
ஹாலி-எல டிக்வலை தோட்டத்தொழிலாளர்கள் 18 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 14 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் டிக்வலை தோட்டத்தின் 3 பிரிவுகளிலும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தங்களது பின்வரும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டவேண்டும் என கோரியுள்ளனர்.
புதிதாக தொழிலாளர்களை பெயர் பதிவின் மூலம் உள்வாங்கல் நாளொன்றுக்கு 40சத வீத கொழுந்து பறிக்க அனுமதி வழங்கவேண்டும்.தோட்ட கங்காணிகள் கொழுந்து நிறுப்பதை தடை செய்ய வேண்டும். 3 நேரமும் பறிக்கும் கொழுந்தின் அளவை பதிவு புத்தகத்தில் பதிவு செய்து தொழிலாளர்களுக்கு அறியத்தர வேண்டும்.
தேயிலை தோட்டங்களையும் பாதைகளையும் உரிய முறையில் பராமரித்தல் காடுகளாகியுள்ள தேயிலை மலைகளை துப்பரவு செய்து கொழுந்து பறிக்க வழிசெய்தல் தோட்டத்தின் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேயிலைத்தூள் வழங்கப்படவேண்டும். நிறுத்தல் தராசுகளை முறையாக பராமரித்து பயன்படுத்த வேண்டும்.
டிக்வலை மேற்பிரிவு மக்களுக்காக 5வருடங்களுக்கு முன்னாக நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோக திட்டத்தை உடன் செயற்படுத்துதல்.தோட்ட வைத்தியசாலையின் செயற்பாட்டு திறனை அதிகரிக்க செய்ய வேண்டும்.
தோட்ட வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகன வசதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். மரண சகாய நிதியை அதிகரிக்க வேண்டும். அனார்த்த காலங்களில் பிற்பகல் 2 மணிக்கு தொழிலாளர்கள் வேலையை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் பிரச்சினைகளில் அசமந்தமாக செயற்பட்டு வரும் தோட்ட முகாமையாளரை உடன் இடமாற்றம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இப்போராட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசி சங்கம், இலங்கை தொழிலாளர் சமூக சங்கம் என்பவற்றை சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். டிக்வலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக நடைபெறும் இப்போராட்டத்திற்கு முதல் நாளில் எந்த தொழிற்சங்க பிரதிநிதிகளும் சமூகமளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment