தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர தவறைச் சுட்டிக்காட்டுவோரை அச்சுறுத்தக் கூடாது
தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர தவறைச் சுட்டிக் காட்டுவோரை அச்சுறுத்தக் கூடாது என்று கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
காலம் காலமாக இலங்கை கல்வியில் பல்வேறு குறைபாடுகள் எழுந்த வண்ணமுள்ளன. அதிலும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொதுப் போட்டிப் பரீட்சைகளில் தொடர்ந்தும் குறைபாடுகள் ஏற்பட்டவண்ணமுள்ளன. இதனை பல தடவைகள் நாமும் சுட்டிக்காட்டி வருகின்றோம்.
அவற்றைத் திருத்தி தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மத்திய கல்வி அமைச்சின் கடமையாகும். அதைவிடுத்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவோரை அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொள்வது கல்வித்துறைக்கே இழுக்கான விடயமாகும். தயவு செய்து கல்வி அமைச்சர் அத்தகைய பாணியைக் கைவிட்டு குறைகளைத் திருத்தி கல்வியில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் மத்திய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் வேண்கோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதில் கல்வி அமைச்சர் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடக்கூடாது. அவர்களின் கரிசனையில் ஏமாற்றங்கள் ஏற்படக்கூடாது. அந்த ஏமாற்றங்களும் விரக்திகளும் கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஏற்படுத்திய விளைவுகளை கல்வி அமைச்சர் அறிந்துகொள்ள வேண்டும்.
பொதுப் பரீட்சைகள் போட்டிப்பரீட்சைகளாகவுள்ள நிலையில் அதில் தவறுகளை ஏற்படுத்தி மாணவர்களையும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களையும் முட்டாள்களாக ஆக்கக்கூடாது. இதுதொடர்பில் பிரதிக் கல்வி அமைச்சர் மோகன்லால் கிறேயிடம் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.
அதனை ஏற்றுக் கொண்ட பிரதி அமைச்சர் இனிவரும் காலங்களில் கல்வித்துறையில் தவறுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வோம். என்று கூறிய பின்னரும் இதுபோன்ற தவறுகளை தொடர்ந்தும் விடுவது கல்வித்துறைக்கு ஆரோக்கியமானதல்ல.
மத்திய கல்வி அமைச்சர் தமது முடிவை மாற்றி சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி சரியான தீர்வை காணவேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேண்கோள் விடுத்துள்ளார்.
தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர தவறைச் சுட்டிக்காட்டுவோரை அச்சுறுத்தக் கூடாது
Reviewed by NEWMANNAR
on
August 16, 2014
Rating:

No comments:
Post a Comment