அண்மைய செய்திகள்

recent
-

அன்புடன் சகோதரர் றிசாத் பதியுதீன், சகோதரர் அமீரலி அவர்களே..! அப்துல் வஹாப்

அன்புடன் சகோதரர் றிசாத் பதியுதீன், சகோதரர் அமீரலி அவர்களே..! அப்துல் வஹாப்:-


 My open letter to Rishard B and Ameerally :-

அன்புடன் சகோதரர் றிசாத் பதியுதீன், சகோதரர் அமீரலி அவர்களே..!
Dear brothers, rishard badiudeen and ameeraly!
ஜனாதிபதி தேர்தல் வெற்றியினை உங்களது வெற்றியாகக் கொண்டாடுவதில்  மும்மூரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்களின் நலன்களின்பால் நின்று சுட்டிக்காட்ட வேண்டிய சில முக்கிய விடயங்ககளை முன்வைப்பதற்காக இப்பகிரங்கக் கடிதத்தை எழுதுகின்றேன்.


இப்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் வெற்றிக்கு மக்களே சொந்தக்காரர்கள் என்பதும், அதனை உருவாக்குவதற்குஉங்களைப் போன்றவர்கள் எவ்வித தியாகத்தையும் பங்களிப்பையும் செய்யவேண்டிய நேரத்தில் செய்யவில்லை என்பதும் நாடறிந்த உண்மையாகும்.


சகோதரர் றிசாத் அவர்களே..!


முஸ்லிம்கள் எதிர் கொண்ட மிகச்சிக்கலான சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களுக்காகப் பேசவேண்டிய இடத்தில் பேச வேண்டிய முறையில் நீங்கள் பேசவில்லை. மட்டுமின்றி அவ்வாறு பேசுவதற்கு முன்வந்தவர்களைக் கூட தடுக்கின்ற ஒருவராகவே  நீங்கள் இருந்திருக்கின்றீர்கள்.


உதாரணமாக, முஸ்லிம்களுக் கெதிரான பொதுபலசேனாவின் இனவாத அச்சுறுத்தல்கள் உச்சகட்டத்தில் இருந்த வேளை எதிர்கட்சித்தலைவர் என்ற வகையில் முஸ்லிம்களுக்காக பேசுவதற்காக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில்  எழுந்து நின்றார்.


அவ்வேளையில் அவரது பேச்சுக்கு இடையூறு செய்து அதனைத் தடுக்கின்ற முயற்சியை நீங்கள்தான் செய்தீர்கள். இதுதான் வரலாறாகும். ஆக, மக்களின் துன்பங்களுக்கானி தீர்வாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நேரத்தில் நீங்கள் எவரும் முன்வரவில்லை என்பது மாத்திரமின்றி மஹிந்தவின் அராஜக அரசிற்கு ஆதரவளித்து அதன் சுகபோகங்களை அனுபவிக்கின்றவர்களாகவே நீங்கள் இறுதிவரைஇருந்தீர்கள்.


உண்மையைச் சொல்லப் போனால் தேசப்பற்று மிக்க ஒருசில தலைவர்களாலும் இந்த நாட்டு மக்களாலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றதிற்கான உழைப்பு நிச்சயம் வெற்றிபெறப் போகிறது என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர்தான் நீங்கள் வெற்றியின் பக்கம்  இணைந்து கொண்டீர்கள்.


இப்போது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இறைவனின் உதவியோடு நிகழ்ந்து விட்டது. எதற்காக இந்தமாற்றத்தை மக்கள் எதிர் பார்த்தார்களோ அந்த விளைவுகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.


சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அரசாங்கத்தில்நீங்களும் பங்காளியாகி விட்டீர்கள். மாற்றத்தின் மூலமாகமக்களின் நலன் சார்ந்த நேர்மையான ஆட்சி ஒன்றினையே மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.


ஊழல் மோசடிகள் இல்லாத, மக்களின் நலன்களைச் சுரண்டாத, அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யாத,அரசியல் வன்முறைகள் அற்ற, மற்றும் குடும்பஆட்சி முறை இல்லாத ஒரு சிறந்த ஆட்சியினையே மக்கள் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.


ஆனால், ஒரு அராஜக ஆட்சியினை நடாத்திய மஹிந்தராஜபக்ச அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து அந்தஅரசாங்கத்திற்கு துணை போனது மட்டுமல்லாமல் அந்தமக்கள் விரோத செயற்பாடுகளில் தாமும் பங்கெடுத்த பலர்இன்று புதிய ஆட்சியில் மீண்டும் பங்காளிகளாக வந்திருப்பது மாற்றத்தை எற்படுத்திய மக்களுக்கு நம்பிக்கையீனத்தை  ஏற்படுத்துகின்றது.


அப்படியான ஒருவராக நீங்களும் அடையாளப் படுத்தப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகம் கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாக மாறியிருக்கிறது.


நேர்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக சொல்லக்கூடிய ஒருவர் தானும் நமது சமூகம் சார்பாக இந்த அரசாங்கத்தில் இல்லையே என்பது பெரும் வெட்கத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.


இந்தப் பின்னணியில்தான் சில விடயங்களைஉங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.


மக்கள் மாற்றியமைக்க நினைக்கும் சமூக விரோதமார்க்க விரோத பிற்போக்கு அரசியல் நிலவரங்களைமுஸ்லிம் அரசியலில் முன்னின்று செய்பவர்களாகஉங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள்.


நாட்டில் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு நல்ல அரசியல்மாற்றம் முஸ்லிம் சமூகத்திலும் நிகழ வேண்டும்என்றேமுஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக விரும்புகின்றது.


ஆனால் அதற்கு உங்களது கடந்த கால நடவடிக்கைகளும், தற்போதைய நடை முறைகளும்பெரும் முட்டுக் கட்டைகளாக இருக்கின்றன. அந்தவகையில் பின்வரும் விடயங்களை சுருக்கமாக சுட்டிக்காட்ட வீரும்புகின்றேன்.


மக்களின் நலன்களைச் சுரண்டும் ஊழல் மோசடிகள்அரசியல் என்பது மக்களின் நலன்களுக்காகவே 100வீதம் செயற்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். ஆனால் அரசியல்அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் நலன்களைச் சுரண்டி பொது நிதியினைக் கொள்ளையடிக்கின்ற பெரும் வியாபாரமாகவே தற்போதைய அரசியல் மாறியிருக்கிறது.


முஸ்லிம் அரசியலில் நீங்கள் இதற்கு நல்லஉதாரணமாகும்.


வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையையேஉங்களின் அரசியலுக்கான மூலதனமாக இன்னும்பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த அகதி மக்கள்நிம்மதியாகக் குடியேறி தாம் இழந்தவற்றை மீண்டும்பெற்று வளமாக வாழுகின்ற நிலை இன்னும்ஏற்படவில்லை.இன்னும் பலர் அகதி முகாம்களிலும் அதேபோன்று மீள்குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகள்இல்லாமலும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்களும் உங்களது குடும்பமும் இது போன்றகஸ்டங்களுடன் வாழ்ந்து அகதிகளாக இருந்தநிலையில்தான் அரசியலைத் தொடங்கியதாக சொல்கிறீர்கள்.


அப்படியென்றால் எந்த மக்களுக்காக அரசியல்நடாத்துவதாக சொல்கின்றீர்களோ அந்த மக்களில் ஏராளமானவர்கள் இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நீ;ங்கள் மாத்திரம் எப்படிகோடீஸ்வர்களாக மாற முடிந்தது..?


அகதிமக்களுக்கான வீடுகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை ஆனால் நீங்களும், உங்கள் உறவினர்களும் பலகோடிப் பெறுமதியான வீடுகளுக்கு கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் சொந்தக்காரர்களாக மாறியிருக்கின்றீர்கள்.


மன்னார் மறிச்சிக்கட்டி போன்ற பிரதேசத்தைச் சேர்ந்தஅகதிகள் தமது சொந்தக் காணியை இழந்து விட்டு நடுவீதியில் அனாதரவாக நிற்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு உங்களால் காணி பெற்றுக் கொடுக்கமுடியவில்லை. ஆனால் பல ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு உங்கள் சகோதரர்களும், உறவினர்களும் சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.


அன்றாட கௌரவமான ஜீவனோபாயத்திற்கான தொழில்களை அமைத்துக் கொள்ள முடியாமல் வடக்குப் பகுதியில் இன்னமும் மக்கள்  அல்லல்படுகிறார்கள். அனால் எவ்வித தொழில்களும் இல்லாதிருந்த உங்கள் சகோதரர்களும், உறவினர்களும் மக்களால் கிடைத்தஅரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரமாண்டமான கொந்தராத்துக் கம்பனிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.


அதே போல் வடக்கு மக்களின் வன வளங்களையும், மண் வளங்களையும்  பாரிய அளவு நாசம் செய்கின்றவியாபாரத்தை உங்களின் அரசியல் அணுசரணையோடு உங்கள் உறவினர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.


வடக்கு முஸ்லிம்களுக்கென  கட்டப்பட்ட வீடுகள் பலவற்றை உங்களின் ஆதரவாளர்களுக்கு அநியாயமாகப் பங்கு வைத்திருக்கிறீர்கள.


அது போலவே கல்குடா பிரதேசத்தில் நடந்த பல்வேறுஅபிவிருத்திகளில் உங்களின் அணுசரணையோடு பல்வேறு ஊழல் மோசடிகள் நடந்ததனை  அப்பிரதேசமக்கள்  ஊர்ஜிதம் செய்கிறார்கள். அப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் என்ற போர்வையில் பலநூறுஏக்கர் காணிகளை அமீரலியின் உறவினர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.


உங்களைப் போன்றவர்களின் அரசியல் சுயநலமானதென்பதனை அம்பலப்படுத்தும் எனது அண்மைய அவதானத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும். அதாவது சமூகத்திற்காகவே பாராளுமன்றப் பதவியை பொறுப் பேற்றதாக அமீரலி அவர்களே நீங்கள் சொன்னீர்கள். இதை மக்களும் நம்பியிருக்கக் கூடும்.ஆனால் பா.உ பதவியை பொறுப்பெடுத்த மறு தினம்நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை உங்களின்சுயரூபத்தை வெளிசச்ம் போட்டுக் காட்டியிருக்கிறது.


பா.உ பதவியைப் பொறுப் பேற்றவுடன் உங்களின் முதற்காரியமாக ஆடம்பர வாகன இறக்குமதிக் கோட்டாவைப் பெற்றுக் கொண்ட நீங்கள் அதனைப் பலமில்லியன் ரூபாய்க்கு விற்று சுழையாகப் பனத்தைபெற்றுக் கொண்டீர்கள். எனக்குக் கிடைக்கும் நம்பகமானதகவல்களின் படி மக்களின் பெயரால் கிடைத்த இந்தப்பதவி மூலம் உங்களுக்கு உடனடியாகக் கிடைத்த இலாபம் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் ஆகும்.


இதே காலப் பகுதியில் உங்கள் பிரதேச மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வீடுகளை விட்டு வெளியேறிய நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லமல் துயரப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் மக்களின் பதவிமூலம் பாரிய தொகையைப் பெற்றுக் கொண்ட நீங்கள்அதை மக்களுக்காக செலவு செய்வதற்கு சிறிதும்முன்வரவில்லை.இது அண்மைய உதாரணம் மட்டுமே..!


இது போன்று அமானிதமாகக் கிடைக்கும் மக்களின் பதவிகளைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் கோடிகோடியாக பணம் சம்பாதித்த பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.


இப்படியான ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள் காரணமாகத்தான் தற்போதைய அரசாங்கத்திலிருக்கும் நேர்மையான அரசியல் வாதிகள்பலரும் உங்களைப் போன்றவர்களை வித்தியாசமான சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். உங்களைப் போன்றோருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கோவைகள் பல தயாரிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.


நம்பிக்கைத் துரோகம் நேர்மையான அரசியல் என்பது மக்களுக்கு விசுவாசமான ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால், உங்களைப் போன்றவர்களின் அரசியல் வரலாறு இப்படியான ஒன்றல்ல.


உதாரணமாக எப்படியாவது தேர்தலை வெல்ல வேண்டும்என்ற தேவையிருந்த அமீரலி முஸ்லிம் காங்கிரஸைப்பயன்படுத்திக் கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை நம்ப வைப்பதற்காக நான் ஒரு போதும் கட்சியிலிருந்து விலக மாட்டேன் என்று உறுதி மொழிவழங்கினார். தனது வாக்குறுதி மீது மக்களுக்கு அதிகநம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, 'நான் SLMCயை விட்டு வெளியேறினால் அது எனது தாயோடு சினா செய்வதாகும்' என்று கூறி மக்களை நம்பவைத்தார்.


ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்து ஒருகுறுகிய காலத்தில் ளுடுஆஊ யைவிட்டு வெளியேறிவாக்குறுதியை மீறிய அந்த நம்பிக்கைத் துரோகத்தைசெய்தார்.


அமீரலி அவர்களே..!


அது போலவே கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்கிழக்கு மாகாண சபையில் இருந்த நீங்கள் உங்களின்சகாக்களான சுபைர் மற்றும் சிப்லி பாறூக்கைஇணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கான ஆதரவைவிலக்கிக் கொண்டு சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்தீர்கள். சமூகத்திற்காகவே இதனைச் செய்வதாக உங்களது சக மாகாண சபை உறுப்பினர்களுக்கும்வாக்களித்தீர்கள். அவர்களும் அதனை நம்பினார்கள்.


