அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரி-மகிந்த இணைந்து ரணிலை விரட்டும் விளையாட்டுக்கு நாம் உடன்பட முடியாது : மனோ


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தை ரணிலை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீலசுக பேச்சாளர் டிலன் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் இதுவென்றால் இதற்கு நாம் ஒருபோதும் உடன்பட முடியாதென தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மகிந்தவின் காலம் முடிந்து விட்டது.

அவர் இனி ஓய்வு பெற்று வீடு போக வேண்டும். மகிந்த இல்லாத ஸ்ரீ.ல.சு.க.வுடன் இணைந்து செயல்பட நாம் தயார். ஆனால், மகிந்த ராஜபக்ச உள்வாங்கப்படும் எந்த ஒரு ஏற்பாட்டுக்கும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் உடன்பட மாட்டார்கள். எனவே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் ஒருமுறை பிரதமராகவும் இரு முறை ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பும் பேச்சுவார்த்தையாகவே இருக்க வேண்டும் . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தங்களது கட்சி தலைவர் என்று உரிமை கொண்டாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒன்றை கூறி வைக்க விரும்புகிறேன்.

அவரை உங்கள் கட்சி தலைவராக நீங்கள் ஆக்க முன், நாங்கள் அவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கிவிட்டோம். நாம் அவரை ஜனாதிபதியாக ஆக்கிய பின்னரே நீங்கள் வேறு வழியில்லாமல் அவரை உங்கள் கட்சித் தலைவர் ஆக்கியுள்ளீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். நாங்கள் பல்லாண்டுகளாக போராடி மகிந்தவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றினோம். அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் குறுக்கு வழியில் உள்ளே கொண்டு வர நாம் இடந்தர முடியாது.

நாங்கள் இந்த அரசாங்கத்தில் இடை நடுவில் வந்து குடி புகுந்தவர்கள் அல்ல. துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில், வெள்ளை வேன்களுக்கு மத்தியில், கல்லடிகளுக்கு மத்தியில், சொல்லடிகளுக்கு மத்தியில், பதவி வரப்பிரசாதங்களை நிராகரித்துவிட்டு பல்லாண்டுகளாக போராடி வெற்றி கண்டவன் நான். பதவிகளுக்காக சோரம்போனவன் நான் அல்ல. எனவே இதை சொல்வதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. இந்த நாட்டிலே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மகிந்த ராஜபக்ச இழைத்த சொல்லொணா கொடுமைகளை நாம் மறக்கவில்லை.

 மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க நாம் கடுமையாக உழைத்தோம். இது ஜனாதிபதிக்கு தெரியும். எனவே மைத்திரி-மகிந்த பேச்சுவார்த்தையை வெறுமனே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற கட்சி மட்ட பேச்சுவார்த்தை என நாம் கருதிவிட முடியாது. இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்விவகாரம் என்றும் நாம் சும்மா இருக்க முடியாது. வாக்களித்த எங்கள் மக்களுக்கு நாம் பதில் சொல்ல கடமைபட்டுள்ளோம். இதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்து கொண்டுள்ளார் என நாம் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மைத்திரி-மகிந்த இணைந்து ரணிலை விரட்டும் விளையாட்டுக்கு நாம் உடன்பட முடியாது : மனோ Reviewed by Author on May 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.