அண்மைய செய்திகள்

recent
-

ஓட்ட வீரர் செல்லத்துரை பாலசிங்கம் அவர்களின் அகத்திலிருந்து ...

வாழ்க்கையே ஒரு ஓட்டப்போட்டிதான் நூறு மீற்றர் அல்ல அதி வேகத்தில் ஓடி நிறைவு செய்ய மரதன் ஓட்டம்தான். மெல்ல மெல்ல ஓடி இலக்கை அடைய வேண்டும். அதற்கான வலுவும் ஆற்றலும், பயிற்சியும், முயற்சியும் இருக்கவேண்டும். ஆம் அவ்வாறே வாழ்க்கையிலே ஓட்டவீரனாக அதுவும் ஓய்வுபெற்ற கல்வித்திணைக்கள பணியாளனாக Starter - நிகழ்ச்சி  ஆரம்பிப்பாளராக மன்னார் மண்ணின் 'தங்க மகன்' ரன்னர் பாலா (Runner Bala) என  எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற 'மறைக்கப்பட்ட சாதனை மனதின் வேதனையோடு' வீரர் செல்லத்துரை பாலசிங்கம் அவர்களின் அகத்திலிருந்து ......

தங்களைப்பற்றிய நினைவுகள்?

எனது தந்தை கந்தசாமி செல்லத்துரை. தாயார் இளையதம்பி பூமணி. புதல்வர்கள் 15 பேரில் ஒருவனாக இணுவில், உடுவில் யாழ்ப்பாணம் தான் எனது சொந்த இடம். எனது தந்தையார் இலங்கை போக்குவரத்துச் சபையின் (CTB) இயந்திர பொறியியலாளர் ஆகையால் பணியின் நிமித்தம் மன்னார் வந்தார். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மகிமைகொள் மன்னார் மண்ணில்தான். தற்போது எழுத்தூர் கிராமத்தில் நான் மட்டுமல்ல எனது பிள்ளைகளும் ஓட்ட வீரர் வீராங்கனைகளே. மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றேன். 

உங்களை ஓட்ட வீரராக வெளிப்படுத்திய விதம்?

1965ல் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தான் முதல் ஓட்ட வீரனாக அறிமுகமாகினேன். அந்த முதல் போட்டியிலே முதலாம் இடத்தைப் பிடித்தேன். பாடசாலையை விட்டு வெளியேறிய பின்பும் எனது மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணியே பயிற்சியைத் தொடர்ந்தேன். ....

உங்களின் பாடசாலை ஆரம்பகாலம் பற்றி?

எனக்கு கோபம் அதிகம். யார் தப்பான முறையைப் பின்பற்றினாலும் கோபப்பட்டு கை நீட்டி விடுவேன். இதனால் பல பாடசாலைகள் மாறவேண்டிய சூழ் நிலை தோன்றியது. பல பாடசாலைகள் மாறிமாறி செல்வதால் எனது கல்வி மிகவும் பாதிப்பிற்குள்ளானது. பரீட்சையில் கூட முழுமையாக சித்தியடைய முடியவில்லை. ஆனால் எனது சிந்தனை முழுக்க முழுக்க ஒரு சிறந்த ஓட்ட வீரனாக மன்னாரில் பேசப்பட வேண்டும் என்பதே 

தங்களின் குரு பற்றி?

என்னுடைய குரு மட்டுமல்ல எல்லா வழிகளிலும் எனக்கு ஒரு தந்தையாக, தாயாக நல்ல நண்பனாக இருந்தவர் என்றால் நிச்சயமாக எனது குருநாதர் மாஸ்ரர்ஜீவரெட்ணம் தான் என் வாழ்வின் வழி. ஒளிமயமான வாழ்வைத் தந்தவர் என்று சொல்வேன்.


சிறந்த வீரராக நிலைநிறுத்திக்கொள்ள பயிற்சி கட்டாயம் தேவை. தங்களின் பயிற்சி பற்றி?

தற்போது ஒவ்வொருவரும் தங்களுக்கென தனியான பயிற்சியாளரை (Coacher) வைத்திருப்பார்கள். அல்லாவிடில் பாடசாலைச் சங்கங்களோ அமைப்புக்களோ அதற்கான ஒத்துழைப்பை வழங்கும். என்னுடைய காலப்பகுதியிலே இவ்வாறான எந்த உதவியுமே இல்லை. எனக்கு பயிற்சியாளரும் இருக்கவில்லை. ஊக்குவிப்பாளராக ஜீவரெட்ணம் மாஸ்ரர் மட்டுமே இருந்தார். தனியாளாகவே என்னை நான் வளப்படுத்தினேன். அதிகாலை நான்கு மணிக்கும் மதியம் இரண்டு மணிக்கும் மாலை ஆறுமணிக்கும் என மூன்று வேளையிலும் மூன்று பருவத்திலும் கடுங்குளிர், மதியம், மழைக்காலமென எதுவானாலும் எனது பயிற்சி தொடரும். ஏனென்றால் இலங்கையிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் காலநிலைக்கு ஏற்றவாறு ஓடவேண்டும். 1ம் நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணமே. 

உங்கள் உடல் வலுவை அதிகரிக்க எவ்வாறான உணவு முறையினைப் பின்பற்றினீர்கள்?

நான் ஏழைக்குடும்பம் ஆதலால் எங்கள் வீட்டில் மொத்தம் 15 பிள்ளைகள். பொருளாதாரம் சொல்ல வேண்டியதில்லை. நான் படிப்பை இடைநிறுத்திய பின் முழுநேர ஓட்ட வீரனாகவே என்னை உருவாக்கினேன். அன்றைய சூழலில் கடற்கரையில் மீன் கூடை சுமந்தால் ஒரு கூடைக்கு 1 ருபாய் தருவார்கள். தினமும் இரு வேளையாக 16 மணித்தியாலம் வேலை செய்வேன். ஒவ்வொரு சனிக்கிழமைகளில் தான் சம்பளம் தருவார்கள். அதைபெற்றுக் கொண்டு முருங்கனுக்கு சென்று ஒன்று 18 சதம் ஒரு ஊர்க்கோழி முட்டை, மாமைற், நெத்தலி, கோர்லிக்ஸ், காரல் மீன் போன்வற்றையும் வாங்கி எனது உடல் வலுவாக மாற்றிக் கொண்டேன். நிறைவான சத்தான சாப்பாடு தேவை அதிக மீன் சாப்பிட வேண்டும். இறைச்சி, பால் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஓட்டத்தில் தெரிந்து கலந்து கொண்டவைகள்?

100m, 200m,400m,800m,1500m,5000m Relay, மரதன் போன்வற்றில் கலந்து கொண்டுள்ளேன். பலமுறை 1ம் இடத்தையும் சில முறை 2ம் 3ம் இடத்தையும் பெற்றுள்ளேன்.

ஒரு ஒட்ட வீரருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என நீங்கள் கருதுபவை?

கடமையுணர்வு, ஒருமைப்பாடு, பணிவு மைதானத்தில் இறங்கியவுடன் நான் பெரிய ஓட்ட வீரன் என்று பந்தா காட்டாமல் சக வீரரோடு சகஜமாகவும், அன்பாக பேசி அவர்களையும் உற்சாகப்படுத்தனும் சண்டைகள் தவிர்த்து சமத்துவம் பேண வேண்டும். அத்தோடு தொடர்ச்சியான பயிற்சியும் தரமான சத்துள்ள உணவும். என்னால் முடியும் என்ற எண்ணம் (Will power) இருக்க வேண்டும் இயலாது என்று ஒரு போதும் எண்ணக் கூடாது.

மைதானத்தில் போட்டிக்கு தயாராகும் போது உங்கள் மனநிலை?

மைதானத்தில் இறங்கியதும் மண்ணைத் தொட்டு வணங்குவேன். பின் வானத்தை பார்ப்பேன் பின் அமைதியான முறையில் மனதை ஒருநிலைப் படுத்தவேன். போட்டி இலக்கு மட்டுமே என் நினைவில் இருக்கும். போட்டியை நிறைவு செய்யும் போதும் புன்னகையுடனே நிறைவு செய்வேன்...

உங்கள் முதலாவதும் இதுவரை முறியடிக்கப்படாதுமான அகில இலங்கை சாதனை ஓட்டம் (தங்கப் பதக்கம் - Gold medal) பெற்றுக் கொண்டதைப் பற்றி?

1972 ஆம் ஆண்டு எனது குரு நாதருடன் ஜீவரெட்ணம் மைதானத்தில் நிற்கிறேன். அங்கு 100m ஓட்டநிறைவுற்று 800m எங்களுக்கான போட்டி தயாராகிக் கொண்டு இருக்கும் போது என்னை நோக்கி வந்த ஐந்து சிங்களப் பிள்ளைகள் அதில் 100m போட்டியில் முதல் நிலை பெற்றவரும் என்னைப் பார்த்து ஏளனமாகப் பேசி சிரித்தனர். காரணம் நான் நிண்ட கோலம் மற்றவீர்கள் புதிய சப்பாத்து, அவர்கள் பெயர் பொறித்த ஜேசி அணிந்திருந்தார்கள். காலில் சப்பாத்துக் கூட நல்லாக இல்லை. அப்போது ஒலிபரப்பினார்கள். Start  800m Get ready this first call அப்போது எனக்கு சிங்களமும் ஆங்கிலமும் பெரிதாக தெரியாது. இப்பதெரியும். நான் தயாராகி 3ம் இலக்கத்துடன் ஓடினேன் அன்று தான் எனது இலக்கான தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்க பதக்கம் சூடினேன்.

அங்கு நிகழ்ந்தவை பற்றி?

நான் மிகுந்த களைப்போடு அதேவேளை மிகவும் மகிழ்ச்சியாக மைதானத்தில் நிற்கின்றேன். எதிர்பாராத விதமாக எல்லோரும் என்னை பாராட்டினார்கள். அந்த ஐந்து சிங்களப் பெண்களும் அழுது விட்டார்கள். மன்னிப்புக் கேட்டார்கள். அதில் ஒரு பெண் கடிதமும் தந்தாள். அதை நான் வாங்கவில்லை. தமிழன் சிங்களம் என்ற எண்ணத்தால் என்னை ஒருவர் கட்டியணைத்தார். அவர்தான் குருநாகலை சேர்ந்த விமலதாஸ என்னும் சக சிங்கள வீரர். ஆம் அவர்தான் நான் அன்று அணிந்திருந்த உள்வெனியணையும் றன்னிங் சோட்ஸையும் வாங்கி தந்திருந்தார். இன்னும் சிலர் என்னை நெருங்கி வந்து பாராட்டியதோடு என்னைப் பார்த்து மன்னாரில் உங்களுக்கு என்ன தருகிறார்கள் என்று தமிழிலே பேசினார்கள். சிறிது நேரத்தில் தங்களுக்குள் பேசியவர்கள் எனது கையில் கொஞ்ச பணத்தைத் தந்து எங்களால் இயன்றது ஏற்றுக்கொள்ளுங்கள் என்றனர். ஆம் அதில் 400 ரூபாய்க்கு மேல் இருந்தது.......

தங்கமெடல் பெறுவதற்கான உங்களின் வேகம் என்ன?

நல்லதொரு கேள்வி 1972 800m போட்டியில் 3ம் இலக்கத்தில் (சுகதாச ஸ்ரேடியம்) ஓடியிருந்தேன். எனது உண்மையான வேகம் (1.56 நிமிடங்கள் தான்.) ஆனால் பதிவேட்டின்படி 1.59.6 எனப் பதிந்தும் எனது அழியாத சாதனையை அழிக்கும் முயற்சியே அது பதியப்பட்டது. எனக்கு அடுத்தவனா வந்தவன் 1.58 அவனே ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பினார்கள். என்னைப் புறக்கணித்து விட்டார்கள். அதிலும் அவன் வெற்றி பெறவில்லை. நான் தமிழன் என்பதால் தான் பின்தள்ளப்பட்டேன். 