ஆனால் இந்த அரசாங்கம் உங்களை அழைத்து பா.உபதவி தருவதாகச் சொன்னபோது உங்களை நம்பியிருந்தமாகாண சபை உறுப்பின்களிடம் எதுவும் சொல்லாமல்அந்தப் பதவியைப் பாரமெடுத்து மஹிந்தவுக்கு ஆதரவுதருவதாக வாக்குறுதியளித்தீர்கள். யாரிடமும் எதுவும்சொல்லாமல் தொலைபேசிக்குக் கூட பதிலளிக்காமல்நீங்கள் மிகவும் முனாபிக் தனமாக நடந்து கொண்டதாகஉங்களின் சக மாகாண சபை உறுப்பினர் ஒருவரேதெரிவித்திருக்கிறார்.


இப்படி உங்களை நம்பி அரசாங்கத்தை விட்டுவெளியேறிய உங்கள் மாகாண சபை உறுப்பினர்களோடு விசுவாசமாக நடந்து கொள்ளாத நீங்கள் பின்னர்உங்களை நம்பி பா.உ பதவியை வழங்கிய மஹிந்தவுக்கும் துரோகம் செய்தீர்கள்.


ஏனெனில் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றவாக்குறுதியின் அடிப்படையிலேயே பா.உ பதவிஉங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அதனைப் பெற்றுக் கொண்டு அவரை எதிர்ப்பதானது இஸ்லாத்தின் பார்வையில் துரோகத்தனமானதே..


சமூகத்திற்காக இதனைச் செய்வதாக தயவு செய்துஇதனை நியாயப்படுத்த வேண்டாம். ஏனெனில் எதிரிக்குக்கூட நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது என்பதும்சமூக நன்மைகளின் அடிப்படையில் நம்பிக்கைத்துரோகத்தினை நியாயப்படுத்த முடியாது என்பதும்இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாடாகும்.


றிசாட் அவர்களே..!


அண்மைய தேர்தலைத் தொடர்ந்து நீங்கள் கொழும்பில்நடாத்திய நிகழ்வொன்றில் கூட உலமாக்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுஏமாற்றப்பட்டதாக மற்றுமொரு செய்தியிருக்கிறது.


அதாவது ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும்கலந்து கொள்வார்கள் என வாக்குறுதி அளித்துஉலமாக்களையும் புத்திஜீவிகளையும் அந்த விழாவுக்குநீங்கள் அழைத்திருக்கிறீhகள்.ஆனால் அப்படி யாரும்அங்கு வரவுமில்லை அதற்கான ஏற்பாடுகளும்இருக்கவுமில்லை.


நடந்து முடிந்த மாற்றத்திற்கு கதாநாயகன் நீங்களேஎன்பது போன்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்குவாக்கு வதனை நோக்கமாகக் கொண்ட நிகழ்வாகவே அது இருந்தது.


உங்களால் பணிக்கப்பட்டவர்களாலும், கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களாலும் உங்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு நீங்கள்தான் இந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கியவர் போன்று பாராட்டப்பட்டுள்ளீர்கள்.


உங்களைப் போன்றவர்களுடைய அரசியல் தலைமைத்துவங்களைப் புறக்கனித்து மக்களாகவே ஏற்படுத்திக் கொண்ட மாறற்த்தின் வெற்றியினை இப்படிசில்லறைத்தனமாகக் களவாடுகின்ற உங்களின் முயற்சியைக் கண்டு உலமாக்களும் புத்திஜீவிகளும் அருவருப்புப்பட்டனர்.


புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயர்களைப் பாவித்து இப்படி உலமாக்களையும் கொளரவமானவர்களையும் ஏமாற்றியிருக்கக் கூடாது என பலரும்  பகிரங்கமாகக்கண்டித்தனர்.


உங்கள் குடும்பத்தைப் பலப்படுத்தும் அரசியல்


தனது குடும்ப உறவினர்களை தகுதி தராதரங்கள் பாராதுஅரசியல் அதிகாரத்திலும் ஏனைய பதவிகளிலும்அமர்த்தியதுதான் மஹிந்தவின் ஆட்சியை மக்கள்தோற்கடிப்பதற்கான மற்றுமொரு பிரதான காரணமாகும்.


மஹித ராஜபக்ச தேசிய மட்டத்தில் செய்த இது போன்றகுடும்ப அரசியலுக்கு ஒப்பாகவே உங்களது பிரதேச மட்டஅரசியலும் இருக்கிறது. சில அவதானங்களை இதற்குஉதாரணமாக எடுக்கலாம்


மன்னார் மாவட்டத்தில் உங்களுக்குஅடுத்ததாக,எதிர்கால தலைமைத்துவத்திற்கு தகுதியானஒரு மக்கள் பிரதிநிதியாக உனைஸ் பாறூக் இனை மக்கள்தெரிவு செய்தார்கள். இதனைப் பொறுக்க முடியாதநீங்கள் கடந்த வடமாகாண சபை தேர்தலின்போதுஉங்கள் தம்பியை தேர்தலில் இறக்கி மாகாணசபைஉறுப்பினராக மாற்றி இருக்கின்றீர்கள். மட்டுமின்றிபடிப்படியாக உனைஸ் பாறூக்கை ஓரங்கட்டினீர்கள்


நடந்து முடிந்த தேர்தலில் மஹிந்தவின் வெற்றிக்காகமுதன்முதலாக ஆரம்பத்திலேயே பொது எதிரணியில்இணைந்து கொண்ட ஒருவராக உனைஸ் பாறூக்இருக்கின்ற  போதிலும் புதிய அரசாங்கத்தில் அவருக்குஎவ்வித அமைச்சுக்களும் கிடைப்பதனை இது வரைதடுத்திருக்கின்றீர்கள்.


புதிய அரசாங்கத்தில் உனைஸ் பாறூக் போன்றவர்கள்பெற்றுக்கொள்ளும் அமைச்சுப் பதவிகளும் கூட முஸ்லிம்சமூகத்திற்கு பிரயோசனமானதாக அமையும் என்ற பரந்தசமூக நோக்கு இருந்திருக்குமேயானால் இப்படிசுயநலமாக நடந்திருக்க மாட்டீர்கள்.


இத்தனைக்கும் உங்களது தம்பியின் தராதரங்களோடும், ஆளுமையோடும் ஒப்பிடும் போது உனைஸ் பாறூக்எவ்வளவோ மேலானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.


ஆகவே மஹிந்த செய்ததைப்போலவே கீழ்த்தரமான உங்களின் குடும்ப அரசியலின் காரணமாகதகுதியானவர்கள் சமூகப் பிரதிநிதிகளாக வருவதுதடுக்கப்பட்டது.இது ஒரு விரிந்த பார்வையில் சமூகவிரோத நடவடிக்கை என்றும் சொல்லலாம்.


அது போலவே தான் உங்களது அமைச்சு அதிகாரம் சம்மந்தப்பட்ட பல பதவிகளில் உங்களது உறவினர்களையும், உங்களுக்கு நெருக்கமானவர்களையும் தான் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். தகுதி மற்றும் தராதரங்களின் அடிப்படையில் இவற்றை நீங்கள் செய்ய வில்லை. வெளிநாட்டு தூதுவராலயங்களில் பதிவிகளுக்கும் உங்கள்சகோதரியின் கணவர் உள்ளிட்ட உறவினர்களைத் தான் நியமித்திருந்தீர்கள். மஹிந்த செய்ததைப்போல..


