தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று இரவு அலரி மாளிகையில் இடம் பெற்றது.
தமுகூ தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர், ஐதேக தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருடன் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
பிரதமரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பிரதமருடன் ஐதேக பொது செயலாளர் கபீர் ஹஷிம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற தவிசாளர் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேர்தல்முறை மாற்றம், 20ம் திருத்த ஷரத்துகள், பாராளுமன்ற கலைப்பு, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் தமது கூட்டணியின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமருக்கு தெளிவாக தெரிவித்தபோது, 20ம் திருத்தம் பாராளுமன்றத்தில் சட்டமாகும் சூழல் இப்போது இல்லை என்பதால் தாம் ஜனாதிபதியிடம் பாராளுமன்றத்தை கலைக்கும் படி கோரியுள்ளதாக பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாக மனோ கணேசன் கூறினார்.
பாராளுமன்றத்தில் தனக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அதற்கு முன்னர் இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்கவும், அதை தொடர்ந்து புதிய தேர்தலை நடத்தி, புதிய பாராளுமன்றத்தை உருவாக்கவும் ஜனாதிபதி தம்மிடம் உடன்பட்டுள்ளார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என மனோ கணேசன் மேலும் கூறினார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் தேர்தல் உடன்பாடு காணும் சாத்தியப்பாடுகள் தொடர்பான பேச்சுகளை தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்முறை மாற்றம், பாராளுமன்ற கலைப்பு, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக நாளை புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமது கூட்டணி சந்திக்க உள்ளதாகவும் மனோ கணேசன் தொடர்ந்து கூறினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தை
Reviewed by Author
on
June 16, 2015
Rating:
Reviewed by Author
on
June 16, 2015
Rating:

No comments:
Post a Comment