பொலிஸார் ஒரு பக்க சார்பாக செயற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது-செல்வம்,வினோ எம்.பிகள் கூட்டாக அறிக்கை.
முல்லைத்தீவு,கொக்குளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பௌத்த துறவியின் ஆசீர்வாதத்துடன் அமைக்கப்படும் பௌத்த விகாரைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்தக்கோரி மேற்கொள்ளப்பட்ட கண்டன அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,,
ஏற்கனவே குறித்த காணி தொடர்பான விவகாரம் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கும் நிலையில் அதை மீறியும் பாதுகாப்பு தரப்பினரின் முழு ஆதரவுடனேயே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இவ் உண்ணாவிரதம் முறையான முன் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பொலிஸார் ஒரு பக்க சார்பாக செயற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதையும் மீறி விகாரை கட்டும் பௌத்த பிக்குவையோ, ஆதரவும், பாதுகாப்பும் வழங்கும் பாதுகாப்பு படையினரையோ கைது செய்யாமல் அப்பாவி காணி உரிமையாளர்களை கைது செய்வது எப்படி நீதியும், நியாயமுமாகும்.
கடந்த காலங்களில் எமது தலைவர்களின் அஹிம்சைப் போராட்டங்கள் தடுக்கப்பட்டு, அடக்கப்பட்டதன் விளைவுகள் 30 வருட ஆயுத போராட்டத்துக்கு வழி அமைத்துக்கொடுத்த வரலாறு மறக்கக்கூடியதல்ல.
அமைதி வழியில் கண்டனத்தை தெரிவிப்பதை அரசு நிராகரித்தால் விளைவுகள் மோசமானதாகவே அமையும்.
கடந்த கால அரசுகள் விட்ட தவறுகள் புதிய அரசாங்கத்தாலும் தொடரப்படுமிடத்து தமிழ் மக்களின் போராட்டங்களிலும் மாற்றங்களுக்கு வாய்ப்பையே உருவாக்கும்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் ஒரு பக்க சார்பாக செயற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது-செல்வம்,வினோ எம்.பிகள் கூட்டாக அறிக்கை.
Reviewed by NEWMANNAR
on
June 06, 2015
Rating:

No comments:
Post a Comment