அமீரலி அவர்களே..!


அமைச்சர் றிசாட்டின் குடும்ப அரசியலோடு ஒப்பிடும்போது உங்களது நடவடிக்கைகளும் குறைந்ததல்ல. இதற்கு ஒரு கிட்டிய உதாரணத்தைச் சொல்லலாம்.


நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்உங்களுக்கு ஈடான பலர் கல்குடாவில் இருந்த போதிலும்அவர்களை நீங்கள் உள்வாங்கவில்லை. உங்கள்மச்சானை( சகோதரியின் கணவர்)த்தான் போட்டியிடச்செய்தீர்கள்.


நீங்கள் பா.உ பதவியினைப் பாரமெடுப்பதற்காக மாகாணசபை; பதவியை ராஜினாமாச் செய்த போது உங்களதுமச்சானைத்தான் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்என்பதனையும் ஒரு நிபந்தனையாக மஹிந்தஅரசாங்கத்திடம் முன்வைத்தீர்கள்.


கல்குடா பிரதேச மக்களினதும் ஏனைய மக்களினதும்பிரச்சினைகள் பல பற்றி மஹிந்த அரசாங்கத்திடம் பேசவேண்டிய தருணத்தில் அவைபற்றி யெல்லாம் பேசாதுஉங்களது மச்சானின் பதவி பிரச்சினையைத்தான்நிபந்தனையாகப் பேசினீர்கள். அது போலவே நீங்களும்அமைச்சு அதிகாரங்களிலிருந்த காலத்தில் முக்கியமானபதவிகளில் தகுதி தகைமைகள் இல்லாத உங்களின்சகோதரர்களையும் உறவினர்களையுமே அமர்த்தினீர்கள். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆக மக்கள் தோற்கடித்த மஹிந்த குடும்பஅரசியல் பாணியிலேயே உங்களைப் போன்றவர்களின்அரசியல் தொடர்கிறது.


அரசியல் வன்முறைகளும், அதிகார துஸ்பிரயோகங்களும்
அதிகாரத்திலிருந்த மஹிந்த அவர்கள் தமக் கெதிரான கருத்துடையோருக்கு எதிராக மேற் கொண்டவன்முறைகள் அதிகாரத் துஸ்பிரயோகங்களை மக்கள்நிராகரித்ததன் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டது.


ஆனால் இது போன்ற வன்முறைகளையும் அதிகாரத் துஸ்பிரயோகங்களையும் செய்கின்ற அரசியலாகத்தான் உங்களது அரசியலும் இருக்கிறது.
றிசாட், அமீரலி அவர்களே..!


உங்களது மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.. உங்களை விமர்சித்த, உங்களுக்கு எதிராக கருத்துச்சொன்ன நபர்களைக் குறிவைத்து நீங்கள் மேற்கொண்டதாக்குதல்கள்

எத்தனை..?அடாவடித்தனங்கள்எத்தனை..?அரசியல்

பழிவாங்கல்கள் எத்தனை..? அதுபோலவே உங்களது பதவிகளைப் பாதுகாப்பதற்காகவும்தமது சொந்த இலாபங்களுக்காகவும் கிரிமினல்நடவடிக்கைளில் ஈடுபட்ட உங்களது உறவினர்களைப்பாதுகாக்க நீங்கள் மேற் கொண்ட அதிகாரத்துஸ்பிரயோகங்கள் எத்தனை..?


உதாரணமாக நீங்கள் அமைச்சராக இருந்தசந்தர்ப்பத்தில் அரசாங்க உயர் பதவிகளில் இருந்தஉங்கள் சகோதரர் செய்த கிரிமினல் நடவடிக்கைகளில்கையும் களவுமாக மாட்டிக் கொண்ட போது அவரைப் பாதுகாப்பதற்காக உங்கள் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தினீர்கள். அது போலவே உங்களுக்குநெருக்கமான பலர் கிரிமினல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்கள் சிக்கிய சந்தர்ப்பங்களி லெல்லாம் அவர்களைப் பாதுகாப்பதற்கு மக்களால் அமானிதமாக வழங்கப்பட்ட அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்தீர்கள்.


கடந்த தேர்தலின் பின்னரும்கூட உங்களுக்கு எதிரானஅரசியல் கருத்தைக் கொண்டோர் மீது மன்னாரில் தாக்குதல் நடத்தியிருக்கிறீர்கள். தாக்கப்பட்டவர்கள் பலநாள் வைத்திய சிகிச்சை பெற்ற போதிலும், தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வில்லை. இந்தத் தாக்குதல் உங்களின் அதிகாரப் பின்னணியோடுதான் நடந்திருக்கிறது என்பதை நிரூபிக்க இது வொன்றே போதுமானதாகும்.


எனவே, மஹிந்தவின் அரசியல் வன்முறைகள் மற்றும் அரசியல் அதிகார அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்டகிரிமினல் நடவடிக்கைகள் என்பவற்றிக்கு ஒப்பானதாகவே உங்களது அரசியல் கலாசாரம் இருக்கிறது.


மேலும் மஹிந்த அற்ப அரசியல் இலாபங்களுக்காக இனவாதம் பேசியது போலவேதான் உங்களது இனவாத அரசியலும் பிரதேச வாத அரசியலும் காணப்படுகிறது.


கல்குடா பிரதேசத்திலும் மன்னார் பிரதேசத்திலும் முன்னெடுக்கப் படும் உங்கள் அரசியல் இனவாதமும்பிரதேச வாதமும் பேசுகின்ற அரசியலாகவே இன்னமும் இருக்கின்றது.


எனவே மக்களால் எற்படுத்தப்பட்ட இந்த மாற்றத்தின்வெற்றியினை களவாடிச் செல்வதற்கு நீங்கள் இனிமேலும்முயற்pசி செய்யக்கூடாது. அத்தோடு பலரது தியாகத்தைமூல தனமாகக் கொண்டு உருவான இந்த வெற்றிநிச்சயமானதன் பின்னரே இதில் பங்கு போடுவதற்காகஇணைந்து கொண்டவர்கள்தான் நீங்கள் என்பதனையும்இதில் உண்மையான பங்காளிகள் நீங்களல்லஎன்பதனையும் நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.


அத்தோடு மக்கள் தோற்கடித்த மஹிந்தவின மக்கள்விரோத அராஜக அரசியலின் அத்தனை பண்புகளும்உங்களது அரசியலிலும் தாராளமாக இருக்கின்றனஎன்பதனையும் நீங்கள் மறந்து விடக்கூடாது.


அதற்காகத்தான் மேலே உள்ள விடயங்களை நான்விலாவாரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.இது உங்கள்மீதான தனிப்பட்ட கோப தாபங்களின் காரணமாகசொல்லப்பட்டவையல்ல. மாற்றமாக உங்களின்அரசியலினை நீண்ட காலமாக அவதானித்து ஆதாரபூர்வமாக சொல்லப்பட்ட விடயங்களே இவை.


இவற்றை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.


எனவே இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஒரு முற்போக்குஅரசியல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும்ஏற்படுத்தப்பட வேண்டிய ஒரு புதிய அரசியல்மாற்றத்திற்கு உங்களைப் போன்றவர்கள் இனிமேலும்தடையாக இருக்கக் கூடாது என்பதனை அல்லாஹ்வின்பெரால் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வண்ணம்
அப்துல் வஹாப்

October 1,2013,
My open letter to minister RB.

அன்புடன்-
சகோதரர் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களே..!
வடமாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கின்ற நிலையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிஸியாக இருப்பீர்கள் என்று எமக்குத் தெரியும்.


இருந்தாலும் எங்களைப் போன்ற சாதாரண பொது மக்கள் உங்களிடம் சொல்ல வேண்டிய சில கருத்துக்களை சொல்வதற்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பமும் இல்லை.
ஏனெனில் அரசியல் வாதிகள் என்போர் தேர்தல் காலத்தின் போது மாத்திரமே பொது மக்களின் பக்கம் தமது கண்களையும் காதுகளையும் திருப்புகின்றனர்.


இந்நாட்டில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களில் நீங்களும் ஒருவர். இருந்தாலும் மற்றைய இருவரையும் விட  நீங்களே அரசாங்கத்தில் அதிகம் செல்வாக்குள்ளவர் என்றும்  கருதப்படுகிறது.


எனவேதான் இந்நாட்டு முஸ்லிம்கள் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களிடம் இக்கடித மூலமாக சில கருத்துக்களையயும் கேள்விகளையும் பகிரங்கமாக முன்வைக்க நினைக்கிறேன்.


01.   இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு கௌரவமான தீர்வுகளைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடே SLMC உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பகால கொள்கைகள், அதனை வளர்ப்பதற்கு மக்கள் செய்த தியாகங்கள் என்பனவெல்லாம் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


ஏனெனில் 1994 ஆம் ஆண்டுகளில் PA கட்சியின் அமைப்பாளராக அரசியலைத் தொடங்கிய நீங்கள் சந்தர்ப்ப வசமாகவே SLMC யில் இணைந்து கொண்டீர்கள். அந்தக்கட்சியில் தொடர்ந்தும் இருந்து  அதனை சக்தி மிக்கதாக மாற்றி அதன்  மூலம் முஸ்லிம்களுக்கான  தீர்வுகளை வென்றெடுக்கப் பாடுபடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் வடமாகாண மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள். அதன் மூலமாகத்தான் நீங்கள் பாராளுமன்றம் சென்றீர்கள்.


 ஆனாலும் பாராளுமன்றம் சென்று ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே உங்களை உருவாக்கிய கட்சியயை விட்டுப் பிரிந்து இன்னும் சிலரையும் கூட்டிக் கொண்டு சந்திரிகா அரசுடன் இணைந்தீர்கள். அதற்கு பரிசாக நல்ல அமைச்சுப் பதவிஒன்றையும் பெற்றுக் கொண்டீர்கள்.


SLMC முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவில்லை சுயாதீனமாக செயற்படவில்லை; பதவிகளுக்காக சோரம் போய்விட்டது; எவ்வித எழுத்து மூல ஒப்பந்தமும் இல்லாமல் அரசாங்கங்களுடன் இணைந்து தனித்துவத்தை இழந்துவிட்டது என்றெல்லாம் காரணங்களைக் கூறியே உங்களின் கட்சி தாவும் முடிவை அப்போது நியாயப்படுத்தியிருந்தீர்கள். பின்னர் தனிக்கட்சி யொன்றைத் தொடங்கி அதற்கு தலைவராகவும் மாறினீர்கள்
இவ்வாறு நீங்கள் செய்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் SLMC யினுடைய போக்கிற்கும் உங்களது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகளுக்குமிடையில் ஏதும் வித்தியாசங்கள் இருப்பதாகவும்தெரியவில்லை.சுருக்கமாகச் சொன்னால் முஸ்லிம்களின் ஆணையைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு சேவகம் செய்து சொந்த நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் நீங்களும் அவர்களும் ஒன்றாகவே செயற்படுகின்றீர்கள்.


முஸ்லிம்களுக்காக ஒன்றுபட்டு குரல்கொடுக்கவேண்டிய விடயங்களில் மாத்திரமே முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றீர்கள்.

இந்நிலையில் SLMC செய்யத்தவறியதாக உங்களால் கூறப்பட்ட என்னயென் ன விடயங்களை நீங்களும் உங்களது அரசியல் கட்சியும் இத்தனை காலமாக நிவர்த்தி செய்திருக்கிறது என்பதனை இப்போதாவது மக்களுக்கு கூறமுடியுமா..?அத்தோடு இதுவரை காலமும் நீங்கள் இணைந்து பல தேர்தல்களிலும் உங்களால் ஆதரவு வழங்கப்பட்ட பெரும்பாண்மைக் கட்சிகளோடு முஸ்லிம்கள் சார்பாக நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எவை என்பதனை இப்போதாவதுசொல்ல முன் வருவீர்களா..?


02.   வடமாகாண மக்களின் நலன்களை வென்றெடுப்பதனை இலக்காகக் கொண்டே அரசியல் செய்வதாக நீங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றீர்கள். அம்மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஆளும் கட்சியுடன்இணைந்திருப்பதுவே ஒரேயொரு தீர்வு எனவும் கூறுகின்றீர்கள்.


மத்திய அரசாங்கத்தில் வடமாகாண மக்களுக்காகவே இணைந்திருப்பதாக நீங்கள் கூறும் வாதத்தின்படி பார்க்கும் போது வட மாகாண சபையில் TNA அரசாங்கத்திலும் நீங்கள் அங்கம் வகித்தாக வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான்வடமாகாண சபை ஆட்சியை அமைக்கப்போகிறார்கள். இருப்பினும் நீங்களோ தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகளோடு தொடர்ந்தும் முரன்பாட்டு அரசியலையே மேற்கொண்டு வருகின்றீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும்அரசாங்கதலைமைகளை சந்தோசப்படுத்தும் முகமாகவே இதனைச் செய்கின்றீர்கள் என்றும் புரிகிறது.


சில மாதங்களின் முன்பு நீங்களும் தமிழ் அரசியல் தலைமைகளை வழி நடாத்தும் கத்தோலிக்க மத குருமார்களும் ஒரே சபையில் அமர்ந்து பிரச்சினைகளைப் பேசி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என உலமாக்கள் சிலரால்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளை இறுதிக்கட்டத்தில் அதிலிருந்து நீங்கள் ஒதுங்கிக் கொண்டீர்கள்.


அது போன்றவர்களுடன் நேரில் பேசினால் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை பகைக்கவேண்டி வரும் என நீங்கள் அதற்கு காரணம் கூறியிருக்கின்றீர்கள்.