நீங்கள் மிகவும் வேதனையடைந்த சம்பவம்?

என் வாழ்வே வேதனை கலந்தது  தான். தேசிய ரீதியில் தங்கப் பதக்கம் பெற்ற போதும் என்னை ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி தரவில்லை. அனுமதித்திருந்தால் ஆசியா விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் பெற்றும் அடுத்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு 'வெள்ளி' ஏன் 'தங்கம்' கூட பெற்றிருப்பேன். ஏன் என்றால் அந்த ஆண்டு 2ம் 3 ம் வெள்ளி, வெண்கலம் பெற்றவர்களின் 1.57.3, 1.58 என்ற விகிதத்திலே இருந்தது. பதிவேட்டின்படி எனது தேசிய சாதனை 1.59. ஆனால் அது உண்மையில்லை. எனது உண்மையான சாதனை 1.56 நிமிடங்கள் மாத்திரமே. சற்று சிந்தியுங்கள். இலங்கை எப்போதோ தூக்கியிருக்கும் ஒலிம்பிக்கில் தங்கம்.........

உங்கள் வாழ்வில் அதுவும் ஓட்ட வீரராக நீங்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றி?

 அருமையான கேள்வி ஒன்று இரண்டல்ல பல தடவைகள் பல சூழ்ச்சிகள். என் எழுச்சிக்கு எதிராய் எத்தனை பேர். அதிலும் வருத்தம் என்னவென்றால் அதிகமாக தாக்கியதும், தாக்கப்பட்டதும் தமிழனாலும், தமிழ் மண்ணிலும்  என்று சொல்ல வெட்கமாகவுள்ளது. 

யாழ் மண்ணில் 800m, 400m, 1500m போட்டிக்காகச் சென்றிருந்த வேளை 400m, 1500m முடிந்து 800m தயாராகிக் கொண்டிருக்கும் போது 'அண்ணே சோடா குடித்து விட்டு ஓடுங்கள் என்றார். வேண்டாம் என்று சொல்லவும் வற்புறுத்தி குடிக்க வைத்தார். நானும் குடித்தேன். வாந்திபேதியாக்கியது. அதையும் சமாளித்துக்கொண்டு ஓடினேன். காரணம் இவர்களின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். இன்னொன்று 3 போட்டியிலும் முதலாம் நிலை அடைந்தால் எனக்கு வேலை கிடைக்கும். ஜெயித்தேன் வேலையும் கிடைத்தது. 

யாழ் மண்ணில் மரதன் போட்டியில் 26மைல் தூரம் தானே 23மைல்  கடந்து விட்டேன். இன்னுமிருப்பதோ மூன்று மைல்கள் தான். எனக்கு வயிறு கொழுவியது. அதைப் பிடித்துக் கொண்டு ஓடினேன். பாதுகாப்பிற்கு நின்ற பொலிஸ் அதிகாரியின் திட்டப்படி சென் ஜோண்ஸ் அம்புலன்ஸ் வந்தது. என்னை வலுக்கட்டாயப்படுத்தி ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள். காரணம் நான் மன்னாரான். அடுத்து வந்த மூன்று பேரும் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், பாலச்சந்திரன் அண்ணன்மார்களும் அதேவேளை அவர்கள் யாழ்ப்பாணம். 

