மலேசிய விமானம் எம்.எச். 370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு
10 மாதங்களுக்கு முன், நடுவானில் மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370, விபத்துக்குள்ளானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த சென்னை பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேரும் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான மலேசிய விமானம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் 2 மணி நேரத்தில் அந்த விமானம், ரேடாரில் இருந்து மாயமானது.
அந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டன. நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டன. ஆனால் எந்தப் பலனும் இல்லை. மாயமாகி 10 மாதங்கள் ஆன நிலையில், விமானத்தின் சிதைவோ, பயணம் செய்தவர்களின் உடலோ எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்திய பெருங்கடல் பகுதியில் அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. மலேசியா குற்றப்புலனாய்வு விசாரணையும் நடத்துகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில், சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றத்தக்க விதத்தில், அந்த விமானம் விபத்துக்கு உள்ளானதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குனர் அசாருதீன் அப்துல் ரகுமான் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கனத்த இதயத்துடனும், மிகுந்த வேதனையுடனும், மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, விபத்துக்கு உள்ளானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். அதில் பயணம் செய்த 239 பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் பலியாகி விட்டதாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னைப் பெண் சந்திரிகா
இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 5 பேர் இந்தியர்கள். அவர்கள் சேத்னா கொலேக்கர், சவானந்த் கொலேக் கர், சுரேஷ் கொலேக்கர், சந்திரிகா சர்மா, பிரகலாத் ஷிர்சதா ஆவார்கள்.
இவர்களில் சந்திரிகா சர்மா, சென்னையை சேர்ந்த பெண் ஆவார். கனடாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்தேஷ் முகர்ஜியும் இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர்.
விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாக பலியாகி விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டதால், விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பத்தினரும், இழப்பீடு பெறுவதற்கு சட்டப்பூர்வமாக வழி பிறந்துள்ளது.
மலேசிய விமானம் எம்.எச். 370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 30, 2015
Rating:


No comments:
Post a Comment