா’, 'என்றென்றும் புன்னகை’ என டஃப் கொடுப்பது த்ரிஷா ஸ்பெஷல்!
க்யூட் நோட்: சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் தக்கவைத்திருக்கும் 'ஃப்ரெஷ் லுக்’!
மார்க்கெட் மதிப்பு: 'பூலோகம்’ படத்துக்கு 70 லட்சம் சம்பளம்!
வாரே வாவ் ஸ்ரீதிவ்யா
லைம்லைட் பயணம்: சிட்டி-பட்டிகளில் ஒரே ஓர் ஊதா கலர் ரிப்பன் கட்டிப் பறந்த 'ஹாஃப்- ஸாரி’ அழகி. பள்ளி யூனிஃபார்ம், அடிக்கும் நிறங்களில் தாவணி என ஸ்ரீதிவ்யா வந்து நின்றால், இப்போதைக்கு அடிச்சிக்க பக்கத்தில் ஆளே இல்லை. அடுத்தடுத்து நச் ஹீரோ, பளிச் படங்கள் வரிசை கட்டி நிற்பதால், 'ஊதா கலர் ரிப்பனின்’ மவுசு இனிமேல்தான் உயர உயர எகிறும்!
க்யூட் நோட்: முதல் படத்திலேயே இத்தனை மைலேஜ் சமீபத்தில் எந்த ஹீரோயினுக்கும் கிடைத்தது இல்லை!
மார்க்கெட் மதிப்பு: 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உபயத்தால், சலேரென 30 லட்சம் தொட்டிருக்கிறார்!
பிரியமுடன் ப்ரியா:
லைம்லைட் பயணம்: பிரியமான சிரிப்பு மட்டுமே ப்ரியா ஆனந்த்தின் ப்ளஸ். வேறு எந்த ஹீரோயின் அம்சங்களும் இவரிடம் இல்லை. ஆனாலும், மென்மழைத் தூறலாக வசீகரிப்பார். 'எதிர்நீச்சல்’, 'அரிமா நம்பி’ என ஹிட் ராசி ஹீரோயின்!
க்யூட் நோட்: குறைந்தபட்ச சம்ப ளத்தில் அதிகபட்ச பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கும் சின்சியர் நடிகை!
மார்க்கெட் மதிப்பு: 25-30 லட்சம் சம்பளம்!
ஆஹா ஆண்ட்ரியா
லைம்லைட் பயணம்: 'யார் எவர்?’ என்று தெரியாத காலத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நடித்தபோதே, விழி உயரவைத்தவர். ஜில் பாடகியாக ரசிக்கவைத்தவர், 'ஆயிரத்தில் ஒருவன்’, 'விஸ்வரூபம்’ என்று 'தில் தூள்’ பாத்திரங்களின் மூலம் 'கெத்து பார்ட்டி’ என்று பெயர் எடுத்தார். 'தரமணி’யின் செமத்தியான ஸ்டில்கள் அந்தக் கெத்தை அடுத்த ரவுண்டுக்கு அழைத்துச் செல்லும்!
ஸ்வீட் நோட்: குரல், உடல்மொழி, நடிப்பு, ஆளுமை என அத்தனை டிகிரிகளிலும் 'மோஸ்ட் வான்டெட் பெண்’ அடையாளத்துடன் இருப்பது!
மார்க்கெட் மதிப்பு: 25 லட்சம்!
திருமணம், நீண்ட இடைவெளி மற்றும் பிற காரணங்களால் இந்தப் பட்டியலில் தமன்னா, காஜல் அகர்வால், நஸ்ரியா, அஞ்சலி, அமலா பால், டாப்ஸி ஆகியோர் இடம்பெறவில்லை.
விகடன்
தமிழ் சினிமாவின் கோடீஸ்வரிகள்
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


.jpg)





No comments:
Post a Comment