வடமாகாணத்தில் ஒரே பாடசாலையில் இருபது வருடங்கள் கட்டாயக் கடமை! கல்விப் பணிப்பாளரின் உத்தரவு தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி
வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக 10 வருடத்திற்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டு அடிப்படைச் சம்பளமாக ரூபா ஆறாயிரம் வழங்கப்படுகின்றது. இதைவிட மேலதிகமாக வடமாகாணக் கல்வி அமைச்சினால் நான்காயிரமுமாக ரூபா பத்தாயிரம் வழங்கப்படுகின்றது. இவர்களின் நியமனக் கடிதத்தில் அதேபாடசாலையில் ஐந்து வருடங்கள் கடமையாற்ற வேண்டுமென்றும் அதற்கிடையில் இடமாற்றங்கள் கோரமுடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் பத்து வருடங்களுக்கு மேலாக தொண்டராசிரியர்களாக இருந்து ஆசிரிய உதவியாளர் நியமனம் கிடைக்கப் பெற்றவர்கள் மேலும் பத்து வருடங்கள் அதே பாடசாலையில் கடமையாற்ற வேண்டுமென்று வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்று நிருபம் அனுப்பி வைத்துள்ளார்.
ஒரே பாடசாலயைில் இருபது வருடங்கள் ஒரு ஆசிரியர் கடமையாற்ற வேண்டுமென்பது ஒன்றும் புதிதல்ல, ஆனால் ஒரே ஆசிரியரை ஒரு பிள்ளை கற்றல் காலம் முடியும் வரை பார்க்க வேண்டுமென்பது பிள்ளைக்கு வழங்கப்படும் தண்டனையா?
அதைவிட ஊதியம் ஏதும் இல்லாமல் பல்வேறு சிரமங்களின் மத்தியில் பத்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி, ஆசிரிய பற்றாக்குறையை அவசர காலங்களில் நிவர்த்தி செய்த இந்த ஆசிரியர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை ஏன் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளருக்குத் தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் எவரையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் உள்ளாரா? என்ற கேள்வியையும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எழுப்பியுள்ளது.
வடமாகாணத்தில் ஒரே பாடசாலையில் இருபது வருடங்கள் கட்டாயக் கடமை! கல்விப் பணிப்பாளரின் உத்தரவு தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:


No comments:
Post a Comment