அண்மைய செய்திகள்

recent
-

தமிழர், முஸ்லிம் பங்களிப்பின்றி கிழக்கில் ஆட்சியமைப்பது நியாயமற்றது : சுமந்திரன்


கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சியமைக்க வேண்டும். அதில் சிங்கள மக்களும் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களை முஸ்லிம்களோ முஸ்லிம்களை தமிழர்களோ விட்டுவிட்டு கிழக்கில் நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுமந்திரன் எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. அந்தத் தேர்தலில் கூட்டமைப்பையும் ஐ.தே.க.வையும் விட மிக மோசமாக அரசாங்கத்தை விமர்சித்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்த மூன்று கட்சிகளும் பெற்றுக் கொண்ட ஆசனங்களையும் சேர்த்தால் அரசாங்கத்திற்கு எதிரான ஆசனங்கள்தான் அதிகமாக இருந்தன.
அவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறும் முதலமைச்சர் பதவியைத் தருவதாகவும் நாம் பகிரங்கமாகவே முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தோம். முஸ்லிம் சகோதரர் ஒருவரை முதலமைச்சராக நியமியுங்கள் என்று நாம் தெளிவாகவே கூறினோம்.

ஆனால் அந்த அழைப்பை உதாசீனம் செய்து, மத்தியில் தமக்கிருந்த அமைச்சுப் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பிசகு ஏற்பட்டுவிடாமல் யாருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்தே ஒரு ஆட்சியை அமைத்தார்கள்.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இருக்கின்ற அந்த அமைச்சரவையில் ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை. 5 அமைச்சர்களிலே ஒருவர் கூட தமிழர் இல்லை. சபைத் தலைவரோ பிரதித் தலைவரோ கூட தமிழர் அல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இடமில்லையா? கிழக்கில் அரசாங்கம் நிர்வாகம் அமைக்கின்ற போது அங்கே ஒரு தமிழ் மகனுக்குக் கூட இடமில்லாமல் ஆட்சி நிறுவப்படுவது நியாயமா?

7 ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரசுக்கும் 11 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏன் ஓர் இணக்கப்பாட்டைக் காண முடியவில்லை? நாங்கள்தான் முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லையே? குறைந்த ஆசனங்களைக் கொண்டிருந்த உங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவியைத் தருவதாக சொன்னோமே?. அப்படியிருந்தும் அங்கு ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை என்பதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஒரு ஆட்சியை அமைத்தீர்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலோடு அந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது.

முஸ்லிம் காங்கிரசோடு இப்போதும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தபோது அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது நீங்கள் விட்ட தவறு என்று சொன்னோம். அவர்களில் சிலர் அதனைத் தவறு என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஆனால் இன்னொருவரோ அதனைத் தவறு என்று நான் சொல்லாமட்டேன். அது காலத்தின் தேவையாக இருந்தது என்கிறார்.

என்ன தேவையாக இருந்தது? அமைச்சுப் பதவிதானே தேவையாக இருந்தது. எங்களது உறுப்பிர்கள் எமக்கு அழுத்தங்களைத் தந்தார்கள். வேறு விதமாக கிழக்கில் ஆட்சியை அமைப்போம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று கூட அதனைச் செய்யலாம். ஆனால் அதனை நாம் செய்யமாட்டோம்.
முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவர்களைப் புறந்தள்ளி நாம் ஆட்சியமைக்கமாட்டோம். ஒரு காலமும் அதனைத் செய்யமாட்டோம்.

எனவே முதலில் நாம் முஸ்லிம் காங்கிரசுடன்தான் பேசுவோம். அவர்களுடன் இணைந்தே ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுப்போம் என்றே நாம் சொன்னோம். ஆனால் இப்பொழுதும் கூட அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாரில்லை என்பது புலனாகின்றது.

ஏற்கவே கிழக்கில் இரண்டு வருடம் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்தது. மத்தியிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தது. இப்போது புதிய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளைக் கேட்டுக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறா்கள்.

ஏன் உங்களிடம் கொள்கை என்ற ஒன்றே கிடையாதா? எதைச் செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்ற வரையறைகளே உங்களிடம் இல்லையா? ஏன் இவ்வளவு மோசமாக செயற்படுகிறீர்கள் என்று எமது தலைவர்கள் அவர்களிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழர், முஸ்லிம் பங்களிப்பின்றி கிழக்கில் ஆட்சியமைப்பது நியாயமற்றது : சுமந்திரன் Reviewed by NEWMANNAR on January 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.