வடமாகாண முஸ்லிம் மக்களின் நலன்களுக்காகவே இத்தனை இழிவுகளுக்கு மத்தியிலும் மத்திய அரசாங்கத்தில் உங்களால் தொடர்ந்தும் அங்கம் வகித்து அதன் ஒரு பங்காளி அமைச்சராக இருக்க முடியும் என்றால் அதே மக்களுக்காக வடமாகாணத்தில் தமிழ் தரப்பு அரசாங்கத்துடன் அல்லது அவர்களது பிரதி நிதிகளுடன் ஒரு கௌரவமான பேச்சு வார்த்தையை மேற்கொள்ளவோ இணக்கப்பாட்டு அரசியல் ஒன்றையோ மேற்கொள்ள ஏன் உங்களால் முடியவில்லை?


03.   வட மாகாண மக்களின் மீள் குடியேற்றத்தில் இந்திய அரசாங்கம் வழங்கும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மிக முக்கியமானதாகும். இந்த வீட்டுத் திட்டத்தில் வட மாகாண முஸ்லிம்களுக்குரிய பங்கு இதுவரை நியாயமான முறையில் உறுதி செய்யப்படவில்லை. இதனையே நீங்களும் உங்களது அரசியல் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கின்றீர்கள்.


முஸ்லிம்களுக்கு உரிய பங்கு இத்திட்டத்தில் கிடைக்காமல் போனதற்கு காரணம் தமிழ் இனவாதிகளே என்றும் பிரச்சாரம் செய்ய முற்படுகின்றீர்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. இவ்வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டகாலத்தில் பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்வது என தீர்மாணிக்கப்பட்ட நிபந்தனைகளே இதற்கு காரணமாகும். உண்மை என்னவென்றால், இந்த நிபந்தனைகளை தயாரித்தது தமிழ் அரசியல் வாதிகள் அல்ல. அரசாங்கம் நியமித்தகுழுவும் இந்திய தூதரக அதிகாரிகளுமே இந்த நிபந்தனைகளை தயாரித்தனர்.


இவ்வாறு தயாரிக்கப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம் வடமாகாண முஸ்லிம்களில் 90 வீதமானோர் இத்திட்டத்தில் வீடொன்றைப் பெறுவதற்கு தகுதி பெற தவறி விடுகின்றனர். உண்மையில் இம்மக்கள் தகுதி பெறும் வகையில்இந்நிபந்தனைகள் உருவாக்கப்பட்டிருந்தால் மிக இலகுவாகவே இவர்கள் வீடுகளைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.


 நீங்கள் அங்கம் வகிக்கும் உங்கள் அரசாங்கம் வடமாகாண முஸ்லிம்கள் தகுதி இழக்கும் வகையில் இவ்வீட்டுத் திட்டத்திற்கான பயனாளி நிபந்தனைகளை தயாரித்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்..? இம்மக்கள் மீது உண்மையானஅக்கறை இருந்திருந்தால் இதனை நீங்கள் சரிவர அப்போது ஏன் பேசவில்லை..?


பேச வேண்டிய தருணங்களில் மௌனமாக இருந்துவிட்டு அடுத்தவர்களை குற்றம் சுமத்துவதில் என்ன பலன் இருக்கிறது? கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்தின்போது அவசர அவசரமாக ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்நீங்கள் அனுப்பியதாக செய்திகள் வந்தது. 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என அக்கடிதத்தில் வேண்டு கோள் விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. உங்கள் கடிதத்திற்கு கிடைத்தபலன் என்ன..? அதுவும் கூட தேர்தல்கால தந்திரங்களில் ஒன்றாக கொள்ளப்படலாமா..?


 04. வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளை சிங்கள இனவாதிகள் அதற்கு பலமான எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த எதிர்ப்பு அணியில் நீங்களும் இணைந்து கொண்டீர்கள். வடமாகாண சபைத் தேர்தல் நடந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் அவர்கள் காணி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவார்கள் எனவும், அது முஸ்லிம்களின் நலன்களுக்கு பாதகமாக அமையும் எனவும் சுட்டிக் காட்டினீர்கள். ஆனால் கிழக்குமாகாண சபை அதிகாரம் தற்போது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களது பிரதிநிதி ஒருவர்தான் அங்கு முதலமைச்சராகவும் இருக்கிறார்.


கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றனவட மாகாண சபையில் எந்த காணி அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு சென்று விடும் என்று நீங்கள் அச்சப்படுகின்றீர்களோ அதேஅதிகாரம் இப்போது கிழக்கு மாகாண சபையில் உங்கள் கைகளில் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் நூற்றுக்கணக்கான காணிப்பிரச்சினைகளில் ஒன்றையாவது இதுவரை உங்களால் தீர்த்துவைக்க முடிந்திருக்கிறதா..? இதனை பகிரங்கமாக மக்களுக்கு சொல்ல முடியுமா..? உங்களைப் போன்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக அடுத்த சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவதுஎந்த வகையில் நியாயமானதாகும்...?


 05.   இந்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற எதேர்சையதிகாரமான, சிறுபாண்மை மக்களின் உரிமைகளுக்கு மரியாதை இல்லாத அரசியல் சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு எது முக்கிய காரணம் என்பது உங்களுக்குத் தெரியும்.


 தங்களின் அரசியல் பிடிக்குள் அத்தனை பேரையும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கம் நிறைவேற்றிய 18 ஆவது திருத்த சட்டமூலமே இதற்கான அடிப்படைக் காரணமாகும் என்பதனை நீங்களும் மறுக்கமாட்டீர்கள்.


இந்த 18ஆவது திருத்த சட்ட மூலம் காரணமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சர்வாதிகார ஜனாதிபதி முறையாக மாறியிருக்கிறது. பாராளுமன்ற பிரதிநிதிகளின் அதிகாரம் செல்லாக்காசாக மாறியிருக்கிறது. எதிர்கட்சி சிதைக்கப்பட்டிருக்கிறது. சிறுபாண்மை மக்களுக்கான கட்சிகள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன


சட்டமும் ஒழுங்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மாத்திரமே பயனளிக்கும் என்ற நிலை தோன்றியிருக்கிறது. ஒரு நாட்டின் சட்டவாட்சிக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவசியமான நீதித்துறைக்கும் காவல் துறைக்கும் இருக்க வேண்டிய சுதந்திரம் நசுக்கப்பட்டிருக்கிறது. ஊழலும் மோசடியும் வீண்விரயமும் தலைவிரித்தாடுகின்றன. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை சுமை பயங்கரமாக கூடியிருக்கிறது. உலகின் பயங்கரமான நாடுகளின் வரிசையில் இலங்கை முக்கிய இடம் பிடித்திருக்கிறது


இப்படியெல்லாம் பயங்கரமான விழைவுகளை ஏற்படுத்திய 18 ஆவது திருத்த சட்டத்திற்கு நீங்களும் உங்களது கட்சியும் இந்நாட்டின் நலன்களை துளியும் கணக்கெடுக்காமல் கண்களை மூடிக்கொண்டு பொறுப்பற்ற முறையில் ஆதரவளித்தீர்கள். அது போலவே இந்நாட்டின் சிறுபாண்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களை இல்லாமல் செய்யக்கூடிய திவி நெகும சட்ட மூலத்திற்கும் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கினீர்கள்.


