19 ஆவது திருத்தத்திற்கு சு.க. ஆதரவு வழங்காது
அரசியல் அமைப்பு விதி முறைக்கு முரணான வகையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற முயற்சிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தினை
வன்மையாக கண்டிக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு 19ஆவது திருத்தத்திற்கு கிடைக்காது என எதிர்க்கட்சி தலை வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் 10 ம் திகதி பாராளுமன்றத்தில் 19 வது திருத்தம் விவாதத்திற்கு உப்படுத்தக்கூடாது. கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் அத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
19 வது திருத்த சட்டத்தினை ஆதரிப்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடையே முரண்பாடுகள் இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதிலும் சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நடை முறைப்படுத்துவதில் நாம் முழுமையாக ஆதரவினை வழங்குவதற்கு தயார்.
ஆயினும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 19 வது திருத்தச்சட்டம் அரசியல் அமைப்பின் வெளிப்பாடுகளுக்கு முரணானது. 19வது திருத்தச்சட்டம் ஜனாதிபதி முறைமையினை நீக்குவது மட்டும் அல்லாது சுயாதீன ஆணைக்குழுவினை செயற்படுத்துவதும் தேர்தல் முறைமையில் மாற்றத்தினை கொண்டு வருவதுமேயாகும்.
ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வருவோம் எனக் கூறிக்கொண்டு ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதை பிரதமரின் அதிகாரமாக மாற்றவே முயற்சிக்கின்றனர்.
19 வது திருத்தச்சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும். இம் முறைமை வர்த்தமாணி அறிவித்தலன்றி ஒரு சிலரின் சுயநல செயற்பாடாக அமைந்துள்ளது. இதை ஒரு போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே எதிர்வரும் 9 ஆம், 10ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் 19 வது திருத்தம் தொடர்பிலான விவாதம் இடம் பெறக்கூடாது.
மாறாக மீண்டும் அரசியல் அமைப்பிற்கு அமைய வர்த்தமானி அறிவித்தல் முறைமையாக மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு விடப்பட வேண்டும்.
எனவே முறையான செயற்பாடுகளை கையாளும் வரையில் எமது ஆதரவு கிடைக்கப்போவதில்லை.
அதேபோல் 19 வது திருத்ததத்தை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தாது தேர்தல் முறைமையில் மாற்றத்தினை கொண்டு வந்து இரண்டு திருத்தங்களையும் ஒன்றாக செயற்படுத்துவதாயின் நாம் இணக்கம் தெரிவிக்க முடியும்.
இது ஒரு வழிமுறை மட்டுமே. ஆயினும் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே இப்போது முக்கிய கோரிக்கையாக உள்ளது எனக்குறிப்பிட்டார்.
19 ஆவது திருத்தத்திற்கு சு.க. ஆதரவு வழங்காது
Reviewed by Author
on
April 07, 2015
Rating:
Reviewed by Author
on
April 07, 2015
Rating:


No comments:
Post a Comment