அண்மைய செய்திகள்

recent
-

மதங்கள் தோற்றுவிடவில்லை, மதங்களைப் பின்பற்றுகின்றவர்கள் தோற்றுவிட்டனர்! உலக சர்வமத ஒற்றுமை வார நிகழ்வில் தமிழ் நேசன் அடிகளார்-Photos


உலகத்திலே இருக்கக்கூடிய நான்கு உயர்ந்த மதங்களைக் கொண்டது இந்த நாடு. இந்த மதங்களின் போதனைகள் இந்த நாட்டை அமைதியின் வழியில் நடத்த வேண்டும். ஆனால் கடந்த காலத்தில் நமது அனுபவம் எதிர்மறையானதாகவே உள்ளது. கடந்த காலங்களில் இந்த நாட்டில் வன்முறைகளும், அநீதிகளும், பாரபட்சங்களும் தொடர்கதையாக இருந்தன. அப்படியானால் இந்த நாட்டில் மதங்கள் தோற்றுவிட்டனவா என்ற கேள்வி எழுகின்றது. நிச்சயமாக இது மதங்களின் தோல்வி அல்ல; மாறாக மதங்களைப் பின்பற்றுகின்றவர்களின் தோல்விதான் என நெய்வர் அமைப்பின் செயலாளர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.


இம்மாதம், பெப்வரி 1 – 7ஆம் திகதி வரையிலான ஒரு வாரம் உலக சர்மத ஒற்றுமை வாரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ‘நெய்வர்’ என்று அழைக்கப்படுகின்ற நல்லிணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் இந்த வாரத்தை நினைவுகூருமுகமாக அநுராதபுரத்தில் சர்வமதத் தலைவர்களுக்கான ஒன்றுகூடலை நடாத்தியது. இதில் பல பௌத்த, கிறிஸ்தவ, இந்து. இஸ்லாமிய சமயத்தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மன்னார் கலையருவியின் இயக்குனரும், மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், ‘மன்னா’ என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான தமிழ் நேசன் அடிகளார் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது,
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. புதிய சகாப்தத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கின்றது. நம்பிக்கை தரும் மாற்றங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மதங்களின் பங்களிப்பு, மதத்தலைவர்களின் பங்களிப்பு காத்திரமானதாகும்.

மதத்தலைவர்கள் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டுமென்றால், பிளவுபட்டுள்ள இனங்களை, மதங்களை அவர்கள் ஒன்றுசேர்க்க வேண்டுமென்றால், முதலில் அவர்கள் தமக்குள் ஒற்றுமையை புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.

யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தத்தால் ஏற்பட்ட மனக்காயங்கள் இன்றுவரை எல்லா சமூகங்களிலும் உள்ளன. உயிர் இழப்பு, உடமை இழப்பு, உடல் உறுப்புக்களின் இழப்பு என இழப்பின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த இழப்புக்களால் ஏற்பட்ட மனக்காயங்கள் இன்றுவரை ஆற்றப்படவில்லை. அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சுக்கள், சந்தர்ப்பவாதப் பேச்சுக்கள் போன்றவற்றால் சிலவேளைகளில் இந்த மனக்காயங்கள் பெரிதாகிக்கொண்டு செல்கின்ற சூழ்நிலையே உள்ளது. இந்த நிலையில் மக்கள் மனங்களில், சமூகங்களில் ஏற்பட்டுள்ள இந்த மனக்காயங்களை யார் ஆற்றுவது? இம்மனக்காயங்களுக்கு யார் மருந்திடுவது? இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அனைத்துச் சமூகங்களையும் சார்;ந்த மதத்தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். இந்தப் பணி காலத்தின் கட்டாயத்தேவையாகும்.

இந்தப் பணியில் சமயங்கள் ஈடுபடவேண்டும் என திருத்தந்தை அவர்கள் சர்வமதத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவர் இவ்வாறு கூறுகின்றார், “பல வருடங்களாக இந்நாட்டின் மக்கள் உள்நாட்டுப் பிரச்சினை மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தேவை என்னவெனில் ஆற்றுப்படுத்தலும், ஒற்றுமையுமேயாகும். மேலதிக பிளவோ, பிரிவினையோ அல்ல. இந்நாட்டின் நன்மையை ஏன் முழு மனித குடும்பத்தின் நலனை விரும்பும் அனைவரினதும் அதிஉன்னத கடமைகளாகவே ஒற்றுமையை வளர்ப்பதும், காயங்களை ஆற்றுவதும் அமைகின்றன.”

எனவே மதத்தலைவர்களாகிய நாம் நமக்குள் முதலில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். பின்னர் இந்நாட்டின் ஒற்றுமைக்காக இணைந்து உழைப்போம்.






மதங்கள் தோற்றுவிடவில்லை, மதங்களைப் பின்பற்றுகின்றவர்கள் தோற்றுவிட்டனர்! உலக சர்வமத ஒற்றுமை வார நிகழ்வில் தமிழ் நேசன் அடிகளார்-Photos Reviewed by NEWMANNAR on February 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.