அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்திடம் இருந்து பண்ணைகளை விடுவித்துத் தருமாறு ஐங்கரநேசன் கோரிக்கை


இராணுவத்தின் பிடியில் இருக்கும் விவசாய அமைச்சுக்குச் சொந்தமான பண்ணைகளையும் கூட்டுறவுச் சங்கக் கட்டிடங்களையும் விடுவித்துத் தருமாறு மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பை கூட்டுறவு அமைப்புகளுக்கு ஊடாக உறுதி செய்யும் நோக்கிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று நேற்று யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வட பகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள்.

அது போன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே மத்திய அமைச்சர்கள் தினந்தோறும் வடக்குக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே எமது மக்களின் கருத்தாக உள்ளது.

அவ்வாறு இல்லாமல், உண்மையாகவே தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனையால்தான் இங்கே வந்து செல்வதாக இருந்தால் அதை மெய்ப்பிக்கும் வகையில் சிலவற்றைச் செய்தாக வேண்டும்.

முதற் கட்டமாக இராணுவத்தினர் வசம் இருக்கும் விவசாய அமைச்சுக்குச் சொந்தமான எங்களது பண்ணைகளையும், கூட்டுறவுச் சங்கக் கட்டிடங்களையும் விடுவித்துத் தாருங்கள்.

வடக்கில் கூட்டுறவுத்துறை கொடிகட்டிப் பறந்த ஒரு காலம் இருந்தது. எமது மக்கள் ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கக்கூடிய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கித் தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளார்கள்.

கூட்டுறவுச் சங்கங்களினது இலாப வருவாய்க்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையில் ஒருவித சமநிலை பேணப்பட்டு, கூட்டுறவும் சமூகமும் ஒன்றையொன்று சார்ந்து வளர்ச்சி பெற்றிருந்தன.

எமது வெங்காயச் செய்கையாளர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி அச்சுவேலியில் தங்களுக்கென சொந்தக் கட்டிடம் ஒன்றையே நிறுவினார்கள். ஆனால் அந்தச் சங்கக் கட்டிடத்தில் இன்று அடாத்தாக இராணுவமே நிலை கொண்டிருக்கிறது. எமது மக்களுக்குச் சொந்தமான வளமான விவசாய நிலங்களிலும் இராணுவமே பயிர் செய்து கொண்டிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குக் காலத்துக்கு காலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதிக விளைச்சலைத் தரக்கூடிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை எல்லாம் எங்களால் செய்ய முடியாத விதத்தில் எமது மாகாண அமைச்சுக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்தி பண்ணையிலும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்திலும், வவுனியாவில் உள்ள தாய்த்தாவர பண்ணையிலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து எல்லாம் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ் பாலிகக்கார, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் வ.மதுமதி ஆகியோரும் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இராணுவத்திடம் இருந்து பண்ணைகளை விடுவித்துத் தருமாறு ஐங்கரநேசன் கோரிக்கை Reviewed by NEWMANNAR on March 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.