எமது மக்களின் நலன்களுக்கும் இந்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நலன்களுக்கும் எதிரான விடயங்களை இந்ந அரசாங்கம் செய்கின்ற போது அதற்கு எதிராக உங்களால் ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை? இன்றுஇந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தோன்றியிருக்கும் பயங்கரமான சூழ்நிலைகளுக்கு பின்னணியாக செயற்படும் அரசியல் சூழ்நிலைகளை உருவாக்கியதில் உங்களுக்கும் கனிசமான பங்கிருக்கிறது என்பதனை உங்களால் மறுக்கமுடியுமா..?


06.   வட மாகாண முஸ்லிம்களின் சுமூகமான மீள்குடியேற்றத்திற்கு தடையாக தமிழ் இன வாத சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். அது போலவே சிங்கள இன வாதசக்திகளும் கூட தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்கில் நிம்மதியாக குடியேறி வாழுவதைத் தடுப்பதற்கான அத்தனை காரியங்களையும் செய்து வருகின்றார்கள் என்பதும் உண்மை.


இந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது என்பதும் உண்மையாகும். இதன் காரணமாகவே தமிழ் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களிலெல்லாம் தெற்கிலிருந்து கொண்டுவரப்படும் சிங்கள் மக்கள் அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் குடியேற்றப் படுகின்றார்கள்.


கிழக்கிலும் இது மேற் கொள்ளப்படுகின்றது. வட கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு அரசியல் பலமுள்ளவர்களாக இருப்பதனை சிதைத்து விடுவதற்காகவே இதனை அரசாங்கம் செய்கிறது என்பதுஉங்களுக்கும் தெரியும். அது போலவே வட கிழக்கு பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பாதுகாப்பு வலயம் என்றும், தொல்பொருள் ஆராய்ச்சி வலயம் என்றும், ஏனைய அபிவிருத்திகளை காரணம் காட்டியும் இந்தஅரசாங்கம் அநியாயமாக பறித்து வருகிறது. இதனையும் நீங்கள் அறிவீர்கள்.


உண்மையில் எமது மக்கள் மீது நேர்மையான அக்கறை உங்களுக்கு இருந்திருந்தால் இந்த விடயங்கள் பற்றியும் நீங்கள் கண்டணங்களைத் தெரிவித்து அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நீங்களோ முஸ்லிம் மக்களின் குடியேற்றத்திற்கு தமழ் அரசியல் வாதிகள் மாத்திரமே தடையாக இருக்கின்றார்கள் என்ற பொய்யான தோற்றப்பாட்டை உருவாக்கி நிரந்தரமாக தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை மேலும் மோசமாக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றீர்கள்.


வட மாகாண முஸ்லிம் மக்களின் நலன்களை கடுமையாகப் பாதிக்கும் சிங்களக் குடியேற்றங்க் மற்றும் அரசாங்கத்தின் காணி சுவீகரிப்பு போன்ற விடயங்கள் பற்றி நீங்கள் இன்னமும் மௌனம் காப்பது ஏன்..?


07.       இஸ்லாத்தின் பார்வையில் அரசியல் என்பது தனிநபர் வளர்ச்சிக்கானதோ அல்லது குடும்ப அபிவிருத்திக்கானதோ அல்ல. அது முழுக்க முழுக்க சமூக நலன்களுக்கானதாக அமைய வேண்டும். ஆனாலும் அரசியல் என்பது இன்றுபெரும் வியாபாரமாகவும் குடும்ப சொத்தாகவும் மாறியிருக்கின்றது. நம் சமூகம் மாத்திரமின்றி முழு நாடுமே அரசியல் மூலம் விமோசனம் பெறாமல் சீரளிவதற்கான காரணம் இதுவேயாகும்.


இம்முறை வட மாகாண சபைத் தேர்தலில் உங்கள் சகோதரனை ஒரு முன்னணி வேட்பாளனாக களம் இறக்கியிருப்பதன் மூலம் இந்நாட்டின் சாபக்கேடாக மாறியிருக்கின்ற  குடும்ப அரசியல் கலாசாரத்தை வட மாகாணத்தில்தொடங்கி வைத்திருக்கின்றீர்கள்.


உங்கள் சகோதரனை விடவும் நன்கு கல்வி கற்ற,மார்க்கப்பபற்றுள்ள, நேர்மையான அத்தோடு வட மாகாண மக்கள் மீது உண்மையான அக்கறையும் நேசமும் உள்ள எத்தனையோ இளைஞர்கள் இப்பிரதேசத்திலே இருக்கிறார்கள்.அப்படி இருந்தும் அவர்களை ஒரு முதன்மையான வேட்பாளராக இறக்கி வெற்றி பெற உழைக்கும் மனோ நிலை உங்களுக்கு ஏன் வரவில்லை..?


வட மாகாண முஸ்லிம்களின் தலைமைத்துவம் தொடர்ந்தும் உங்களின் பிடிக்குள் இருக்க வேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புகின்றீர்களா..?


கடந்த தடைவ சகோதரர் உனைஸ் பாறூக் அவர்கள் எதிர்பாராத விதமாக தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உருவாகிவிட்ட நிலையில் இது உங்களின் அரசியல் இருப்புக்கு நீண்ட காலத்தில் அச்சுறுத்தலாகஅமையும்என நம்புவதனால்தான் உங்கள் சகோதரனை அடுத்த அரசியல் வாரிசாக உருவாக்க நினைக்கின்றீர்களா..?


08.   கடந்த மூன்று வருடங்களாக இந்நாட்டில் முஸ்லிம்களின் மத கலாசார உரிமைகளுக்கும் பொருளாதார நலன்களுக்கும் எதிராக ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துக்களை நீங்களும் அறிவீர்கள்.


இது வரை பள்ளிவாயல்கள் மீது மேற் கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் அல்லது தாக்குதல்கள் என்ற 25 சம்பவங்களோடு சேர்த்து முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட ஏறத்தாள 300 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


இதில் எவற்றுக்கும் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதில் பல தாக்குதல் சம்பவங்கள் பொலிஸாரின் அல்லது இராணுவத்தினரின் கண் முன்னாலேயே நடந்து முடிந்திருக்கின்றன.


இறுதியாக நடந்து முடிந்த மஹியங்கன மற்றும் கிரான்பாஸ் சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.


அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளில் ஒருவரான நீங்களும் உங்களது கட்சியும் இவற்றைத் தடுப்பதற்கு இது வரை காத்திரமாக எதையும் செய்ததாகவும் தெரியவில்லை.

அனைத்து முஸ்லிம்களும் ஒன்றாகச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்த வேண்டும் என நீங்களும் சேர்ந்ததான் முடிவெடுத்தீர்கள். ஆனாலும் உங்கள் வேண்டுகோளை ஏற்று இது பற்றி உங்களோடு பேசுவதற்கு ஜனாதிபதி இதுவரை தயாராகஇல்லை.


