சுடும்போது கண்களை திறந்திருந்த மயூரன்….! நெஞ்சு பதறும் நிமிடங்கள்.-Photos
என் மகனை காப்பாற்றி தாருங்கள்… மகனின் எதிர்காலத்திற்காக தந்தை கொடுத்த தகவல் உயிரை பறித்த துயரம்
ஒரு கொலையை இயல்பான மனிதர்கள் யாராலும் செய்ய முடியாது. அது மிக கொடூரமானது. எந்த செயலாலும் ஒரு கொலையை நியாயப்படுத்த முடியாது. இதனால்த்தான், கொலைக்குற்றவாளிகளிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
நாகரீகத்தினதும், சட்டத்தினதும் பரிணாம வளரச்சியின் ஒரு கட்டத்தில் மரணதண்டனையும் ஒரு த்டனையாக இருந்தது. ஆனால், இன்று அது பெரும்பாலும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தோனேசியாவிலும் அதுதான் நடந்திருக்கிறது. ஒன்றல்ல.. எட்டு உயிர்களை குருவி சுடுவதைப் போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
தனக்காக நிர்ணயிக்கப்பட்ட மரணத் திகதியை அறிந்துகொண்டு, தனக்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியை பார்த்துக்கொண்டு, தான் கொலை செய்யப்படும் முறையை அறிந்துகொண்டு பல வருடங்களாக கொடூர வாழ்வை வாழ்ந்து, இலங்கை நேரம் நேற்று நள்ளிரவுக்கு அண்மையாக அவர்களின் வாழ்வு முடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான மயூரன் சுகுமாரன் (வயது 34) மற்றுமொரு அவுஸ்திரேலியரான என்ரு சான் (வயது 31) உள்ளிட்ட எட்டுப்பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவை இரு நாடுகளும் மிகத் தீவிரமாக தேடி வந்தன. மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்ட கடத்தலை கண்டுபிடிப்பதில் இருநாடுகளும் பாரிய சவாலை எதிர்நோக்கியிருந்தன.
இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு என்ரு சானின் தந்தையால் ஒரு தகவல் வழங்கப்பட்டது.
“எனது மகன் இந்தோனேசியாவுக்கு பயணமாகியுள்ளான். அவனுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அறிகிறேன். அந்தக் கடத்தல்காரர்களிடமிருந்து என் மகனை காப்பாற்றித்தாருங்கள்” என்று அந்தத் தந்தை கூறியிருக்கிறார்.
அதனை துரும்பாகக் கொண்டு இருநாட்டுப் பொலிஸாரும் இணைந்து என்ரு சானை மறைமுகமாக கண்காணிக்கத் தொடங்கினர். அவருடன் தொடர்புடையவர்களையும் பின்தொடர்ந்தனர்.
இந்நேரத்தில் இந்தோனேசியாவின் தெற்கில் அமைந்துள்ள குட்டா மாவட்டத்திலுள்ள விடுதியில் தங்கியிருந்த மூவர் அந்நாட்டுப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் மயூரன் சுகுமாரன்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 334 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குத் தலைவராக இருந்தார் என்று நம்பப்படுகின்ற என்ரு சான் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தலில் வலைபின்னல் போன்று செயற்பட்ட 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். என்ரு சான், மயூரன் சுகுமாரன், சி யி சென், மிச்செல் சுகாய், ரெனே லோரன்ஸ், டன் டுக் குயென், மெதிவ் நோர்மன், ஸ்கொட் ருஷ், மார்டின் ஸ்டெபன்ஸ் ஆகிய ஒன்பது பேரும் Bali Nine (பாலி ஒன்பது) என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.
இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த 8.3 கிலோகிராம் போதைப்பொருள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 3.1 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிபடத் தெரிவித்தபோதும் இவ்விடயத்தில் தனக்கு தொடர்பு எதுவும் இல்லை என மயூரன் சுகுமாரன் இறுதிவரை தெரிவித்து வந்தார்.
2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தோனேசியாவின் டென்பசார் மாவட்ட நீதிமன்றம் மயூரனுக்கு மரண தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்தபோதும் இந்தோனேசிய உயர் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு ஜுலை 6 ஆம் திகதி மரண தண்டனையை உறுதி செய்தது.
பாலி ஒன்பதில் சிலருக்கு ஆயுட்கால சிறை, சிலருக்கு வழக்கு தொடரும் நிலை இருந்தாலும் கூட கடத்தலில் பிரதான பங்கு வகித்த குற்றச்சாட்டுக்காக மயூரனுக்கும் சானுக்கும் மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.Martin-Stephens
இதனையடுத்து ஜனாதிபதிக்கு மனு அளிக்கப்பட்டு பல்வேறு மனித உரிமை நிறுவனங்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தன. எனினும் அவை எதுவும் சாத்தியப்படவில்லை.
முன்னுதாரணமாக திகழ்ந்த மயூரன் நுசாகம்பங்கனிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மயூரன் சுகுமாரன் சிறைக் கைதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். அடிப்படையில் தற்காப்புக் கலை நிபுணராக இருந்தாலும் கூட சிறந்த சித்திரக் கலைஞர்.
சிறைச்சாலையில் ஏனைய கைதிகளுக்கு ஆங்கிலம், கணனிக் கல்வி, போட்டோஷொப் வடிவமைப்பு ஆகியவற்றை பயிற்றுவித்ததுடன் சித்திரம் வரைதலில் நுட்பங்களையும் கற்றுக்கொடுத்தார்.
இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கர்ட்டின் பல்கலைக்கழகம் மயூரனுக்கு வரைகலை பட்டத்தை வழங்கியது. அனைத்து கைதிகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்ததால் சிறைச்சாலையில் 20 கைதிகளை வழிநடத்தும் தலைமைப்பொறுப்பு மயூரனுக்குக் கிடைத்தது.
என்ரு நிறைய மனமாற்றமடைந்து மதபோதகராக விரும்பினார். அவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியிருந்தார். கணினியில் அசாதாரண அறிவுடனிருந்தவர், சிறைச்சாலை கைதிகளிற்கும் அதனை கற்றுக் கொடுத்தார்.maithripala-sirisena 01
அதன்படி மயூரன், என்ருவின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுடன் பொழுதை கழிப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
மயூரன் நிறைய சித்திரங்களை வரைய வேண்டும் என இறுதியாக ஆசைப்பட்டார். அதன்படி தன்னுடைய படங்களை வரைந்து இதயத்தில் குண்டுத் துளைப்பது போலவும் கவலையை வெளிக்காட்டுவது போலவும் பல சித்திரங்களை வரைந்தார்.
மயூரனின் பெற்றோர் சகோதரன், அவரது மனைவி, சகோதரி மற்றும் உறவினர்கள் சிலருடன் திறந்த வெளியில் சில மணிநேரம் கழிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
என்ரு சான் தனது குடும்பத்தாருடன் தேவாலயத்தில் பொழுதை கழிக்க வேண்டும் என விரும்பினார். அத்தோடு தனது நீண்டநாள் காதலியான பெபியன்டி ஹெவிலாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
அவ்வாறே சிறையில் எளிய முறையில் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் நடந்தேறியது. சிறையில் சில மணிநேரம் இருவரும் கதைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன் அதனையடுத்து உடனடியாக பெபியன்டி ஹெவிலா வெளியேற்றப்பட்டார்.
இவ்விருவருக்கும் இருதயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
மரண தண்டனை நடைமுறை இவ்வாறுதான் அமைவது வழக்கம். நுசாகம்பங்கன் சிறையிலுள்ள மரண தண்டனை வழங்கப்படும் வளாகத்துக்கு கைதிகள் அழைத்துச் செல்லப்படுவர். அவர்கள் நிற்க விரும்புகிறார்களா, அல்லது உட்கார்ந்திருக்க விரும்புகிறார்களா என விசாரிக்கப்படும். அதன் பின்னர் வெள்ளை உடை அணிவிக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்படும்.
அவர்கள் தியானம் செய்வதற்காக சரியாக மூன்று நிமிடங்கள் வழங்கப்படும். கைதிகள் சுடப்படும்போது கண்கள் மூடியிருக்க வேண்டுமா அல்லது திறந்திருக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
“என்னைச் சுடும்போது கண்களை திறந்திருப்பதையே விரும்புகிறேன். நான் தைரியசாலியாக இவ்வுலகை விட்டுப் பிரியவே ஆசைப்படுகிறேன்” என மயூரனின் நெருங்கிய நண்பரும் சித்திர ஆசிரியருமான பென் குவால்டியிடம் மயூரன் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
கைதிகள் ஆயத்தமானவுடன் 10 மீற்றர் தூரத்தில் ஆயுதம் தாங்கிய பன்னிருவர் ஆயத்தமாக இருப்பர். மரண தண்டனைக்கான உத்தரவை பிறப்பிக்க சிறை அதிகாரியொருவரும் மரணத்தை உறுதிப்படுத்த மருத்துவர் ஒருவரும் அங்கு வருகை தந்திருப்பர்.
தண்டனை நிறைவேற்றப்பட்டவுடன் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த தண்டனையும் இதன்படியே நடந்திருக்கும் என தெரிகிறது.
பாலி ஒன்பது விவகாரத்தில் தண்டனை பெற்ற மயூரனுக்கும் என்ருவுக்கும் சவப்பெட்டிகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டன. அதில் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு 29.04.15 என திகதியிடப்பட்டு ஆத்மா சாந்தியடைவதாக என எழுதப்பட்டுள்ளது.
மயூரனினதும் என்ருவினதும் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்னால் கதறி அழுதனர். அவர் வரைந்த ஓவியங்களை சுமந்த வண்ணம் தாய்,தந்தை, சகோதரர்கள் அழுத விதம் நெஞ்சை உருக்கியது. சிறைச்சாலைக்கு வெளியே பதாகைகளை ஏந்தியவண்ணமும் மெழுகுவர்த்திகளை ஏந்தியவண்ணமும் பலர் திரண்டிருந்தனர். எனினும் இவை எவையும் இந்தோனேசிய சட்டங்களை வளைக்க போதுமானவையாக இருக்கவில்லை.
மரணம் அனைவருக்கும் பொதுவானது. எனினும் அது தண்டனையாக கிடைக்கப்பெறும்போது ஏற்படும் மன அழுத்தமும் விரக்தியும் கொடுமையானதாகும்.
அவர்கள் பொதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள்தான். அவர்களின் செயலால் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், இதில் குற்றம்சாட்டப்பட்ட மயூரன் மற்றும் என்ரூ ஆகியோர் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக சிறையதிகாரியே சான்றிதழ் வழங்கியிருந்தார்.
உண்மையில் அவர்கள் முன்னுதாரணம்மிக்கவர்களாக மாறியிருந்தார்கள்.
இந்த தண்டனையின் மூலம், அவர்களின் திருந்திவாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
சுடும்போது கண்களை திறந்திருந்த மயூரன்….! நெஞ்சு பதறும் நிமிடங்கள்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 29, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment