தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்து பயணித்தால் மட்டுமே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும் : கிரியெல்ல
தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்து பயணித்தால் மட்டுமே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும். இனவாத அரசாங்கம் ஒருபோதும் வெற்றியளிக்காது. அதை நாம் தெளிவாக விளங்கியுள்ளோம். என அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
சர்வதேசம் இன்று இலங்கையை நட்பு நாடாக கருதவும் இதுவே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இத்தனை காலமும் ஆட்சி செய்த இனவாத அரசாங்கம் மாற்றப்பட்டு இப்போது ஜனநாயக அரசாங்கம் அமையப்பெற்றுள்ளது. சிங்கள மக்களின் உரிமைகளை பாதுகாப்பதைப் போல் தமிழ்இ முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
நாட்டில் 31 சதவீதமான சிறுபான்மை மக்கள் வாழ்கின்றனர். அவர்களை பாதுகாத்தால் மட்டுமே ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும். அதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஜனநாய ஆட்சியை விரும்பும் கட்சி என்ற வகையில் நாம் மூவின மக்களின் ஒன்றுபட்ட அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றோம்.
அதற்காகவே எமது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அதேபோல் கிழக்கிலும் முஸ்லிம் மக்களுக்கான இடங்களை அவர்களிடம் கையளித்துளோம்.
மேலும் பெருந்தோட்டத் துறையிலும் அதிகளவில் சிறுபான்மை மக்களே ஈடுபடுகின்றனர். இத்தனை காலமும் முன்னைய அரசாங்கம் பெருந்தோட்டத் துறையில் அதிக அக்கறை காட்டவில்லை. முன்னைய அரசாங்கத்தினால் தமது காலத்தில் மொத்தமாக 8.1 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு மட்டுமே செய்துகொடுக்கப்பட்டது. ஆனால் நாம் கடந்த மூன்று மாத காலத்தில் 600 மில்லியன் ரூபாய் நிதியை நிவாரணமாக ஒதுக்கியுள்ளோம். தேயிலை தோட்டத் தொழிலாளர் மற்றும் இறப்பர் தொழிலாளர்களுக்கான நிவாரண ஒதுக்கீட்டில் இதுவே கூடிய தொகை.
அதேபோல் இன்று சர்வதேசம் இலங்கையுடன் நல்ல உறவினை பேணுகின்றது. அதற்கு எமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணம். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்து தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் உரிமைகளை நாம் கட்டிக் காத்துள்ளோம். மஹிந்த அரசாங்கத்தில் செய்த அனைத்து தவறுகளும் இன்று எமது அரசாங்கத்தினால் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் சுயாதீன சேவைகள் நிலைநாட்டப்பட்டமை என்பன ஜனநாயகத்திற்கான நல்லதொரு ஆரம்பம். அதை நாம் வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
இவையே சர்வதேசம் எம்மை நட்பு நாடாக்கிகொள்ள முயற்சிப்பதற்கான காரணம். அதேபோல் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயமும் அரசியலுக்கு அப்பாலான பொருளாதார நடவடிக்கைகளையும் பலப்படுத்தி உள்ளது. இத்தனை காலமும் இலங்கைக்கு சர்வதேசம் கடன் உதவிகள் மட்டுமே வழங்கியது. ஆனால் இப்போது சர்வதேசம் நிவாரண உதவிகளையே வழங்குகின்றது. இலங்கையை கடன்பட்ட நாடு என்ற பட்டியலில் இருந்து மாற்றியமைத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கூட்டு முயற்சியே இதற்குக் காரணம்.
எனவே பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அமையும். அதிலும் சிறு பான்மை மக்களை ஒன்றிணைத்து தேசிய பாதுகாப்பையும் ஒற்றுமையையும் பலப்ப டுத்தும் ஆட்சியை நாம் முன்னெடுத்துச் செல்வோம் எனக் குறிப்பிட்டார்.
தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்து பயணித்தால் மட்டுமே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும் : கிரியெல்ல
Reviewed by Author
on
May 07, 2015
Rating:
Reviewed by Author
on
May 07, 2015
Rating:


No comments:
Post a Comment