
சம்பூரை விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டாலும் ஏலவே நிலுவையிலுள்ள வழக்குடன் தடை உத்தரவு வழக்கையும் இணைத்து தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சம்பூரை விடுவிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு சம்மந்தமாக விளக்கம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
2012 ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முதலீட்டு சபைக்கு சம்பூரில் உள்ள 818 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய மேற்படி முதலீட்டு சபை கெற்வே இன்டஸ்றீஸ் என்னும் தனியார் நிறுவனத்துக்கு பாரிய கைத்தொழில் பேட்டை அமைப்பதற்காக ஒரு குறித்த 818 ஏக்கர் நிலத்தையும் கையளித்திருந்தது. இது மக்கள் குடியிருந்த நிலம் மீண்டும் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டுமென சம்பூர் குடி மக்களால் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கமும் அமைச்சரவையும் எடுத்த முடிவுக்கு அமைய மீண்டும் முதலீட்டு சபைக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தை மக்களுக்கு கையளிப்பது என்ற முடிவுக்கு அமைய கடந்த மே மாதம் 8 ஆம் திகதி முதலீட்டு சபைக்கு கையளித்த ஆவணத்தையும் முதலீட்டு சபையால் கெற்வே தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இரத்து செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக்கோரி கெற்வே நிறுவனத்தினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே மேற்படி இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஏலவே 2006 ஆம் ஆண்டு சம்பூர் மக்கள் வெளியேற்றப்பட்ட போது தங்களை மீளக்குடியேற்றும் படி சம்பூர் மக்கள் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்கள். அவ்வேளையில் இலங்கையரசாங்கம் ஒரு உறுதிமொழி அளித்திருந்தது. சம்பூர் மக்கள் மீளக் குடியேற்றப்படுவார்கள் என்று. ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2012 ஆம் ஆண்டு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பாராளுமன்றில் ஒரு வாக்குறுதியை அளித்தார். சம்பூர் மக்கள் மீளக் குடியேற்றப்படுவார்கள் என்று. அதையும் மீறியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வர்த்தமானி பிரகடனத்தின் மூலம் 818 ஏக்கர் நிலம் முதலீட்டு சபைக்கும் 217 ஏக்கர் நிலம் கடற்படை உயர்பாதுகாப்பு வலயத்துக்கும் கையளிக்கப்பட்டிருந்தது.
இதை ஆட்சேபித்து 2012 ஆம் ஆண்டு சம்பூர் மக்கள் உச்ச நீதிமன்றில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கையும் தடை உத்தரவு வழக்கையும் இணைத்து இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.
கெற்வே எனும் தனியார் நிறுவனம் 4 பில்லியன் டொலரில் கனரக கைத்தொழில்களான சீனித் தொழிற்சாலை, உர உற்பத்தி, தொழிற்சாலை மின்சார உற்பத்தி, ஆழ துறை அமைத்தல் மற்றும் வாகன பொருத்துதல் தொழிற்சாலை அமைப்பதற்கான பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் கூறியபோதும். இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் இரத்து செய்தபின் பாரிய கைத்தொழில் பேட்டை அமைவது நன்மையென கூறியிருப்பது எந்தவகையில் பொருத்தமுடையது எனத் தெரியவில்லை.
அதுவுமின்றி முன்னாள் ஜனாதிபதியினால் சுவீகரிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையே ஜனாதிபதி மைத்திரிபால இரத்து செய்துள்ளார். இது விடயம் குறித்து நீதிமன்றில் ஞாயத்தைப் பெறமுடியும் என்றார்.
No comments:
Post a Comment