சல்மான்கான் குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு
கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அதிகாலை அதிவேகமாக சென்ற சல்மான்கானின் கார் நிலைதடுமாறி வீதியோரத்தில் இருந்த வெதுப்பகம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது. இதன்போது, வீதியோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். குறித்த காரை சல்மான்கான் ஓட்டியதாகவும் அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதன்பின்னர், இது தொடர்பாக சல்மான் கானுக்கு எதிராக மும்பை போக்குவரத்து பிரிவு பொலிஸார், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பல வருடகாலமான நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்த 2013ஆம் ஆண்டு சல்மான்கான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சல்மான்கான் மது போதையில் வேகமாக கார் ஓட்டியனாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. எனினும் தான் குடித்துவிட்டு காரை செலுத்தவில்லை என்றும் தனது கார் ஓட்டுனர்தான் காரை செலுத்தினார் என்றும் சல்மான்கான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் காரின் முன்பக்க டயர் திடீர் என்று வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் அவரது சட்டதரணி வாதிட்டார். ஆனால் பொலிஸ் தரப்பில், டயர் வெடிக்கவில்லை என்று தெரிவித்து, டயர் சேதம் அடையாமல் பாரம்தூக்கி மூலம் கார் மீட்கப்பட்டதற்கான ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கிய காட்சியாக சல்மான்கானின் பாதுகாப்பு அதிகாரி சேர்க்கப்பட்டு இருந்தார். மேலும் பொது மக்கள் 27 பேரும் சாட்சியம் அளித்தனர். இது பாதுகாப்பு அதிகாரி ரவீந்திர பாட்டீல் கூறுகையில், சல்மான் கானுக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவார். இது குறித்து அவரை பலமுறை எச்சரித்ததாகவும் தெரிவித்தார். சம்பவதினத்தன்று சல்மான்கான் தன்னை சந்தித்தபோது மதுபோதையில் இருந்தார் என்றும் சாட்சியம் அளித்து இருந்தார். பாதுகாப்பு அதிகாரி ரவீந்திர பாட்டீல் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டார். என்றாலும் அவரது சாட்சியம் வழக்கில் சேர்க்கப்பட்டது. 13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் சட்டதரணிகளின் வாதம் முடிந்து இன்று (06) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தேஷ்பாண்டே அறிவித்தார். இதையடுத்து இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் பார்வையாளர்கள், ரசிகர்கள் குவிந்தனர். ஏராளமான சட்டதரணிகளும் வந்திருந்திருந்தனர். நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சரியாக காலை 11.15 மணிக்கு நீதிபதி தேஷ் பாண்டே தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அப்போது சல்மான்கான் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கார் செலுத்தியது அவர்தான் என்று தெரிவித்த நீதிபதி அவர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறினார். அவருக்கான தண்டனை விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சல்மான்கான் குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு
Reviewed by Author
on
May 06, 2015
Rating:
Reviewed by Author
on
May 06, 2015
Rating:


No comments:
Post a Comment