கிரான்பாஸ் சம்பவத்தில் தொடர்புபட்டோர் பற்றிய விபரங்களை ஆதார பூர்வமாக திரட்டி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் இது வரை ஒன்றும் நடக்கவில்லை.(ஒரு கண்துடைப்புக்காக இரு நபர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டதைத் தவிர). இந்நாட்டின் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான ஜனாதிபதியும்கூட உங்கள் வேண்டு கோளை கணக்கெடுக்கவில்லை.


இந்த சூழலில்தான் வட மாகாண சபைத்தேர்தலும் வந்தது. முஸ்லிம்களின் வாக்கு அரசாங்கத்திற்கு தேவைப்பட்டது. அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் எவையும் தனியாகச் சென்று தேர்தலில் போட்டியிட்டு விடக்கூடாது என்று அரசாங்கம் பெரிதும் விரும்பியது. அந்த விருப்பத்தை நிறைவு செய்வதிலும் நீங்கள்தான் முன்நின்று உழைத்தீர்கள்.


இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது ஏன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி உங்களால் ஜனாதிபதியுடன் ஒரு சீரியசான பேச்சு வார்த்தையை நடாத்த முடியாமல் போனது?


நாட்டு மக்களுக்கு ஓரளவாவது மரியாதை கிடைக்கும் தேர்தல் காலங்களிலாவது அரசாங்கத்துடன் எமது மக்களுக்காக கொளரவமாகவும் மரியாதையாகவும் பேசுகின்ற சுதந்திரமும் துணிச்சலும் உங்களுக்குக் கிடையாதா..? இந்தசந்தர்ப்பத்தை விட்டால்வேறு எப்போதுதான் இந்த மக்களுக்காக நீங்கள் பேசப்போகின்றீர்கள்...?


09.    இறுதியாக உங்களிடம் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.


 எந்த அகதி மக்களின் விடிவுக்காக அரசியல் நடாத்துவதாக நீங்கள் சொல்லுகின்றீர்களோ அம்மக்களின் வாழ்வும் அவலமும் துயரங்களும் உங்களுக்குத் தெரியும்.


 கடந்த 23 வருடங்களாக இம்மக்கள் வீடிழந்து, தொழில் இழந்து, வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி அடிப்படை வாழ்க்கை வசதிகள் கூட இல்லாமல் படும் துயரம் முழு உலகும் அறியும்.


இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் இம்மக்கள் வாழும் சில முகாம்களில் மலசலகூட வசதிகள் கூட இல்லாமல் இன்றும் கூட தமது இயற்கை கடன்களை கழிப்பதற்காக வயது வந்தபெண்பிள்ளைகளும் முதியோர்களும் கூட காலைப் பொழுதுகளில் கியூ வரிசைகளில் நற்கின்ற துயரக் காட்சிகள் இன்னும் தொடர்கின்றன.


இம்மக்களின் பெயரால் அரசியல் செய்யும் நீங்களும் கூட இம்மக்களைப்போலவே ஆரம்ப நாட்களில் ஒரு அகதியாக வாழ்க்கையின் அடி மட்டத்திலேயே இருந்தீர்கள். இவர்களின் நாளாந்த துயரங்களே உங்களின் துயரங்களாகவும்இருந்தன.


ஆனாலும் அரசியலுக்கு வந்ததன் பின்னர் இன்று நீங்களும் உங்கள் குடும்பமும் பொருளாதாரத்திலும் வாழ்க்கை வசதிகளிலும் வானுயர்ந்து நிற்கின்றீர்கள். உங்களின் இந்த அதீத பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் அரசியலே காரணம்என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


மக்களின் வாக்குரிமையை கோடிகள் பல கொடுத்து பேரம் பேசும் அளவுக்கு பொருளாதாரத்தின் உச்சத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள்.தேர்தல் காலங்களில் தண்ணீராய் தாங்கள் இறைக்கும் பணத்தொகைகளைப் பார்க்கின்றபோது எப்படிஉங்களால் இத்தனை கோடிகளை செலவழிக்க முடிகிறது என்பதனை எங்களால் நம்ப முடியவில்லை.


ஏனென்றால் ஒரு அமைச்சராக இருப்பவருக்குரிய சட்ட ரீதியான கொடுப்பனவுகள் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும்.  இந்நிலையில் சட்ட ரீதியான உங்கள் வருமானத்தை மாத்திரம் கொண்டு இத்தனை தூரம் கோடி கோடியாகஉங்களால் பணம் சேர்த்திருக்க முடியாது.


இந்நிலையில் விடை காண முடியாத மர்மமான விடயம் என்னவென்றால்... எந்த அகதி மக்களுக்காக அரசியல் நடாத்துகின்றீர்களோ அந்த மக்கள் வாழ்வின் அடி மட்டத்திலேயே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அம்மக்களின் பெயரால் அரசியல் நடாத்தும் நீங்களும் உங்கள் குடும்பமும்உங்களைசுற்றியிருப்போரும் மாத்திரம் பெரும் வசதி கொண்டோர்களாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது...?


இத்தனை காலமும் இம்மக்களின் பெயரால் கிடைத்த அதிகாரங்களை 100 வீதமும் இம்மக்களுக்காகவே நீங்கள் பயன்படுத்தி நேர்மையாக நடந்து கொண்டிருந்தால் எப்படி உங்களைப் போன்றவர்களால் அரசியல் மூலம் இத்தனைபொருளாதாரங்களையும் சேர்க்கமுடிந்தது..?


ஆக உங்களைப்போன்ற அரசியல் வாதிகள் பெரும் பெரும் செல்வந்தர்களாக மாறியிருப்பதனை நமது மக்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்தினதும் அதிகார துஸ்பிரயோகத்தினதும் அடையாளமாகவே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இதனை உங்களால் நிராகரிக்க முடியுமா..?


இந்தக் கேள்விகளை நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் முன்வைத்தாலும் உங்களைப்போன்ற அரசியல் வாதிகளைப் பார்த்து முஸ்லிம் சமூகத்தில் சிந்திக்கக்கூடிய பெரும் பாலானவர்கள் கேட்கத் துடிக்கின்ற கேள்விகளே இவையாகும்.


பகிரங்கமான இந்தக் கேள்விகளுக்கு பகிரங்கமான பதில்களை வழங்குவீர்களேயானால் எம் சமூகத்திற்கு இருக்கும் கேள்வி கேட்கும் உரிமையையாவது நீங்கள் மதித்து செயற்பட்டமைக்காக நானும் எம்மைப்போன்றவர்களும்சந்தோசப்படுவார்கள்.


நிச்சயம் இவற்றுக்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

Abdul wahab.


அன்புடன் சகோதரர் றிசாத் பதியுதீன், சகோதரர் அமீரலி அவர்களே..! அப்துல் வஹாப் Reviewed by NEWMANNAR on January 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.