யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற உதைப்பாந்தாட்ட போட்டியின் போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மன்னார் மாவட்ட அணி வீரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடக்கு மாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.06.2015) யாழ்ப்பாணத்தில் மன்னார் மாவட்ட அணிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அணிக்குமிடையே நடைபெற்றது.
இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்களைப்போட்டு போட்டி சமநிலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற யாழ்ப்பாண மாவட்ட இரசிகர்கள் ஆயிரக்கணக்கில் மைதானத்துள் அத்து மீறி நுழைந்து மன்னார் மாவட்ட வீரர்களை பலவாறு தாக்கியுள்ளனர்.
இது விளையாட்டின் பண்புக்கு முரணானதும் மிக கேவலமானதுமாகும். இச் செயற்பாடானது ஏற்கமுடியாத ஒன்றாக கருதப்படுவதுடன் கண்டிக்கப்படவேண்டியதொன்றுமாகும்.
அத்துடன் யாழ் மாவட்டம் விளையாடிய போது யாழ் மாவட்ட நடுவர்களை கடமையாற்ற ஏற்பாட்டாளர்கள் அனுமதித்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணியும் யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட அணியும் வடமாகாணத்தில் பலம் வாய்ந்த அணிகளாகும்.
இரு அணி வீரர்களும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் நடந்து கொள்ள மன்னார் மாவட்டத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கப்போகின்றது என உணர்ந்த யாழ் மாவட்ட இரசிகர்கள் இந்த கேவலமான செயலை செய்துள்ளனர்.
இவ்வாறே 2012ம் ஆண்டும் இறுதிப்போட்டியில் மன்னார் மாவட்ட அணியை இறுதிப்போட்டியில் யாழ் மாவட்ட இரசிகர்கள் இதே போல் தாக்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2014ம் ஆண்டில் மன்னாரில் இப்போட்டி நடைபெற்ற போது யாழ் மாவட்ட அணியை மன்னார் இரசிகர்கள் கௌரவமாகவும் சந்தோசமாகவும் அனுப்பிவைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து யாழ் மாவட்ட இரசிகர்களின் செயற்பாடுகளுக்கு வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சானது எடுக்கவிருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் மன்னார் சமூகம் கண்காணிப்புடனும் அவதானிப்புடனும் காத்திருக்கிறது.
அத்துடன் உதைபந்தாட்டத்தில் நடைபெறும் இம்மோசமானதும் அநாகரிகமானதுமான இச்செயற்பாட்டை மன்னார் உதைபந்தாட்ட லீக்கானது வன்மையாக கண்டிப்பதுடன் இத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் நடைபெற்ற செயற்பாட்டிற்கு உரிய நடவடிக்கையை சம்மந்தப்பட்டவர்கள் எடுக்கவேண்டும் எனவும் கோரி நிற்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது.
Reviewed by NEWMANNAR
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment