பாரம்பரிய இனமாகிய நாம் இன்னொரு இனத்திடம் தங்கி வாழ்கின்றோம்: அரியநேத்திரன்
தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த நாட்டின் பாரம்பரிய இனம் என்பதற்கு அப்பால் சிறுபான்மை இனமாக இன்னொருவரிடம் தங்கி வாழ்ந்து வருகின்றோம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குருமன்வெளி றொபின் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலாச்சார விழா கழகத் தலைவரும், பிரதேச செயலாளருமாகிய க. லவநாதன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இவ்விளையாட்டு நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது கலாச்சாரத்தினை பாதுகாப்பதற்காகவும் அதற்கு மதிப்பளிப்பதற்காகவும் இவ்வாறான கலாச்சார விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை போற்றுதற்குரியது.
தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த நாட்டின் பாரம்பரிய இனம் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது எனவே இதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்காக நாம் செயற்படவேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரம்பரிய இனம் என்பதற்கு அப்பால் சிறுபான்மை இனம் என்ற ரீதியில் மற்றைய இனத்திடம் தங்கி வாழும் நிலையில்தான் இருக்கின்றோம்.
இந் நிலைமை மாற்றப்படுகின்ற போது அல்லது மாறுகின்ற போதுதான் இந்த நாட்டில் நாங்கள் பாராம்பரிய இனம் என்பதனை உணரக் கூடியதாக இருக்கும்.
நாட்டில் இவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் களத்தில் போராடிக்கொண்டு இருக்கின்றது. இதற்கான அங்கீகாரத்தையும் வடக்கு கிழக்கு மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
தமிழருக்கென இந்த உலகத்தில் தனிநாடு இல்லாவிட்டாலும், எமது ஈழத்தமிழர் உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் இன்று எமது இனத்தின் பக்கம் சர்வதேசத்தின் கவனத்தை திருப்பியுள்ளனர்.
எனவே இவ்வாறானதோர் நிலையில் அரசியலை ஜனநாயக ரீதியாக கொண்டு நடாத்துவதற்கும் எமது இனத்தின் தீர்வினை நோக்கிய பயணத்தினை நாங்கள் முன்னெடுப்பதற்கான ஆணையை எமது கட்சிக்கு மக்கள் தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.
தமிழ் மக்ககளின் உரிமைக்காக ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டோம், தற்போதைய காலகட்டத்தில் அகிம்சைவழியில் தமிழரின் உரிமைக்காக போராடுகின்ற சம்பந்தனை தலைவராக எற்றுக் கொண்டுள்ளோம் இதுதான் எமது வரலாறு என தெரிவித்தார்.
பாரம்பரிய இனமாகிய நாம் இன்னொரு இனத்திடம் தங்கி வாழ்கின்றோம்: அரியநேத்திரன்
Reviewed by NEWMANNAR
on
May 04, 2015
Rating:

No comments:
Post a Comment