அண்மைய செய்திகள்

recent
-

நாளை மறுதினம் இலங்கை வருகிறார் பாப்பரசர்

பரிசுத்த பாப்பரசர் நாளை மறுதினம் காலை 8 மணியளவில் இலங்கையை வந்தடைவார் என பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் ஊடக இணைப்பாளரான அருட்தந்தை சிறில்  காமினி தெரிவித்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசரின் வருகைக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஆண்டகை எதிர்வரும் 13 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்.

அங்கு இடம்பெறும் அரச வரவேற்பு நிகழ்வை அடுத்து பரிசுத்த பாப்பரசர் திறந்த வாகனம் மூலமாக கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதி ஊடாக  கொழும்பை வந்தடைவார்.


கொழும்பு வத்திக்கான் தூதரகத்துக்கு செல்லும் பரிசுத்த பாப்பரசர்  இலங்கைக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு பேராயர் இல்லத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையினர் பரிசுத்த பாப்பரசரை சந்திக்கும் வைபவம் இடம்பெறும். இவ்வைபவத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இலங்கை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் கலந்து கொள்வர்.

அன்றைய தினம் பிற்பகல் 02 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் சர்வமத தலைவர்களை  சந்திக்கவுள்ளார்.

அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாப்பரசருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின் போது பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை குறிக்கும் ஞாபகார்த்த முத்திரையும் புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ள யேர்சேவ் வாஸ் அடிகளாரை அறிவிக்கும் நினைவு முத்திரையும் விசேட நாணயக்குற்றிகளும் வெளியிடப்படவுள்ளன.

14 ஆம் திகதி காலை பரிசுத்த பாப்பரசர் கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட திருப்பலிப் பூசையை ஒப்புக்கொடுப்பார். அங்கிருந்து மக்களுக்கு ஆசி வழங்கும் பாப்பரசர் முத்திபேறு பெற்ற ஜோசேவ் வாஸ் அடிகளாரை புனிதராக அறிவிப்பார்.

அன்று பிற்பகல் மடுத்திருத்தலத்திற்கு விஜயம் செய்யும் பாப்பரசர் மடு தேவாலயத்தில் விசேட ஆராதனைகளில் கலந்துகொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை மறுதினம் இலங்கை வருகிறார் பாப்பரசர் Reviewed by NEWMANNAR on January 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.