வட கிழக்கில் இராணுவத்தை ஒழிக்க மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்: யோகேஸ்வரன்
வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்வதற்கு மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே வாக்களித்த வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். ஆட்சிமாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற காரணத்தினாலேயே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்டகாலமாக ஆட்சியிலருந்து 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களை பெருந்தொகையாக படுகொலை செய்த மகிந்த அரசாங்கத்தை தண்டிக்கும் முகமாகவும் சர்வாதிகார ஆட்சியை ஒழிக்கும் முகமாகவும் மக்கள் இம்முறை வாக்களித்திருக்கின்றார்கள்.
எக்காலத்திலும் இல்லாதளவு இம்முறை பெருந்தொகையான மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டதுடன் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நியாய பூர்வமான அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் எம்மிடம் முன்னைவத்துள்ளனர். எமது சமூகம் நீண்டகாலமாக இதற்காக பாடுபட்டிருக்கின்றார்கள். அதற்கான முடிவு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் கிடைக்க வேண்டும் எனவும் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னாள் ஆயுதக்குழுக்கள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிராக பல அட்டூழியங்களில் ஈடுபட்டார்கள். அரசாங்கத்தில் பிரதியமைச்சராக முன்னாள் முதலமைச்சராக அமைச்சராக இருந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டு மக்களுக்கு பலவழிகளில் துன்பத்தை இழைத்திருக்கின்றார்கள். அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைகள், கொலைகள், கடத்தல்கள் என்பவற்றுக்கு உரிய விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் பிரச்சார நடவடிக்கைகளின்போது தமிழ் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
யுத்தத்திற்கு முன்னும் பின்னும் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மைத்திரி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். யுத்தக்குற்றச்சாட்டின்பேரில் அரசியல் கைதிகளாக சிறைகளில் இருக்கின்ற எமது உறவுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இவற்றையே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பை மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றுவார் என தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக நாங்கள் வாக்குகளை திரட்டுவதற்காக சென்றபோது எமது ஆதரவாளர்கள்இராணுவத்தினாலும் இராணுவ புலாய்வுப் பிரிவினராலும் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மகிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு இராணுவத்தினரும் இராணுவ புலாய்வுப் பிரிவினரும் மும்முரமாக செயற்பட்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்வதற்கு மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே வாக்களித்த வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோருகின்றனர்.
வட கிழக்கில் இராணுவத்தை ஒழிக்க மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்: யோகேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
January 09, 2015
Rating:

No comments:
Post a Comment