மட்டு. ஆசிரியர் இடமாற்றம் 19ற்கு முரணானது: இலங்கை ஆசிரியர் சங்கம்
மட்டக்களப்பில் நடைபெற்ற நடமாடும் சேவையில் தேசிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்களை வழங்கியதன் மூலம் 19வது அரசியல் திருத்தச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் பகிரங்க சேவை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினால் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,“கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் சட்ட ஆட்சிக்கு முரணாகவும், தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாகவும் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் நேரடியாக சென்று முறையிட்டும் முதலமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக செயற்படுத்துவதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் இடமாற்றக் கடிதங்களை வழங்கியமையும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் இடமாற்றம் நடைபெறவில்லையென மறுப்பும் தெரிவித்துள்ளார்.
சகல நீதிக்கு புறம்பான இடமாற்றங்களும் இரத்துச் செய்யப்பட்டு மாகாணத்தின் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதோடு , மாகாண கல்வி அமைச்சர் சகல ஊடகங்கள் முன்னிலையிலும் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும்.
தேசிய இடமாற்றக் கொள்கையானது வெளிப்படைத் தன்மையாகவும் நம்பகத் தன்மையாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடைபெறுவதோடு, தாபன விதிக்கோவை மற்றும் அதிவிஷேட வர்த்தமானியின் பிரகடனங்கள் உறுதிப்படுத்தப்படுவதோடு, நாட்டின் புனிதமான அரசியலமைப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
19வது அரசியல் திருத்தச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் பகிரங்க சேவை மாகாண கல்விப் பணிப்பாளரினால் மீறப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சரின் அதிகாரம் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை மாகாண கல்விப் பணிப்பாளர் நேரடியாக முதலமைச்சரின் கீழ் செயற்படுவதை தெளிவுபடுத்தியுள்ளன.
நடமாடும் சேவை தொடர்பாக மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை மற்றும் வலயங்களுக்கு வெளிப்படைத் தன்மையாக எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் விசனமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மேற்கு வலயங்களிலிருந்து இடமாற்றங்கள் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சரினால் நடமாடும் சேவையில் சட்ட ஆட்சி மீறப்பட்டுள்ளமையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, மாகாண கல்வி அமைச்சரின் வயதான ஆலோசகர்களுக்கு பதிலாக துடிப்புள்ள இளம் கல்வியாளர்கள் மாகாணத்தில் கல்வியை உறுத்திப்படுத்த வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டு. ஆசிரியர் இடமாற்றம் 19ற்கு முரணானது: இலங்கை ஆசிரியர் சங்கம்
Reviewed by NEWMANNAR
on
May 18, 2015
Rating:

No comments:
Post a Comment