அண்மைய செய்திகள்

recent
-

ஓய்வு பெற்ற கிராமசேவகர் ,அண்ணாவியார் மூத்த கலைஞர் சக்கரியாஸ் செபஸ்ரியான் டயஸ் அவர்களின் அகத்திலிருந்து..........


கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் நாட்டுக்கூத்துக் கலைஞர் ஓய்வு பெற்ற கிராமசேவகர் வரவுகவிஞர் நாடகநெறியாளர் ஓகன்,தபேலா வாத்தியக்கலைஞர் இத்தகு திறமைகளை தன்னகத்தே கொண்ட அண்ணாவியார் மூத்த கலைஞர் சக்கரியாஸ் செபஸ்ரியான் டயஸ் அவர்களின் அகத்திலிருந்து......................

தங்களைப்பற்றி?

கடலும் கடல் சார்ந்த நெய்தல் இடம்தான் தாழ்வுபாடு எனது சொந்த இடமும் வாழ்ந்து வருகின்ற இடமும்தான் தாழ்வுபாடு மண் எனது தந்தையார் பிலிப்பு சக்கரியாஸ் டயஸ் மூத்த நாட்டுக்கூத்துக்கலைஞர் எனது தாய் ச.செபஸ்ரியம்மா டலிமா எனது மனைவி செ.தஸ்நேவிஸ் பல்டானோ பிள்ளைகளாக ஆண்கள் ஐவர் பெண்கள் இருவருமாக சந்தோஷமாக புனித தோமாஸ் வீதியில் தாழ்வுபாடு சொந்தமண்ணில் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றோம்.

தங்களது இளமைக்காலம் பற்றி?

எனது இளமைக்காலம் மிகவும் வறுமைதான் எனது கல்வி சாதாரண தரம் வரை புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை கல்வி கற்றுக்கொண்டேன் பாடசாலைக்காலத்திலும் நாடகங்களில் கலந்து கொண்டு பல பரிசுகளைப்பெற்றுள்ளேன் வாணொலி நிகழ்ச்சிகளிலும் கலந்துள்ளேன் வறுமை காரணமாக உயர்தரம் என்னால் கற்க முடியவில்லை அரசசேவை பயிற்சி மூலம் அரசசேவையில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன் 1989ல் இருந்து 2014 வரை கிராமசேவகராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.

தங்களின் கலைப்பிரவேஷம் பற்றி?

தாழ்வுபாடு மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய பொக்கிஷமன பறப்பாங்கண்டலைச்சேர்ந்த குப்பைப்புலவர் என்னும் புனை  பெயர்கொண்ட புலவரால் எழுதப்பட்ட “சூசையப்பர் வாசாப்பு”1918 ஆண்டு பழமையான ஓலைச்சுவடியானது தந்தைவழியாக கிடைக்கப்பெற்றதன் பயனாக வருடாவருடம் அரங்கேற்றி வந்தார் எனது தந்தையின் கதைவசனத்தில் நாடக நெறியாள்கையில் 1974ம் ஆண்டு “செணுகப்பம்மாள் நாடகம் மேடையேற்றப்பட்டது. அவர் பெரிதாக கல்வி கற்றிருக்கவில்லையாயினும் கலைநயம் மிக்கவர் அவரின் கலைநயம் கண்டு வியந்துள்ளேன் 12வயது இருக்கும் எனநினைக்கிறேன் முதன் முதலாக நான் சம்மணசாக பாத்திரமேற்று மேடையில் தோன்றினேன். 1994ம் ஆண்டு எனது தந்தை இவ்கலையுலகை விட்டுபிரிந்தார்.

தந்தையின் மறைவுக்குபின் தங்களின் கலைப்பயணம் பற்றி?

1994ம் ஆண்டு எனது தந்தை இவ்கலையுலகை விட்டுபிரிந்த பின்னர் 1994-2014இன்று வரை எமது மண்ணுக்கே உரிய “சூசையப்பர் வாசாப்பினை” மூன்று முறை 1988-2005-2014 ஆண்டுகளில் அரங்கேற்றியுள்ளேன் அத்தோடு சம்மணசாக -தாவீது மன்னனாக- சூசையப்பரின் பள்ளிப்பருவ சிறுவனாக- வாலிபனாக திருமணமான பின்பு “சூசையப்பர் வாசாப்பின்” பிரதான பாத்திரமான சூசையப்பராகவே தோண்றினேன். எமது மண்ணைச்சேர்ந்த கலாபூஷணம் பர்ணாந்து பீரீஸ் நாட்டுக்கூத்துக்கலைஞர் அவர்களின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட அனைத்து நாட்டுக்கூத்துக்களிலும் வரவுகவி அடற்தரு பாடல் பாடியுள்ளேன் பாடியும் வருகிறேன் “துரோணர்” நாட்டுக்கூத்திலும் பாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். அத்தோடு சிறுவயது முதல் எமது பங்கின் ஆலயப்பாடகராகவும் ஓர்கன்-தபேலா பயிற்சியளித்து வரும் வாத்தியக்கலைஞராகவும் ஏனைய ஆலயப்பங்குகளில் தோட்டவெளி-கரைசல்-செட்டிகுளம்-பூவரசங்குளம் கல்வாரிப்பாடல் இறைவனோடு சார்ந்த கலைப்பயணமாக தொடர்கிறது. நான் கஸ்ரப்பட்டோ கற்றுக்கொண்டதோ இல்லை கலை இறைவனால் இயற்கையாக அருளப்பட்டது என்பேன்.
1974ம் ஆண்டு எனது தந்தையால் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட செணுகப்பம்மாள் நாடகத்தினை 40 வருடத்திற்கு பின் எமது மக்களின் சிலர் வேண்டுகோள்விடுக்கின்றனர் மீண்டும் மேடையேற்ற வேண்டும் என்று கேட்கின்றனர் நான் 20 வயதில் பார்த்து ரசித்த நாடகத்தினை என்னால் நெறியாள்கை செய்ய முடியுமா… என்ற சந்தேகத்தில் மீண்டும் அந்த நாடகத்தினை முழுமையாக படித்தேன் 100இற்கு 98 வீதம் என்னால் மேடையேற்ற முடியும். என்ற நம்பிக்கை உள்ளது எமது மக்களின் ஒத்துழைப்பும் பொருளாதாரமும் கைகொடுத்தால் நிச்சயமாக “செணுகப்பம்மாள்” நவீனமாக வலம் வருவாள்


வரவுகவி பற்றி தங்களின் கருத்து?

வரவுகவியென்பது நாட்டுக்கூத்தின்போது அரங்கேற்றத்தில் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற அறிமுகமாகும். அப்பாத்திரத்தின் சிறப்புத்தன்மையுடன் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துதல் பின்புதான் பாத்திரங்களின் நடிப்பு தொடரும் சிறு வயது முதல் வரவுகவி பாடிவருகிறேன் கலாபூஷணம் பர்ணாந்து பீரீஸ் அவர்களினால் தொடர்ச்சியாக வரவுகவி பாடச்சிறந்தவனாகஅடையாளமிடப்பட்டேன். வரவுகவி பாடுவதாலும் நானே நெறியாள்கை செய்ய முற்பட்டதாலும் நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமலே போயின எனலாம்.


உங்களது அரசசேவைகள் பற்றி?

1987 ஆண்டு தொடக்கம் 1989வரை அரசேவைகள் உத்யோகத்தராக சேவையாற்றி பின் 1989 ஆண்டிலிருந்து 2014 கிராம அலுவலராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் பலவகையான சூழல்களை கடந்து வந்துள்ளோம். 22-02-2014ம் ஆண்டு இலங்கை ஐக்கிய கிராமசேவகர் சங்கம் எங்களது சேவையினை பாராட்டி கௌரவித்தது நினைவுச்சின்னமும் வழங்கியது பழைய நண்பர்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பழை நினைவுகள் கண்களில் இன்னும் இப்போது ஓய்வுக்கு பின் எனது மனச்சுமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்து வருகிறேன் நிம்மதியாக இருக்கிறேன். நான் இந்நிலைக்குவரக்காரணம் அன்றைய சூழலில் எனது சொந்தங்களும் பந்தங்களும் அயலவர்களும் கிண்டலும் கேலியும் நக்கலும் செய்தனர் இவர்கலெல்லாம் படித்து நல்;நிலைக்கு வருவார்களா…காரணம் அப்போது வறுமை பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான நிலையிலும் தந்தையின் தீரமான உழைப்பிலும் தாயின் சிந்தனையிலும் எனது விடாமுயற்சியாலும் கற்று அரசசேவையில் இணைந்தேன் அன்று என்னால் எட்டமுடியாத இலக்கினை இன்று எனது பிள்ளைகளால் எட்டியுள்ளேன் அவ்வாறே எனது மகன்களான இயேசுதயாளன் டயஸ் களுபோவில வைத்தியசாலையில் வைத்தியராகவும்-அடுத்தமகன் கொனரின் டயஸ் பல்வைத்தியராக பயிற்சி பெற்றுவருகிறர்.மிசன் லங்காவில் பிரசாந்தன்டயஸ் முகாமையாளராகவும் -ரெறன்டயஸ்யாழ்பல்கலையில் வியாபாரமுகாமைத்துவப்பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளளார். மகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளேன் மற்ற பிள்ளைகள் உயர்தரமும் 8ம் ஆண்டும் கல்வி கற்கின்றனர். இதுவரைக்கும் விதைக்கும் காலமாகவே உள்ளது இன்னும் அறுவடைக்காலம் வரவில்லை என்னைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள் வியக்கும் வண்ணம் இறைவன் என்னை வழிநடத்திச்செல்கின்றார்.

வீழ்ச்சி கண்டு வரும் நாட்டுக்கூத்து கலை நவநாகரீக உலகில் மிகவும் பின்னடைவை சந்தித்த வருகின்றது மூத்த கலைஞர் என்ற வகையில் தங்களால் ஆன முயற்சி பற்றி?

மிகவும் அருமையான கேள்வி இந்தப்பின்னடைவை வீழ்ச்சியை நிவர்த்தி செய்யும் பொருட்டு பழமையான நாட்டுக்கூத்துக் கலையை அதன் பாரம்பரியத்தை நிலைநாட்ட கலையம்சத் தன்மை கெடாமல் தற்காலத்திற்கு ஏற்றால் போல நவீனமயப்படுத்தி ராகங்கள்-தாளங்கள் உடையாமல் மக்கள் விரும்புகின்ற வகையில் பாத்திர அமைப்புக்களையும் ரசிக்கின்ற வகையில் காட்சியமைப்புக்களையும் டிஐpட்டல் சீனறிகளை புலோலி யாழ்ப்பாணத்தில் இருந்து வருவித்தும் சரியான பயிற்சியும் நேரமுகாமைத்துவம் மூலம் சினிமாத்திரைப்படம் ஓடுவது போல தொடர்சசியாக காட்சியமைப்பை உருவாக்கினோம். அரங்கேற்றினோம் நாட்டுக்கூத்து தொடங்கியது முதல் முடியும் வரை பார்வையாளர்கள் எழுந்து அலைந்து திரியவில்லை அவ்வளவிற்கு சுவராஸ்யமாக அமைத்தோம். முன்னைய காலங்களில் சொல்லத்தேவையில்லை… சினிமா மட்டுமல்ல நாட்டுக்கூத்துக்கலையும் ரசிக்க கூடிய கலைதான் என்பதை உணர்த்தினோம் முதல் இருமுறை என்னால் அரங்கேற்றப்பட்ட “சூசையப்பர் வாசாப்பினை” விட இம்முறை ஆரங்கேற்றப்பட்டது கலியுகத்தில் நாட்டுக்கூத்துக்கலையின் மகத்துவத்தை பறைசாற்றுவதாக அமைந்தது என்பேன்

தாழ்வுபாடு மண்ணின் சிறப்பாக விளங்குகின்ற கடற்தொழில் தற்போதுள்ள இளைஞர்கள் விரும்புவதில்லையே அது பற்றி தங்களின் கருத்து?

கடலும் கடல் சார்ந்த நெய்தல் இடமாகிய தாழ்வுபாடு மண்ணில் 90 வீதமானவர்கள் கடற்தொழிலில் தான் ஈடுபடுகிறார்கள் பரம்பரைத்தொழிலாகும் எங்களது இளமைக்கலத்திலேயே பெரியவர்கள் வீட்டில் ஒருவராவது அரசாங்க வேலை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தனர். அதனால் தான் நான் அரசாங்க வேலை செய்யகாரணமாய் அமைந்தது ஆனாலும் அந்தக்காலத்தில் யாரும் அரசாங்க வேலை செய்ய விரும்புவது இல்லை காரணம் சம்பளம் மிகக் குறைவும்  கடற்தொழில் கிடைக்கின்ற வருமானத்தினை விட பல மடங்கு குறைவானது அப்போதைய அரசாங்கச்கம்பளம் ஆனால் இப்போது கடற்தொழிலை எடுத்துக்கொண்டால் கடல் வளம் அழிந்துபோய்க்கொண்டிருக்கிறது. விசைப்படகுகள் ரோலர்கள் இரசாயனக்கழிவுகளாலும் அதேநேரத்தில் நவீன வளர்ச்சியில் புதுமைகளை விரும்பும் இளைஞர்கள் கடற்தொழிலை விரும்புவதில்லை பல கல்வி முறையும் கைநியைய உழைக்கும் வேலையும் பிற்காலத்தில் முதுமையில் ஓய்வூதியமும் இப்போது அரசாங்க வேலை என்றால் சமுதாயத்தில் நல்லதொரு மதிப்பும் உள்ளது அதனால் பழமையை விட்டு புதுமையை விரும்புகிறார்கள் தப்பல்ல ஆனால் பாரம்பரியம் பண்பாடு மாறாமல் இருந்தால் சரிதான்.

