வித்தியாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்- மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம்.
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட சிவலோகநாதன் வித்தியா(வயது-18) என்ற மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திக் கொலை செய்த சம்பவத்தை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு மிகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து நிற்கின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
இச்சம்பவத்தைப்புரிந்த நபர்;களுக்கு அதிக பட்ச தண்டனையைப் துரிதமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதித்துறை சட்டத்துறை என்பன உறுதிப்படுத்திக் கொள்வதுடன், மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படல் காலத்தின் அத்தியவசியமென எடுத்துரைப்பதுடன், பெண்களின் நடமாட்டத்திற்கும், சுதந்திரத்திற்கும், கௌரவத்திற்கும் தடையாகவுள்ள அனைத்து வன்முறைகளையும் இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இக்காலகட்டத்தில் இந்த வெறிச்செயலினை அனைவரும் கேள்வி கேட்கப்படல் வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாங்குளத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி சரண்யா கூட்டு வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இறந்து இரண்டு மாத இடைவெளிக்குள் வித்தியாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
சரண்யாவின் இறப்புக்கு காரணமானவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தாத காரணத்தினால், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும் இலங்கையில் மட்டும் 2012- 2014 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 4393 பெண்கள், சிறுமிகளுக்கெதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தனிப்பட்ட நபரது பிரச்சினையல்ல. இந்நாட்டின், சமூகத்தின், பிரச்சினையாக கருத்திற்கொண்டு, அனைவரும் பொறுப்புக்;கூறப்படல் வேண்டும்.
அண்மைக்காலமாக நாடாளவிய ரீதியில் சிறுவர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சிகள், துஸ்பிரயோகங்கள் மிக மோசமான நிலையில், எவ்விதமான சமூக அக்கறையுமில்லாத நபர்களால் வெறித்தனமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அது அதிகரித்த நிலையும் தொடர்கின்றது. இந்நிலை மிகப்பெரிய சமூகப்பின்னடைவைத் தோற்றுவிக்கின்றது.
எமது நாட்டில் இறுக்கமான சட்டங்கள் இருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் துறைசார்ந்த கட்டமைப்பானது சமூகப்பொறுப்புடன் செயற்படாத காரணத்தால் பாலியல் வன்புணர்ச்சி, துஸ்பிரயோகம் மற்றும் கொலைச்சம்பவங்களில் ஈடுபடுவோர் தண்டணைகளிலிருந்து தப்பி சுதந்திரமாக நடமாடுகின்றனர். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாவண்ணம் நாடளாவிய ரீதியில் எதிர்த்துப்போராட அனைவரும் ஒன்றிணைவோம்.
எனவே வித்தியாவின் வழக்கில் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
1. வழக்கை துரிதப்படுத்தல்.
2. குற்றவாளிகளுக்கு பிணைவழங்கல் மற்றும் வழக்கறிஞர் ஆஜராதலை தவிர்க்கப்படல்.
3. இதுவரை காலம் வழங்காத, இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதற்கு மிகவும் அஞ்சும் வகையில் தீர்ப்பு அமைதல் .
4. இதுவரை காலமும் தேங்கியிருக்கும் பெண்களுக்கு, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச்சம்பவ வழக்குகளை மேலும் துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைகளை வழங்கல் வேண்டும். என மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வித்தியாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்- மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம்.
Reviewed by NEWMANNAR
on
May 18, 2015
Rating:

No comments:
Post a Comment