வெளியேறியது ராஜஸ்தான் ரோயல்ஸ் : சென்னையுடன் நாளை மோதுகிறது பெங்களூர்
எட்டாவது ஐ.பி.எல். வெளியேற்றப் பிரிவு போட்டி புனேவில் நேற்று நடந்தது. இந்தப்போட்டியில் ராஜஸ்தான் அணி 71 ஓட்டங்களால் பெங்களூரிடம் வீழ்ந்து நடப்பு ஐ.பி.எல். இல் இருந்து வெளியேறியது. வெற்றிபெற்ற கோலி தலைமையிலான பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கான போட்டியில் நாளை சென்னையை எதிர்கொள்கிறது.
நேற்று இரவு 8 மணிக்கு ஆரம்பமான இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணித் தலைவர் கோலி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதன்படி அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் கெய்ல், கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கெய்ல் அதிரடியாக விளையாடுவதற்கு வசதியாக கோஹ்லி சற்று நிதானமாக ஆடினார். ஆனால் கெய்லால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் அவர் 26 பந்தில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் விளையாடிய கோஹ்லி 18 பந்துகளில் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் குல்கர்னி வீழ்த்தினார். அப்போது பெங்களூர் அணி 7.3 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்துக்கொண்டிருந்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ்- மந்தீப் சிங் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. பின்னர் அதிரடி காட்டினர். 10-ஆவது ஓவரில் 13 ஓட்டங்கள் எடுத்த இந்த ஜோடி 12ஆவது ஓவரில் 12 ஓட்டங்களை எடுத்தது. 15ஆ-வது ஓவரில் டி வில்லியர்ஸ் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் பெங்களூர் அணிக்கு 19 ஓட்டங்கள் கிடைத்தன.
அதன்பின் ஒரு ஓவருக்கு சராசரியாக 10 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தனர். மோரிஸ் வீசிய 18ஆ-வது ஓவரில் டி வில்லியர்ஸ் இரண்டு இமாலய சிக்ஸர் விளாசினார். 19-ஆவது ஓவரில் டி வில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் விலாசினார். அந்த ஓவரிலேயே மந்தீப் சிங் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை கடந்தார்.
கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுக்க பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைக் குவித்தது. மந்தீப் சர்மா 34 பந்தில் 7 பவுண்டரிஇ இரண்டு சிக்ஸருடன் 54 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துஇ 71 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
ராஜஸ்தான் அணியின் ரஹானே 42 ஓட்டங்களையும் வொட்சன் 10, ஸ்மித் 12, நாயர் 12, ஹுடா 11 ஓட்டங்கள் வீதம் பெற்றுக்கொண்டது. ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். இரண்டு வீரர்கள் ஓட்டமேதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.
இந்த தோல்வியோடு ராஜஸ்தான் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறுகிறது. ஏற்கனேவே மும்பை அணியிடம் தோல்வியுற்ற சென்னை அணியுடன் பெங்களூர் அணி மோதவுள்ளது. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் மும்பையுடன் சம்பியன் பட்டத்திற்காக மோதும்.
வெளியேறியது ராஜஸ்தான் ரோயல்ஸ் : சென்னையுடன் நாளை மோதுகிறது பெங்களூர்
Reviewed by Author
on
May 21, 2015
Rating:
Reviewed by Author
on
May 21, 2015
Rating:

No comments:
Post a Comment