உலகின் மிக வயதான நபராக 127 வயது மெக்ஸிக்கோ பெண்மணி
உலகின் மிகவும் வயதான நபர் தானே என மெக்ஸிக்கோவைச் சேர்ந்த 127 வயதான லியன்ட்டரா பெசொரா லும்பிறிரஸ் என்ற பெண்மணி உரிமை கோரியுள்ளார்.
எனினும் அவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு மாறும் போது தனது பிறப்புச்சான்றிதழை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஸபொபான் நகரைச் சேர்ந்த லியண்ட்ரா 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பிறந்தார்.
அவர் 1910 - 1917 மெக்ஸிக்கோ புரட்சியின்போது தமது கணவர்மாருடன் போரில் ஈடுபட்ட பெண்களின் தலைவராக போரில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது நீண்ட ஆயுளின் இரகசியம் சிறந்த உணவுமுறை, தூக்கம் என்பவற்றைக் கைக்கொள்வதும், ஒருபோதும் திருமணம் செய்யாமல் வாழ்வதுமே என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். திருமணமாகாமலே 5 பிள்ளைகளுக்கு அவர் தாயாகியிருந்தார்.
எனினும் அவரது 5 பிள்ளைகளுமே இறந்துவிட்டுள்ளனர். அத்துடன் அவரது 20 பேரப்பிள்ளைகளில் பலர் தற்போது உயிருடன் இல்லை. இறுதியாக கடந்த ஆண்டில் இறந்தவரின் வயது 90 ஆகும்.
அவருக்கு 73 பூட்டப்பிள்ளைகள் உள்ளனர். அவரது பூட்டப் பிள்ளைகளுக்கு வாரிசுகளாக 55 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது செவிப்புலன் பாதிக்கப்பட்டு கண்புரை நோயால் லியண்ட்ரா துன்பப்பட்டு வருகின்றபோதும், அவரது புரட்சிகால கதைகளை தனது குடும்பத்தினருடன் பரிமாறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்தக் கதைகளில் அவர் புரட்சிக் காலத்தில் தப்பிச் சென்றது மெக்ஸிக்கோ இராணுவத்தில் பலவந்தமாக ஆட்சேர்க்கப்பட்டது என்பன உள்ளடங்குகின்றன.
லியண்ட்ராவின் பெற்றோர் பாடகர்கள் என்பதால் அவர் தனது பேரப்பிள்ளைகளுக்கு பழைமையான பாடல்களை பாடிக் காட்டுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.
தனது வாழ்வில் மாபெரும் 3 காதல் அனுபவங்களை எதிர்கொண்டுள்ளதாக கூறும் அவர், தனது காதலர்களில் ஒருவராக பிரபல புரட்சித் தலைவர்களில் ஒருவரான மர்காரிடோ மால்டொனாடோ இருந்ததாக தெரிவித்துள்ளார்.
லியண்ட்ரா அண்மைக்காலங்களாக சில சமயங்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், அவர் தனக்கு பிடித்தமான உணவுகளை இரசித்து உண்பதாகவும் அவரது பேரப்பிள்ளைகளில் ஒருவரான செலியா ஹெர்ணானடஸ் கூறினார்.
அவருக்கு கடினமான உணவுகளை வழங்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தபோதும் அவர் தனது பிறந்த நாளன்று கேக் மற்றும் அவரை உணவு என்பவற்றை அருந்தினார்.
அவருக்கு நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதும் இல்லை என்பதால் அவரால் தான் விரும்பும் சொக்கலேட்டுகளையும் இனிப்புகளையும் விரும்பியவாறு உண்ண முடிகிறது.
தற்போது உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ஜப்பானைச் சேர்ந்த மிஸவோ ஒகவாவை விட லியண்ட்ராவுக்கு 12 வயது அதிகமாகும்.
உலகின் மிக வயதான நபராக 127 வயது மெக்ஸிக்கோ பெண்மணி
Reviewed by NEWMANNAR
on
September 01, 2014
Rating:

No comments:
Post a Comment