
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதியாகவுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சினைகளால் அவதியுற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் கடந்த 23 வருடங்களாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பேரறிவாளன் சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளினால் அல்லலுற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர்.
வேலூர் சிறைச்சாலையிலுள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்துள்ளார்.
பேரறிவாளன் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வருகிறான், அவனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்,
சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை எனும் காரணத்தினால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் பேரறிவாளன் மனு அளித்து உள்ளதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேரறிவாளன் விரைவில் குணமடைவான் என அவரது தாயார் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment