கிழக்கு பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு அதிபர்களின் முகாமைத்துவமே காரணம்: சீ.தண்டாயுதபாணி
உயர்ந்த மட்டத்தில் பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளாக நகர்ப்புறங்களை அண்டிய பாடசாலைகளே அதிகளவான பெறுபேறுகளை பெற்றிருக்கின்றன, அங்குதான் அனைத்து வளங்களும் நிறைந்து காணப்படுகின்றன என கிழக்கு மாகாண கல்வி, போக்குவரத்து அமைச்சர் சீ.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கல்முனை சம்மாந்துறை மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து வளங்களும் ஒரு பாடசாலைக்கு இருக்கும்போது இந்தப் பாடசாலையின் பெறுபேறுகள் அதிஉச்ச நிலையை அடையும். இங்குதான் பெறுபேறுகளுக்கும் வளங்களுக்குமிடையே தொடர்பு இருப்பதனை காணமுடியும்.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம், சிங்களப்பாடசாலைகள் என 17 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக 1100 பாடசாலைகள் உள்ளன.
அதிகமான பாடசாலைகள் பின்தங்கிய பிரதேசங்களிலே காணப்படுகின்றன எனவும், சகல பாடசாலைகளையும் எடுத்து நோக்கினால் அனைத்து வளங்களும் இல்லாமல் இருந்தாலும் கல்வியின் பெறுபேறுகள் உச்சநிலையை காட்டும் இதற்கான காரணம் அந்தப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களினது அயராத முயற்சியே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாடசாலையின் அதிபரின் சிறந்த முகாமைத்துவமே இதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை அதிபர் திருமதி ரஜனி சிறியானந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்வி, போக்குவரத்து அமைச்சர் சீ.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் நஜீம், பிரதிக்கல்வி, கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலய தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு அதிபர்களின் முகாமைத்துவமே காரணம்: சீ.தண்டாயுதபாணி
Reviewed by NEWMANNAR
on
April 14, 2015
Rating:
No comments:
Post a Comment