அண்மைய செய்திகள்

recent
-

2007ம் ஆண்டு கடலுக்குச் சென்ற மகன் இதுவரை வீடு திரும்பவில்லை! கடற்படையினரே காரணம் என்கிறார் தாய்-மன்னாரில் சாட்சியம்

மன்னாருக்கு கடல் வழியாக மீன்பிடிக்கச் சென்ற எனது மகன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் மனோ ராமநாதன், எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளித்தனர்.

இதன்போது, கடலுக்குச் சென்று காணாமல்போன தனது மகன் தொடர்பில் சாட்சியமளித்த விடத்தல்தீவைச் சேர்ந்த டோமினிக் செல்வராணி என்ற தாய் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் கடற்பரப்பிலிருந்து எனது மகன் உட்பட ஐந்து பேர் கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி, மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, கூடச் சென்றவர்களிடம் விசாரித்த போது, கடலில் வைத்து மகனை, கடற்படையினர் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.

தலைமன்னார் கடற்படையினரே இவர்களை அழைத்துச் சென்றதாக தலைமன்னார் பகுதி மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தலைமன்னார் கடற்படையினரிடம் விசாரித்த போது அவர்கள் குறித்த சம்பவம் பற்றி தமக்குத் தெரியாது என்று தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இடம்பெயர்ந்து சென்றபோது தலைமன்னார் கடற்படையினரின் முகாமில் எனது மகன் இருந்ததை கண்டவர்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக ஐ.சி.ஆர்.சி.யில் நாங்கள் முறைப்பாடு செய்த போது மகனை தேடிக்கண்டுபிடித்து தருவதாக எங்களுக்கு தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை மகனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது.

குறிப்பிட்ட காலத்தில் தலைமன்னார் கடற்படையினருடன் தொடர்புகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே மகனை தேடக்கூடிய நிலைமை எமக்கு அப்போது இருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து கடற்கரைக்கும் 10 நிமிடத்தில் நடந்து செல்ல முடியும். அப்பொழுது இக்கடற்கரைப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்பொழுது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

2007ஆம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது நாங்கள் தேவன்பிட்டி என்ற பகுதிக்கு அகதிகளாக சென்றோம். நாங்கள் இடம்பெயரும் போது எங்களை எவரும் தடுக்கவில்லை. உயிரை பாதுகாப்பதற்காகவே சென்றோம். அந்த நேரத்தில் இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாலேயே எமது உயிரை பாதுகாக்க எமது இடத்தில் இருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

2010ஆம் ஆண்டு நாங்கள் திரும்பி எமது விடத்தல்தீவு பகுதிக்கு மீண்டும் வந்த போது நாங்கள் தொழில் செய்யும் மீன்வாடியை இராணுவம் கையகப்படுத்தியிருந்தது. இப்பொழுதும் அது இராணுவத்தினர் வசமே உள்ளது.

2010.12.04 திகதி, நாங்கள் எங்களது வீட்டிற்கு வந்தபோது வீடு மட்டும் இருந்தது. பொருட்கள் எவையும் இருக்கவில்லை. அரசு எமக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. யூ.என்.எச்.சி.ஆர் மட்டும் 25 ஆயிரம் ரூபாய் தந்துதவியது. வேறு யாரும் உதவி செய்யவில்லை. நாங்கள் கடன்பட்டு எங்கள் வீட்டை திருத்தி வாழ்ந்து வருகின்றோம்.

எனது கணவருக்கு இப்போது 61 வயதாகிறது. எனது மகனையும் காணவில்லை. எங்கள் வருமானமும் குடும்பத்திற்கு போதாமல் இருப்பதுடன் எங்கள் சொந்த மீன்வாடியையும் இராணுவம் தங்கள் வசம் வைத்திருப்பதால் நாங்கள் பிறருடைய மீன்வாடியையே குத்தகைக்கு பெற்று எங்கள் தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்.

இராணுவம் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் தொழில் மேற்கொள்ளும் எமது வாடியை தராமல் இருப்பது கவலையை தருகின்றது. மகன் காணாமல் போன போது கடற்பகுதியை கடற்படையினர் கண்காணித்தார்களா என்பது எமக்குத் தெரியாது என அவர் தெரிவித்தார்.




2007ம் ஆண்டு கடலுக்குச் சென்ற மகன் இதுவரை வீடு திரும்பவில்லை! கடற்படையினரே காரணம் என்கிறார் தாய்-மன்னாரில் சாட்சியம் Reviewed by NEWMANNAR on August 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.