கொழும்பிலும் மரதன் ஓட்டப் போட்டியில் டொறிங்டன் பிளேசில் வந்து கொண்டிருக்கின்றேன் இலக்கை அடைய இன்னும் ஒரு மைல் தூரம் தான். எனக்குப்பின் 2மைல் தூரத்திற்கு மேல் யாருமே இல்லை. நடந்தது விபரீதம். என் மீது ஒயில் வீசப்பட்டது. நான் பயத்தில் அவ்விடத்திலேயே நின்று விட்டேன். இனியோட எத்தணித்தால் அசிற் வீசினாலும் வீசுவார்கள் என்று எனது குருநாதர் நிலைமையை புரிந்து கொண்டு வா போகலாம் என்றார்.
அதே போல் 1974 காலப்பகுதியில் இந்தியாவில் மரதன் போட்டியில் இலக்கு வெறும் அரைமையில் தூரம் தான் அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளால் என்னை இடித்து விழுத்தினார்கள்.  அங்கு நின்றவர்கள் என்னை எழுப்பி உற்சாகப்படுத்தி ஓடுங்கள் என்றார்கள். அங்கும் என் பின்னால் வந்த வீரர்களின் இடைவெளி இரண்டு மைல் தூரம் இருக்கும். நான் நடந்து சென்றால் கூட இலக்கை அடைந்து விடலாம். ஆனால் எனது கோபம் அதில் நின்று சொன்னேன். தமிழன் தான் தமிழனுக்கு எதிரி என்று.

வெளி மாவட்டத்திலும் வெளி நாட்டிலும் என்று பார்த்தால் நான் பிறந்து வளர்ந்த எனது மாவட்டமான மன்னாரிலும் என்னை சும்மா விடவில்லை.

இங்கும் குளுக்கோசில் மயக்க மருந்து கலந்து தந்து மயங்கி விழுந்தேன். இரண்டு முறை.

இன்னொரு முறை போட்டிக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது நான் செய்யாத குற்றத்தை செய்தாக வீண் பழி சுமத்தி பொலிஸ்காரர் அடித்து உதைத்தார்கள். காரணம் நான் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று. கலந்து கொண்டு சம்பியன் ஆனேன்.

இன்னொரு முறை பலர் சேர்ந்து என்னை ஒரே நாளில் 4 தடவை 1977ம் ஆண்டு என்னை தாக்கி மண்டையையும் உடைத்தார்கள். அப்போது சாவற்கட்டுப் பகுதியில் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றேன். அங்கும் வந்த சாவற்கட்டு இளைஞர்கள்தான் என்னை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று என்னுயிரை மீட்டார்கள். அவர்களை இந் நேரத்தில் நினைவில் கொள்கிறேன். இவ்வாறான பல துன்பச் சுமைகள். இன்னும் உண்டு என்னோடு மட்டும் நின்று விடாது என் பிள்ளைகள் மீது தொடர்கின்றது. கடந்த வருடம் சைக்கிளோட்ட போட்டியில் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் அவனது சாதனை நிராகரிக்கப்பட்டது.  இவ்வாறான பொறாமைக்குணமும் இழிவுச் செயலும் தமிழன் விடுவானே. அப்போது தான் தமிழன் தலை நிமிர்வான்.

உங்கள் ஓட்டச் சாதனைகள் பற்றி?