தங்கள் வாழ்வினில் மறக்க முடியாத சந்தோஷமான விடையம் பற்றி?

சந்தோஷமான தருணங்கள் குறைவுதான் நான் இதுவரை எம்மண்ணுக்கே உரிய வாசாப்புக்கலையான “சூசையப்பர் வாசாப்பினை” மூன்று முறை அரங்கேற்றியுள்ளேன் ஒவ்வொரு முறை அரங்கேற்றும் தொடங்கி முடியும் வரை கடவுளுக்கு மரியாதை செலுத்துவதுபோல எனது உறவுகளும் அயலவர்களும் எங்கு கண்டாலும் எந்த வேலையிலும் கௌரவம் மரியாதை செலுத்துவார்கள் மிகவும் சந்தோஷமாகவும் மனம் அமைதியாகவும் இருக்கும் அந்த நேரத்தில் எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை இம்முறையும் அரஙகேற்றம் முடிந்து கூட்டம் ஒன்றில் என்னையும் எங்கள் நாட்டுக்கூத்துக்கலைஞர்களையும் மரியாதை செய்து கௌரவித்தார்கள் ஆன்மீகமாக அன்றைய தினம் இருக்கும். அன்றோடு சரி அதன் பின்பு பழைய நிலமைதான் என்னை மதிக்கும் போது என்னால் காண்பிக்கப்படுகின்ற கலையும் மதிக்கப்படுகின்றது போற்றப்படுகின்றது. பின்பு எனக்கென்ன நிலையோ அதே நிலைதான் என் கலைக்கும் சந்தர்பத்திற்கு ஏற்றால் போல் மனிதர்கள் மாறிக்கொள்கின்றனர் சமுதாயமம் அப்படியே…



தங்களின் வாழ்வில் மறக்கமுடியாத துன்பமான விடையம் பற்றி?

 எனது குடும்பவாழ்வில் துன்பமானவிடையம் ஏதும்பெரிதாக நிகழ வில்லை ஆனால் என்னால் மூன்று முறைமேடையேற்றப்பட்டுள்ள “சூசையப்பர் வாசாப்பினை” எனது தந்தைக்கு முன்னால் அரங்கேற்றி அதில் எனது நடிப்பினை எனது தந்தை பார்த்து பாராட்ட முடியவில்லையே…! எனது தந்தை 1994 இறந்து விட்டார்…! இக்கவலை என் நெஞ்சை விட்டு நீங்காது எனது பெரியப்பா இயலாமல் “ஈசிச்செயாரில்” சாய்வுநாற்காலியில் இருக்கும் போது அவரை எனது தந்தை அந்த நிலையிலும் தான் மேடையேற்றும் போது அவரின் முன்னால் வைத்துதான் “சூசையப்பர் வாசாப்பினை” அரங்கேற்றினார் அந்தப் பாக்கியம் எனக்கு கிடைக்க வில்லையே…

பழமையான ஓலைச்சுவடியை 1918ம் ஆண்டு தங்களுக்கு பின் அதன் பாதுகாப்பும் படிப்பு முறையும் பற்றி?