13 தடவை தொடர்ச்சியாக யாழ் மண்ணில் சம்பியன் (கிளப்) கழகம்
19 தடவை தொடர்ச்சியாக மன்னார் மண்ணில் சம்பியன் (கிளப்) கழகம்
வடக்கு மாகாணசபை சம்பியன் 3 முறை
அரியாலை யுனைட்ரட் கழக உறுப்பினர்
ACF  கழக உறுப்பினர்
பனங்கட்டுக்கொட்டு ஜோசப் விளையாட்டுக்கழக உறுப்பினர் இவரது பிள்ளைகளும் கழக உறுப்பினர்களாக உள்ளனர்.
1977ம் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றுதல், 2011 ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றுதல்.
1965 புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 1ம் இடம்
1972 தேசிய ரீதியில் தங்கம் 1ம் இடம் உண்மையான திறமைப் பதிவு (1.56) (1.59.6) தற்போதைய பதிவு
1972 யாழ்ப்பாணம் Amateur Athletic Association  800m  1ம் இடம் (2min 0.2swx)
1973 யாழ்ப்பாணம் - Amateur Athletic Association  800m 1ம் இடம் 06 Sec)
1974 may 5 M.T.C.C.400m  1ம் இடம்
1974  July 6 Northen Province Inter District sports Festival 1500m 1ம் இடம்
1976.04.24 பாராளுமன்ற அலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சு ம.ப.ச.ச.வி.க. 1500அ  1ம் இடம், 5000அ முதலிடம்
1977 June 4th Inter club Athletic meet mannar A.G.As Division 400m, 800m, 1500m    மூன்றிலும் 1ம் இடம்
1980 Northern province Inter district sports festival 800m. 1500m  இரண்டிலும் 1ம் இடம்
1981 ஆயல 10 பாராளுமன்ற விவகார விளையாட்டு அமைச்சு சென் ஜோசப் வி.கழகம் சார்பாக 400m, 800m,1500m மூன்றிலும் 1ம் இடம்
1982 மே.8 பாராளுமன்ற விவகார விளையாட்டு அமைச்சு சென்.ஜோசப் வி.கழகம் சார்பாக 1500அ 1ம் இடம் திறமை 4.12.35
1983 Apr24 – பாராளுமன்ற விவகார விளையாட்டு அமைச்சு மன்னார் சென்.ஜோசப் வி.கழகம் சார்பாக 400m, 800m, 1500m முதலாம் இடம்
1983 ஜீன் 11 – பாராளுமனற விளையாட்டு விவகார அமைச்சு
400m 1ம் இடம் திறமை – 56.89 வினாடிகள்
800m 1ம் இடம் திறமை – 2 நிமிடம் 8.31 வினாடி
1500m 1ம் இடம் திறமை – 4.31.65 வினாடி
1983 இன் சிறந்த  விளையாட்டு வீரர் விருதும்
2007 மன்னார் மாவட்டத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருது        (Best Performer in Mannar District (sports for peace programme)
2008 –  A mementdo for our past socerites  சென்.ஜோசப் விளையாட்டு கழக நினைவுச் சின்னம்.
2010 – Northern provincie at the sports colour night 2009 5th April 2010
மன்னார் சென்.ஜோசப் விளையாட்டுக் கழகத்தினால் 2014ம் ஆண்டில் (எனது பிறந்த நாளும் வந்தது.) கௌரவிப்பும் பொற்கிளியும் வழங்கினார்கள்.

உங்களை கவர்ந்த சக வீரர்கள் பற்றி?

என்னுடைய காலப்பகுதியில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் பலர் உள்ளனர். அன்ரன் நானாட்டான், அமுதலிங்கம் கருக்காகுளம் கிறிஸ்த்து நாயகம் 100அஇ சென் ஜோண்ஸ், ஜெரி 400அ போன்றவர்களை மிகவும் பிடிக்கும்.

(Runner Bala றன்னர்பாலா) என்கின்ற அடையாளம் எவ்வாறு உருவானது ?

நான் தேசிய ரீதியில் மன்னார் சார்பாக விளையாடி தங்கம் பெற்று மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்த்த போது அன்று தொடக்கம் இன்றுவரை இனியென்றும் மாறாத மறையாத பெயராக அமைந்துவிட்டது. மக்களின் அங்கீகாரம் எனது கடும் உழைப்பின் பலன் அடையாளம் இதுதான்.

உங்கள் விளையாட்டு வாழ்விற்கு உறுதுணையாக இருந்தவர்கள்?

 முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது குருவான மாஸ்ரர் ஜீவரெட்ணம் அவர்களுக்கும் மன்னார் பனங்கட்டிக்கொட்டு சென் ஜோசப் விளையாட்டுக்கழகம்  என் வாழ்நாளில் மறக்க முடியாது. கழகம் கழக உறுப்பினர்களான பலரில் டொமினிக் சுதாகர், செல்வம் இன்னும் பலர் உள்ளனர். அப்பவும் இப்பவும் என்னை வளப்படுத்தும் கழகம் என்றால் அது சென் ஜோசப் விளையாட்டக் கழகம் தான். வடமாகாண சம்பியனாக வந்தபோது சுதாகர் சம்மாட்டியின் அண்ணன் என்னை தோளில் தூக்கி வலம் வந்தார் என்றால் என்னை அக் கழகம் எவ்வாறு கவனிக்கின்றது. எனது நண்பர்களும் பலர்.

தங்களிற்கு பிடித்த விளையாட்டு பற்றி?

 வலைப்பந்து உதைபந்து விளையாட்டுக்கள் மிகவும் பிடிக்கும். காரணம் இவ்விரு விளையாட்டுக்களில் ஒவ்வொரு மனிதனும் விளையாட்டு வீரனும் அவனது ஒட்டுமொத்த உடல் பாகங்களும் சுறுசுறுப்படையும் எனக்கு பிடிக்காத சோம்பேறி விளையாட்டு என்றால் அது கிறிக்கெட் என்றுதான் சொல்வேன். இரண்டு பேர் அடிக்க 11 பேர் காவல் நிற்க 9பேர் உட்கார்ந்திருப்பார்கள். எவ்வளவு சோம்பேறித்தனம். சிலவேளை இருவருடனும் விளையாட்டு முடிந்து விடும். என்னை மிகவும் கவர்ந்த விளையாட்டு என்றால் உதைப்பந்து தான். நானும் உதைப்பந்து விளையாட்டு வீரர் என்ற வகையில். 

உங்களது காலப்பகுதியிலும் விளையாட்டு வீரர் என்ற வகையில் வீரர்களின் நிலை பற்றி?  

தற்போது திறமையான ஓட்ட வீரர்களின் செயற்பாடு மிகவும் மோசமானதாகவே உள்ளது. மதுபாவனை, புகைத்தல் இன்னும் பல தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபடுதல் அக்கறையின்மை, விருப்பமின்மையில் அவர்களால் நிலைத்து நிற்கவும் பெயர் நிலைநாட்டவும் முடிவதில்லை. 

1972 - 2014 இன்றுவரை ஓட்டப்பந்தய வீரராக உள்ள நீங்கள் இச்சமுதாயத்திற்கு சொல்ல நினைப்பது என்ன?

மன்னார் மண்ணின் வீரர்களை அவர்களின் திறமைகளை வளர்ப்பார் இல்லை. அது வேறுயாருமல்ல. மன்னார் மண்ணைச் சேர்ந்த விளையாட்டு அதிகாரிகள்தான். அவ்வாறுதான் 336 புள்ளிகள் பெற்று 33தங்கம், 27வெள்ளி, 13வெண்கலம் பெற்றபோது விஸ்வலிங்கம் யு.பு.யு ஆக இருந்தபோது எல்லோரையும் பரிசுகொடுத்து கௌரவிப்போம் என்றார். ஆனால் எதுவுமே செய்யவில்லை. இப்படியான பல சந்தர்ப்பங்கள். யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால் எந்தத்துறையாக இருந்தாலும் ஒவ்வொரு வீரராக அவர்களை கௌரவிக்கின்றார். அவ்வாறு செய்தால் அடுத்துவரும் தலைமுறையும் ஊக்கம் பெற்று மன்னார் மண்ணின் பெருமை பேசச் செய்வார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட்டால் நன்மை நமக்கே. 

கலைஞர்களை கௌரவிப்பார்கள் இல்லை என்பது பொதுவான கருத்து உங்களைஇதுவரை?

யாருமே கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் 13.07.2014 அன்று எனது பிறந்தநாள். மன்னார் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவின் போது என்னை கௌரவித்தார்கள். மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் யோசப் விளையாட்டுக்கழகத்தினர் பல வருடங்களுக்கு முன்பு இலங்கை ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா வெள்ளிப்பதக்கம் வென்ற போது அரசாங்கம் வீடு, வாசல், காணி கார் என கொடுத்தது. ஆனால் எனக்கு ஒன்றுமே இதுவரை கிடைக்கவில்லை. வடமாகாண ஆளுனருக்குக் கடிதம் எழுதினேன். சும்மா பேசினாரே தவிர எந்த விதமான உதவியும் செய்யவில்லை. சூழ்ச்சிகள் பல செய்கின்றனர். சுசந்திக்கா மன்னார் வந்தபோதும் மிகவும் சிறப்பாக வரவேற்று கௌரவித்தார்கள். ஆனால் எங்களைப் போன்ற மன்னார் அடையாளங்களை அழைக்கவில்லை எல்லாமே சுயநலம் தான். 