1918ஆண்டு பழமையான ஓலைச்சுவடியில் உள்ள எழுத்துக்கள் குற்றில்லாதவையும் பழமையான எழுத்தும் அதனால் என்னைத் தவிர அந்தச் சுவடியை யாராலும் வாசித்து விளங்கிக்கொள்ள முடியாது எனக்கு மிகவும் வேதனையான விடையம் என்ன வென்றால் எனது பிள்ளைகளுக்கு கூட இதில் பெரிதாக ஆர்வம் இல்லை அவர்கள் படிப்பு படிப்பு என்று வேறு கலைகளில் நாட்டம் கொண்டுள்ளனர் எனது மருமகன் வாசிக்கும் தன்மை பெற்றிருந்தான் அவனும் தற்போது பிரான்சில் உள்ளான்

தந்தைக்குபின்---நான்---எனக்குபின்----?எண்ணம்தான் மனதில் தோன்றியது இதைக்குடும்பச்சொத்தாக்கிக்கொள்ளாமல் ஊர்ச்சொத்தாக்கி எல்லோரும் அறியவும் பழகவும் வண்ணம் எங்கள் சூசையப்பர் கோவிலில் வைத்தேன். மழைகாரணமாக இரண்டு ஓலைச்சுவடிகளில் 2ம் இரவு நிகழ்வு ஒன்று நனைந்து முற்று முழுதாக சேதமடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. கடவுள் சித்தத்தால் ஏற்கனவே இரண்டு ஓலைச்சுவடிகளையும் நூலுருவாக்கி வைத்ததால் பெரும் துன்பத்தில் இருந்து மீண்டதுபோலவே உணர்கிறேன்.

தற்கால இளைஞர் யுவதிகளுக்கு தங்களின் அனுபவத்திலிருந்து?

இளைஞர்கள் யுவதிகளைப்பொறுத்தமட்டில் இன்றைய நவீன சினிமா மோகம் கலாச்சாரம் அதற்குள்ளே தான் அவர்கள் மூழ்கியுள்ளார்கள். சமயசம்மந்தப்பட்ட காரியங்களுக்கும் கலந்து கொள்வதில்லை அதைமாற்ற முடியாது உள்ளது கலியுகத்தில் சினிமா-கிறிக்கட்-இணையம் என இளைஞர் உலகம் விரிந்துள்ளது இதனால் கட்டுப்பாடற்ற தன்மை மடடுமரியாதை தெரியாத நிலை ஏனோதானே என்றுதான் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகவே வாழ்கின்றார்கள் பழமையான தாழ்வுபாட்டிற்கே உரிய பாரம்பரியமான கலைக்காக 1918ம் ஆண்டு பழமையான “சூசையப்பர் வாசாப்பினை” எனது தந்தை மேடையேற்றி வந்துள்ளார். அவர் 1994ல் இறந்த போது அன்றைய இளைஞர்கள் எனது தந்தையின் பிரேத நல்லடக்கத்திற்கு சேமக்காலைவரை போகும் வழியில். வீதியெங்கும் “வெள்ளைத்துணி” விரித்து பவனயாக எடுத்து சென்றுதான் அடக்கம் செய்தார்கள் அன்று. தந்தையின் பணியினையே நானும் செய்து வருகிறேன் எனது இறப்பின் போது எனது தந்தைக்கு செய்தது போல செய்யுமா… இந்த இளையதலைமுறை….? இப்போது எதை எடுத்துக்கொண்டாலும் நேரமில்லை நேரமில்லை என்று எல்லாவிதமான சடங்கு சம்பிரதாயங்களை தூக்கியெறிந்து விட்டு கடமைக்காகவே எல்லாம் நடக்கின்ற போது அன்பு-பாசம்-உறவு நட்பு….கேள்விக்குறியாகின்றது.

அருகிவருகின்ற நாட்டுக்கூத்துக்கலையினை காப்பாற்றும் பொருட்டு வழர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மன்னார் மறைமாவட்டம் என்ற வகையில் ஆலயப்பங்குகளின் பங்குத்தந்தையர்கள் மூலமாக தவக்காலத்திலும் ஒளிவிழாக்காலத்திலும் பயிற்சிவித்து அரங்கேற்றலாமே?

வழமையாக தவக்காலத்தில் இயேசுவின் பாடுகள் பாதையிலே பங்குத்தந்தையரின் நெறியாள்கையில் கலாபூஷணம் குழந்தை மாஸ்ரரின் தம்பி மாசிலாமணி கலாபூஷணம் பர்ணாந்து பீரிஸ் அவர்களுடன் நானும் ஒளி ஒலி  அமைப்புக்களுடன் எனது மூத்த மகன்தான் இயேசுநாதருக்கு நடித்தார்கள் மன்னார் மறைக்கோட்டத்திலும் மேடையேற்றினோம். எங்களால் செய்ய முடியுமா என்ற கேள்வியையும் தாண்டி தனியாக தாழ்வுபாடு கலைஞர்களாலேயே சிறப்பாகசெய்துள்ளோம் கதையும் கூத்துமாக விவிலியத்தில் இருந்து அரை மணித்தியாலக்கதைகள் தயாரிக்கப்பட்டு நாடகங்களை அரங்கேற்றியுள்ளோம். நீங்கள் சொன்னது போல நாட்டுக்கூத்துப்பயிற்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது. ஆனால் குறுகிய காலப்பயிற்சியோடு சிறிய நாடகங்களை அரங்கேற்றலாம் அது சாத்தியப்படும் அடிக்கடி இப்படியான அரங்கேற்றங்கள் செய்ய வேண்டும்.

மன்னார் மண்ணில் கலைஞர்களுக்கான அங்கீகாரம் எவ்வாறு உள்ளது?

மன்னார் மண்ணில் கலைஞர்களுக்கான அங்கீகாரம் உள்ளது அந்தந்த நேரத்தில் மட்டுமே சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பவே மற்றப்படி கண்டுகொள்வதேயில்லை…
மன்னார் கலாச்சார பேரவையால் இலக்கிய விழாவில் கௌரவிப்பும் நினைவுச்சின்னமும்-2014
இலங்கை ஐக்கிய கிராமசேவையாளர் சங்கம் கௌரவிப்பும் நினைவுச்சின்னமும் -22-02-2015
உயர்தமிழ் கலாமன்றத்தின் அங்கத்தவராக உள்ளேன்.
சூசையப்பர் வாசாப்பினை அரங்கேற்றும் ஒவ்வோரு முறையும் பங்குத்தந்தை பங்கு மக்களால் பொன்னாடை போர்த்தி மரியாதையும் கொளரவிப்பும் செய்வார்கள்.
தாழ்வுபாடு மண்ணின் முதலாவது மருத்துவர் எனது மகன் இயேசுதயாளன் டயஸ் களுபோவில வைத்தியசாலையில் வைத்தியராக உள்ளார் அவரை இதுவரை எனது மக்களும் மண்ணும் கௌரவிக்கவில்லை எனக்கு மிகவும் மனவேதனையே 2014ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தேர்வான மாணவர்களை கௌரவித்தார்கள் சந்தோஷமான விடயம் ஆனால் அதிலும் தாழ்வுபாட்டின் முதலாவது மருத்துவனான எனது மகனை கொளரவிக்க வில்லை மனம் மரத்துப்போய் விட்டது.

மன்னார் மக்கள் கலைஞர்கள் அவர்களை வெளியுலகிற்கு கொண்டுவரத்துடித்துக்கொண்டிருக்கும் நீயு மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?

மன்னார் கலைஞர்களை முன்னுக்கு கொண்டு வருவதன் மூலம் தானே என்னைப்போன்ற கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதும் எம் மண்ணின் கலைப்பாரம்பரியத்தினை 1918ம் ஆண்டுப்பழமையான சூசையப்பர் வாசாப்பு ஓலைச்சுவடி பற்றிய தகவலும் தங்களின் இணையத்தின் மூலமாக வெளியுலகிற்கு தெரியவருகின்றது அதுவும் வீடுதேடி வந்து எம்மோடு கலந்துரையாடி வெளிச்சம் போட்டுக்காட்டுவது மிகவும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியது இதுதான் எனது வாழ்வின் முதலாவது நேர்காணல் என்று சொல்லிக் கொள்வதிலும் அதை மன்னார் மக்கள் இணையமாகிய மன்னார் இணையம்தான் என்பதையிட்டுமிக்க மகிழ்ச்சியடைகிறேன். இணையநிர்வாகி  அவர்களுக்கும் என்னை செவ்வி கண்ட உங்களுக்கும் உங்களது சேவை தொடரவும் ஆக்கமும் ஊக்கமும் அடுத்த தலைமுறைக்கும் தொடரவேண்டும் எடுத்துச்செல்ல வேண்டும் அதற்கான ஆற்றலையும் வலிமையினையும் எல்லாம் வல்ல இறைவன் தரவேண்டும் என வேண்டி நிற்கிறேன் நன்றியுணர்வுடன்…

மன்னார் இணையத்திற்காக

வை.கஜே ந்திரன்...



















ஓய்வு பெற்ற கிராமசேவகர் ,அண்ணாவியார் மூத்த கலைஞர் சக்கரியாஸ் செபஸ்ரியான் டயஸ் அவர்களின் அகத்திலிருந்து.......... Reviewed by NEWMANNAR on March 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.