பல போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளதைப்பற்றி?

 என்னிடம் அதற்கான தகுதியுள்ளது. எனது நடுவர் பணியில் நான் ஒரு குருவாக, தந்தையாகத்தான் செயற்படுவேன். திறமையுள்ளவனைப் பாராட்டுவேன். சோர்வுற்று இருப்பவனைத் தேற்றுவேன். பலவிதமான ஆலோசனைகளை அந்த நொடிப்பொழுதில் வழங்குவேன். 'விசில்' சத்தத்திற்கு ரெடியாக வேண்டும். 'கிளப்' சத்தத்திற்கு ஓடவேண்டும். நேரக்கட்டுப்பாடு (வுiஅந அயயெபநஅநவெ) அறிவுறுத்துவேன். போட்டியில் ஒருவன்தான் முதலாமிடம் வராலாம். அதனால் போட்டியிருக்கலாம், பொறாமை வேண்டாம் என நகைச்சுவையாக எடுத்துச் சொல்லுவேன். இவற்றை யாரும் வீரர்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.

  சில வீரர்கள் தவறு விடும்போது அவ்வீரரை வெளியேற்றி விடுகிறார்கள். அதனால் அவனது திறமையும், வாழ்வும் பாதிக்கப்படுகிறது. சிறந்ததொரு வீரராக வேண்டும் எனறால் எல்லாவிதமாகவும் பயிற்றப்பட வேண்டும். தற்போது இளம் பயிற்சியாளர் திறமையானவர் திரு. ராஜாவைக் குறிப்பிடலாம். 

உங்களின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணம் என்று எதை எண்ணுகிறீர்கள்?

எனது எழுச்சிக்கும், விழ்ச்சிக்கும் காரணம் எனது கோபம், எனது வேகம், அதேபோல் நான் தமிழன் என்ற உணர்வாலும் பல அரசியல் பின்னனியில்தான் தாக்கப்பட்டேன் என்பதை விட எனது திறமை நசுக்கப்பட்டதுதான் உண்மை. 

நீங்கள் சாதித்தது போதும் என்று நினைத்ததுண்டா?

இதுவரை நான் சாதிக்கவில்லை. என்னால் முயன்றவரை முயற்சி செய்தேன். எனது முதுமை காரணமாக இயலாமல் போனாலும் எனது பிள்ளைகள் மூலம் எனது இலக்கை அடையச் செய்ய முயற்சிக்கிறேன்.

மன்னார் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து ?

விரும்புகிறேன், பாராட்டுகிறேன் இவ்வளவு நாளும் நான் அறிந்ததில்லை. நீங்கள் இந்த சின்ன வயசில் இளைஞர் இணைந்து செய்யும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. மன்னார் இணையத்திற்காக எனது வீடு தேடிவந்து எனது விளையாட்டு வீர வாழ்வை அலசி ஆராய்ந்து எனது பழைய வாழ்வை மீட்கும்போது மகிழ்ச்சியும், சில கவலையும் வந்து போனது. சந்தோஷமாகவே உணர்கின்றேன். இதுதான் என்வாழ்வில் முதல் (செவ்வி – பேட்டி) அதுவும் இணையத்தில் என்னை இணைத்தமைக்கு என் நன்றியும், ஆசீர்வாதமும். 

சந்திப்பு : வை. கஜேந்திரன். 









ஓட்ட வீரர் செல்லத்துரை பாலசிங்கம் அவர்களின் அகத்திலிருந்து ... Reviewed by NEWMANNAR on August 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.